- எல்லா ஞானிகளும் எப்படி ஞானம் அடைந்தார்கள் என்பதும் இப்போது தான் புரிந்தது.
- ஆன்மிக அனுபவங்களோடு ஆறு வருடங்கள் போராடிப் பார்த்தார்.
ஆனந்தப் பரவச நிலையில் ஆண்டு முழுவதும் இருந்து விட்டேன்.
முதல் ஆறு மாதங்களின் முடிவில் சில பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தன. வயிற்றுப் பசி என்பது சுத்தமாக இல்லாது போய்விட்டது. சுகவீனம் அடைந்து விட்டது போன்ற ஏதோ ஒரு வித உணர்வு ஆட்கொண்டுவிட்டது.
என்ன காரணம் என்று விளங்கவில்லை. மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தால் அனைத்தும் சரியாகவே இருந்தது.
நாட்கள் ஆக ஆக உடல் நலம் சரியில்லை என்ற உணர்வுதான் அதிகரித்துக் கொண்டிருந்தது.
ஹீலர் ஒருவரை சந்தித்து ஆலோசனை கேட்டேன். பரிசோதித்துப் பார்த்த அவர்,
"உங்கள் உடல் முழுவதும் சக்தி உணர்ச்சி குவிந்து கிடக்கின்றது" என்று கூறினார்.
அது அவர் சொல்லாமலேயே எனக்கும் தெரிந்தது.
எனது உடல் உபாதைகள் அனைத்துக்கும் காரணம் எனது ஆனந்தப் பரவச நிலை தான் என்பதைக் கண்டு பிடிக்க முடிந்தது.
அந்த ஆனந்தப் பரவச நிலையிலிருந்து விடுபட்டாலொளிய உடல்நலம் சீராகாது எனத் தோன்றியது.
வேறு வழி எதுவும் தெரியவில்லை. முப்பது ஆண்டுகள் அரும்பாடு பட்டு உருவாக்கிய ஆனந்தப் பரவச நிலையைக் கைவிட்டாக வேண்டும்.
உடல்நலத்தைப் பாதுகாக்க அது ஒன்றேதான் வழி என்ற நிலையில். அந்த ஆனந்தப் பரவச நிலையை என்னைவிட்டு ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தேன்.
அதனை எவ்வளவு தான் ஒதுக்கித் தள்ளினாலும், அது மீண்டும் மீண்டும் என்னையே வந்து சேர்ந்து கொள்ளும். தொடர்ந்து அதனோடு போராடி, எப்படியோ அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.
அப்படி விடுபடுவதற்குக் கூட ஒரு மாத கால முயற்சி தேவைப்பட்டுவிட்டது.
ஒரு வழியாக ஆனந்தப் பரவச நிலையை விட்டு வெளியே வந்து தரையிறங்கிவிட்டேன்.
அதன்பிறகு உடல்நலம் சிறுகச் சிறுக சீராகி விட்டது. ஆனால் மனம்?
போர் வீரர்கள் இரும்புக் கவசத்தை அணிந்திருப்பார்கள். ஈட்டியால் குத்தினாலும் சரி, வாளினால் வெட்டினாலும் சரி, அவர்களுக்கு எதுவுமே ஆகாது. அந்த ஈட்டியும், வாளும்தான் உடைந்து போகும்.
அது போல் நான் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்திலிருந்தும் எனது ஆனந்தப் பரவச நிலைதான் என்னைக் காத்து நின்றது. இப்போது அந்தப் பரவச நிலை என்னிடம் இல்லை.
இப்போது, ஈட்டியைக் கண்டும், வாளைக்கண்டும் பயப்படாத நான், ஒரு குண்டூசியைக் கண்டும் பயப்பட ஆரம்பித்து விட்டேன். அற்பமான பிரச்சனை கூட, மலையளவு பெரிதாகத் தோன்றி என்னை பயமுறுத்தின.
என்னைக் காப்பாற்றிக் கொள்ள நான் என்ன செய்வது?
தியானம் செய்து மீண்டும் ஆன்மிக அனுபவங்களைப் பெறவேண்டுமா அல்லது வேறு என்ன செய்ய வேண்டும்?
குழப்பம், குழப்பம், முடிவில்லாத குழப்பமாக இருந்தது.
