- வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் மிகுதியாக இருக்கும்.
- அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள்.
மூலம் நட்சத்திரம் கால புருஷ 9-ம் ராசியான தனுசு வீட்டில் அமைந்துள்ளது. ராசி சக்கரத்தின் 19வது நட்சத்திரமாகும். இந்த ராசியின் அதிபதி குரு. இது ஞானத்தை வழங்கும் கேதுவின் நட்சத்திரமாகும். இதன் வடிவம் அங்குசம், சிங்கத்தின் வால், யானையின் துதிக்கை போல் இருக்கும். இந்த நட்சத்திரம் குருத்து போல் இருப்பதால் இதன் தமிழ் பெயர் குருது. இதன் இருப்பிடம் குதிரை லாயம். அதிதேவதை அசுர தேவதைகள். இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர்.
மூலம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை, ஆர்வம், அறிவு தெளிவு உண்டு. அடக்கம், அன்பு செலுத்துதல், புகழ் விரும்பாமை, பேராசையற்ற மனப்போக்கு ஆகிய குணங்கள் காணப்படும். மிகவும் சாமானிய சூழ்நிலையில் இருந்து ஏராளமான இடையூறுகளை சமாளித்து நிலையாக முன்னேறுவார்கள். உழைக்கலாம் ஆனால் உழைப்பே வாழ்க்கையாக இருக்க கூடாது என்ற எண்ணம் உடையவர்கள். இரவில் வேலை செய்து பகலில் உறங்குவார்கள்.
கிடைத்த வேலையைச் செய்து இருப்பதை உண்டு படுத்த இடத்தில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதே நேரத்தில் நேர்மை, நியாயம் நிறைந்தவர்கள்.
தான் வாழ பிறரை கெடுக்க விரும்பாதவர்கள். அமானுஷ்ய சக்தி நிறைந்தவர்கள். உள்ளுணர்வால் அனைவரின் எதிர்கால பலனையும் கூறுவார்கள். இவரைச் சூழ்ந்து 10 பேர் இருப்பார்கள். அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம், பொது ஜன ஆதரவு உண்டு. அதில் நன்கு பிரகாசிப்பார்கள். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள். கேது வலை கிரகம் என்பதால் எளிதில் இவர்கள் காதல் வலையில் சிக்க கூடியவர்கள்.
வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் மிகுதியாக இருக்கும். இவர்களுக்கு குடும்ப வாழ்கையில் நிம்மதி இருக்காது . மேலும் குடும்ப வாழ்க்கை சுகம் தராது. ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் " என்றும் மூலம் மாமனாருக்கு ஆகாது என்றும் மூல நட்சத்திரப் பெண்ணை மாமனார் இல்லாத வீட்டில் தான் மணமுடிக்க வேண்டும் என்றும் மூலம் நட்சத்திரம் பற்றிய பல விமர்சனங்கள் உள்ளது. அது மட்டுமா? இது போன்ற நட்சத்திர தோஷம் ஆண்களுக்கு இல்லை என்ற போதிலும் சமீப காலமாக மூல நட்சத்திர ஆண்களும் பாதிக்கப்படவே செய்கிறார்கள். பல பெற்றோர்கள் இதை விடாப்பிடியாக பிடித்துத் கொண்டு தமது பிள்ளைகளின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார்கள். இந்த பழமொழியை ஆதாரமாக வைத்து பலர் மூல நட்சத்திரப் பெண்களை திருமணம் செய்ய பயப்படுகிறார்கள். மூலத்துப் பெண்ணால் மாமனாருக்கு கண்டம் ஏற்படும் என்ற நம்பிக்கை சமூகத்தில் ஆழமாக பதிந்துள்ளது.
உண்மையில் மூல நட்சத்திரம் தோஷமா? இல்லையா? மூலத்துப் பெண் மாமனாருக்கு ஆகாது என்றும் இல்லை ஒன்றும் செய்யாது என்றும் பொதுவாகச் சொல்வதை விடுத்து இதில் உள்ள கருத்தை மற்றொரு கட்டுரையில் ஆய்வு செய்யலாம்.
கல்வி
மிக இளம் வயதிலேயே சுக்ர தசா வந்து விடுவதால் பலருக்கு கல்வியில் தடை அல்லது கல்வியில் நாட்டம் குறைவாக இருக்கும்.