எனது நாற்பத்து ஏழாவது வயதில் ஏற்பட்ட ஆனந்தப் பரவச நிலை நாற்பத்து எட்டாவது வயது வரை நீடித்தது.
நாற்பத்து எட்டாவது வயதிலிருந்து ஐம்பத்து எட்டாவது வயது வரை பத்து வருடகாலமாக ஒரே குழப்பம் தான்.
எனது ஐம்பத்து எட்டாவது வயதில் ஒரு நாள். கொசுக்கடி போன்ற ஓர் அற்பமான பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தப் பிரச்சனை என்னைத் தாக்கியதால் எனது மன நிம்மதி பாதிக்கப்பட்டது.
"மனதையும் நிம்மதியாக வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனந்தப் பரவச நிலைக்கும் போகமுடியவில்லை. எதுவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு எந்த நிம்மதியும் வேண்டாம். எனக்கு எதுவுமே வேண்டாம்" - என்று எனக்கு நானே ஒரு முடிவுக்கு வந்தேன்.
இது வரை என் மனதை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வைத்துக் கொள்ள ஏதேதோ பயிற்சி முயற்சிகளை மேற்கொண்டு வந்தேன். இப்போது என் மனதை அப்படியே விட்டு விட்டேன். "நீ எப்படி செயல்பட்டாலும் சரிதான். பயமா, வருத்தமா, எது வேண்டு மானாலும் வரட்டும். என்ன வேண்டுமானாலும் வரட்டும். நீ எப்படி செயல்பட்டாலும் சரிதான்" என்று என்னுடைய மனதை அப்படியே அதன் போக்கிலேயே விட்டு விட்டேன்.
இந்த நிலையில் நான் என்னுடைய மனதை, - 'இது இப்படி இப்படி செயல்பட வேண்டும்; இப்படி இப்படி செயல்படக் கூடாது' - என்று அதனை நெறிப்படுத்திக் கொண்டிருப்பேனா?
அதனை அப்படியே விட்டு விட்டேன்.
மனதை அப்படியே விட்டு விட்டால் என்ன ஆகும்?
அது, அதுபோக்கில் இயங்க ஆரம்பித்தது. என்னுடைய குறுக்கீடு எதுவும் இல்லாமல் சுயமாக இயங்க ஆரம்பித்தது. என்னுடைய மனதுக்குள், என்னை அறியாமல் இப்படி ஓர் இயக்கமும் இயங்கிக் கொண்டிருந் திருக்கிறது என்பதை அன்றுதான் கண்டு பிடித்தேன். இப்போதுதான் தெரிந்து கொண்டேன் ஞானம் என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன என்பதை.
எல்லா ஞானிகளும் எப்படி ஞானம் அடைந்தார்கள் என்பதும் இப்போது தான் புரிந்தது.
ஆன்மிக உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய புத்தரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். புத்தர் எவ்வாறு ஞானம் அடைந்தார்?
அவர் ஓர் இளவரசர். அரச பதவி அவருக்காக காத்திருந்தது. திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருந்தது.
ஞானம் அடையவேண்டும் என்ற ஆவலில் அவர் தனது அரச பதவி, குடும்பம் ஆகியவற்றைத் துறந்தார். ஆன்மிக பயிற்சி முயற்சிகளைத் தொடர்ந்தார்.
இரண்டு குருநாதர்கள் இருந்து வழிகாட்டினர். பயிற்சி முயற்சிகள் அனைத்திலும் தீவிரம் காட்டினார்.
ஒரு நாள் உணவாக ஓர் எள், ஓர் அரிசி என உடலை வருத்தி தவ முயற்சிகளில் ஈடுபட்டார்.
அவருடைய முயற்சிகளின் பலனாக ஆன்மிக அனுபவங்கள் பல அவருக்கு ஏற்பட்டன. எந்தவொரு அனுபவத்திலும் நிலைத்திருக்க முடியாமல் ஆன்மிக அனுபவங்கள் அனைத்தும் அவரை ஏமாற்றின.
ஆன்மிக அனுபவங்களோடு ஆறு வருடங்கள் போராடிப் பார்த்தார். சத்திரிய வீர பரம்பரையைச் சேர்ந்த அவர் தனது முயற்சிகளின் இயலாமையை விரைவிலேயே உணர்ந்து விட்டார்.