சட்டம், நிதித்துறை, நீதித் துறை, கல்வித்துறை, ஆசிரியர், பொருளாதாரம், அறிவியல் சார்ந்த அனைத்து துறை படிப்புகளையும் படிக்கலாம்.
தொழில்
சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். ஆனால் மற்றவர்களிடம் வேலை செய்யும் அமைப்பே உண்டாகும். முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள். அதனால் முதலாளிகளால் மிக விரும்பப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் இவர்கள் அடிக்கடி வேலையை மாற்றும் இயல்பினர். சம்பள உயர்வே இவர்களது நோக்கம். இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். வாக்கு சொல்லுதல், குறி சொல்லுதல், மத போதனை செய்தல், சமூக சீர்திருத்தம் செய்தல் போன்ற பணியில் தமக்கென்று தனி முத்திரை பதிக்கிறார்கள். அறிவைத் தூண்டும் தொழில்களான ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள், மத போதகர், அர்ச்சகர், தத்துவ மேதைகள், மந்திரி, கவுரவமான தொழில், நீதிபதிகள், அரசு துறை, நீதித்துறை, வங்கி அதிகாரிகள், ஆலோசகர் பதவி, எழுத்துத் துறை ஜோதிடம், பேச்சுத் தொழில், தரகர்களாகவும், கமிஷன் முகவர்களாகவும், டிராவல்ஸ், ஏஜெண்டுகள், நுண்ணிய சாஸ்திர ஆராய்ச்சி யாளர்கள், தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த்தலைமை, போன்றவற்றில் கவுரவப் பதவி வகிப்பார்கள். அரசியல் ஈடுபாடும் உண்டு.
தனம், வாக்கு,குடும்ப ஸ்தானம்
ஆரம்ப கால வாழ்க்கை வறுமையாகவும் 50 வயதுக்கு மேல் திடீர் தனலாபமும் அடைவார்கள். திருமண வாழ்க்கையில் உண்மையான அன்பை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைகிறார்கள்.
திருமணத்திற்கு வரன் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நடந்த பிறகு குடும்ப பிரச்சனைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்து விடும்.
இந்த அமைப்பு பல கணவன், மனைவியை விரோதியாகவே வாழ வைக்கிறது. பலர் சுக்கிரனின் பலவீனத்தால் வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். சிலருக்கு எத்தனை திருமணம் செய்தாலும் திருமணத்தில் நிம்மதி இல்லாத நிலை. சிலருக்கு முதல் திருமணம் மாறுபட்டதாக அமைந்தாலும், இரண்டாவது திருமணம் நல்ல நிம்மதியைத் தருகிறது.
தசா பலன்கள்
கேது தசா: ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 7 ஆண்டுகள். தாய், தந்தை மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை, குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும்.
அல்லது தொழில் நடத்தும் போது தொழிலில் எட்ட முடியாத பிரமாண்ட வளர்ச்சியை கொடுத்து மீளமுடியாத திடீர் வீழ்ச்சி, இழப்பையும் தரும்.
இவர்கள் சரியான பெயரை அமைத்து கொள்ள வேண்டும்.
சுக்ரதசா: இது தன தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 20 ஆண்டுகள். இளம் பருவத்தில் நன்றாக படிக்காமல் தவறான நட்பால் வாழ்க்கையை இழக்கிறார்கள். திருமணம் ஆன சிலர் ஏன் திருமணம் நடந்தது என்று வருந்தும் வகையில் தான் வாழ்க்கை இருக்கும். கருத்து வேறுபாடு மற்றும் கடும் பகையாகி நீதி மன்ற படி ஏறியவர்களே அதிகம். வெகு சிலர் குடும்பம், குழந்தைகள், மானம், மரியாதைக்கு அஞ்சி அனுசரித்து வாழ்கிறார்கள்.
வெகு சில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடு இன்றி தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும் பகுதியில் பிரிந்தே வாழ்கிறார்கள். அதனால் தான் ஆன்மீக எண்ணத்தை கொடுக்கும் கேதுதிசை முன்னால் வந்து, ஆடம்பரத்தை கொடுக்கும் சுக்கிரதசை பின்னால் வருகிறது.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை வாழ்வு நிலையற்றது. ஆனால் வாழும் வாழ்க்கை அர்த்தம் உள்ளது என்ற வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்தவர்கள் வாழ்க்கையில் உயர்வானதை அடைகிறார்கள்.
சூரிய தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 6 ஆண்டுகள்.