முயற்சிகளின் எல்லைக்குச் சென்ற அவர் அதற்கு மேலும் வழியே கிடையாது என்பதைப் புரிந்து கொண்டு அப்படியே திகைத்துப்போய் நின்று விட்டார்.
எல்லா பயிற்சிகளையும் செய்து முடித்துவிட்டார். மேலும் செய்வதற்கு எந்தப் பயிற்சியும் பாக்கி இல்லை.
அந்த நிலையில் எந்தப் பயிற்சியும் செய்யாமல் அப்படியே ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார்.
அவர் எதுவுமே செய்யாமல் உட்கார்ந்து இருந்தால், அவர் மனமும் இயக்கம் எதுவும் இல்லாமல் போய் விடுமா?
அது அதன் போக்கில் இயங்கியது. இதற்கு முன்னால் அவர் ஒருபோதும் அதனை சுதந்திரமாக இயங்க அனுமதித்ததே இல்லை. அதனுடைய இயல்பான இயக்கத்துடன் ஏதாவது ஒரு பயிற்சி முயற்சியை இணைத்து அதனை நிர்வாகம் செய்தே வந்திருந்தார். இன்று அது அதன் போக்கில் இயங்கியது. சுதந்திரமாக இயங்கியது. எந்தவொரு அலங்காரமும் செய்யப் படாமல் நிர்வாணமாக இயங்கியது.
மனதினுடைய சுதந்திரமான இயக்கத்தை அன்றுதான் முதன் முதலாகக் கண்டுபிடித்தார். அதற்கு நிர்வாண நிலை என்று பெயர் கொடுத்தார்.
திருவண்ணாமலையின் தீபமாக விளங்கும் ரமண மகரிஷியைத் தெரியாதவர்களே இருக்க முடியாது . அவர் தனது பதினாறாவது வயதில் ஞானம் அடைந்தார்.
அவர் அப்போது ஒரு பள்ளி மாணவன். அவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கூடத்தில் படித்துவந்தார்.
திடீரென ஒரு நாள் அவருக்கு மரண பயம் ஏற்பட்டது . இளம் வயதிலிருக்கும் ஒருவருக்கு இத்தகைய பயம் வந்தால் அவர் என்ன செய்வார்?
எவரிடமாவது ஆலோசனை கேட்டு அதனைப் போக்கிக் கொள்ளவே முயன்றிடுவர். ஆனால் சற்று வித்தியாசமாக ரமணர் அந்த பயத்திலிருந்து விடுபட விரும்பவில்லை.
உறவினர் வீட்டில் அவர் தங்கியிருந்த சூழல் எப்படி இருந்ததோ தெரியவில்லை.
மரணம் வந்தால் வந்துவிட்டுப் போகட்டும் என்று அவர் தரையில் அப்படியே படுத்துவிட்டார்.
அவர் உடல் நலத்துடனேயே இருந்து வந்தார். மரணம் ஏற்படும் அளவுக்கு உடல்நலக் குறைபாடு எதுவும் கிடையாது. அவருக்கு ஏற்பட்டது மரணபயம் என்னும் ஒரு மன அனுபவம் மட்டுமே.
மரணம் வந்தால் வந்துவிட்டுப் போகட்டும் என்ற நிலையில் அவர் தனது மரணபயம் என்ற மன அனுபவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். அதாவது அவர் தனது மன இயக்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.
விளைவு?
புத்தருக்கு ஏற்பட்டது தான் அவருக்கும் ஏற்பட்டது.
தன்னுடைய மன இயக்கம் வித்தியாசமான வேறு ஒரு பரிமாணத்தில் இயங்குவதை கண்டு கொண்டார்.
அந்த சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பள்ளி மாணவன் மட்டுமே . சாஸ்திரங்கள் சம்பந்தமான ஆய்வுகள் எவையுமே அவருக்குக் கிடையாது.
அந்த நேரத்தில் அவருக்கு இருந்த அறிவைக் கொண்டு அவர், "நான் எனது நிஜ சொரூபத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் "என்று கூறினார்.
இவ்வாறு ஞானிகள் அனைவரும் ஒரே தன்மையிலேயே ஞானம் அடைந்துள்ளனர்.
தொடர்புக்கு வாட்அப் - 8608680532