இந்த காலகட்டத்தில் சிலர் விவாகரத்து வழக்கை சந்திப்பார்கள் ஞானத்தால் ஒருவர் ஈர்க்கப்பட்டால் மனம் சலனப்படாது. சிற்றின்பம், பேரின்பத்தை முழுமையாக உணர வைப்பது சூரிய தசா. சிலரின் வாழ்க்கை கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. வெகு சிலருக்கு காலதாமதமாக பலன் கிடைக்கிறது. மனப் பக்குவம் கிடைத்த பிறகு ஆடம்பரமான வாழ்க்கை கிடைத்தாலும், அமைதியாக மனம் அதைக் கடந்து செல்லும்.
சந்திரா தசா: இது நான்காவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். மத்திம வயதில் பெயரும் புகழும் அமைதியும் கிடைக்கும்.
கடின உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்ற வற்றை கற்றுக் கொள்வார்கள். இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுத்தரும் தசாவாகும். வீடு, வாகன யோகம் உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். வாழ்நாள் முழுவதற்கும் தேவையானவற்றை சம்பாதிக்கும் வாய்ப்புகள் உருவாகும். உபதொழில் செய்து வருமானத்தை பெருக்குவதில் நாட்டமாக இருப்பார்கள்.
ஐம்புலன்களுக்கும் எட்டாத அரிய செயல்களையும் இயற்கையிலேயே உள்ளுணர்வாக அறிவார்கள்.
செவ்வாய் தசா: இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக்தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டு 7 வருடங்களாகும். அனைத்து செயல்களையும் அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு நிறைந்தவர்கள். கண் பாதிப்பு, இருதயக் கோளாறு , எலும்பு தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். இவர்களுக்கு அரசாங்கத்தாலும் தந்தையாலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
ராகு தசா: இது ஆறாவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 18 ஆண்டுகள். உயர்ந்த லட்சியம், மேன்மையான சுபாவம், ஆன்மீக எண்ணங்கள் போன்ற உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். வயோதிகம் காரணமாக அமைதி, ஆன்மீகம் நோக்கி காலத்தை கடத்துவார்கள்.
குரு தசா: இது ஏழாவதாக வரக் கூடிய வகை தாரையின் தசாவாகும். வயோதிகம் மற்றும் உடல் நலக் குறைவால் அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுக்க முடியாது.
மூலம் நட்சத்திரத்தின் சிறப்புகள்
இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது என்பதால் தியானம் செய்ய, தீட்சை பெற மந்திர உபதேசம் பெற உகுந்ததாகும். மூல நட்சத்திரம் காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு ஒன்பதாம் வீடான தனுசில் அமைந்துள்ளதால் ஆலய திருப்பணி குரு உபதேசம் செய்ய, கீர்த்த யாத்திரை, ஆலயப் பணி துவங்க, குரு உபதேசம் பெற உகந்ததாகும். கேது கயிறைக் குறிக்கும் என்பதால் தாலிக் கயிறு வாங்கவும் விவாகத்திற்கும் உகந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் வடிவம் துதிக்கை போன்று மிருகங்களுடைய அமைப்பில் உள்ளதால் ஆடு மாடுகள் வாங்கலாம்.
நட்சத்திர பட்சி: செம்பருந்து
யோகம்: பரிகம்
நவரத்தினம்: வைடூரியம்
உடல் உறுப்பு: இடது விலாப்புறம்
திசை: வட மேற்கு
பஞ்சபூதம்: காற்று
அதிதேவதை: அசுர தேவதைகள்
நட்சத்திர மிருகம்: பெண் நாய்
நட்சத்திர வடிவம்: யானையின் துதிக்கை
சம்பத்து தாரை: பூராடம், பரணி, பூரம்
சேம தாரை: திருவோணம், ரோகிணி, அஸ்தம்
சாதக தாரை: சதயம், திருவாதிரை, சுவாதி
பரம மிக்ர தாரை: ரேவதி, ஆயில்யம், .கேட்டை
பரிகாரம்
இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள அகத்தியர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தடைகளும் நீங்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
தனது சாதக தாரையான சதயம் நட்சத்திர நாளில் தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுத தீவினைகள் நெருங்காது. தினமும் ஸ்ரீ ராமரை வழிபடுவதும், விலங்குகளுக்கு உணவிடுவதாலும் அதீத நன்மைகளை பெறமுடியும்.
செல்: 98652 20406