- புத்தர் முதல் மகாத்மா காந்தி வரை உயிர்ப்பலியிடும் பழக்கத்தினை எதிர்த்து ஒருமித்த குரல் எழுப்பப்பட்டது.
- மூட நம்பிக்கை சடங்குகளை வேரறுக்க முயன்றார்.
சமயமெனும் ஆலயத்தில் தர்மத்தையே சுவாமிகள் தீபமாக ஏற்றினார். பரம்பொருளை அடைவதற்கான வழி தர்மம் ஒன்றே என்பதை அறுதியிட்டுரைத்த சுவாமிகள்
"பயந்து தர்மமிட்டு
பரம்பொருளைத் தேடிடுங்கோ"
என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அய்யாவழி இறைவழிபாட்டில் தர்மம் அளித்தலே தலையாய கடமையாக ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. பதிகள், நிழல்தாங்கல்கள் தர்மத்தின் மகிமையைப் பறைசாற்றி கொண்டிருக்கின்றன. 'என் பெயரை சொல்லி எவரொருவர்வரினும், அன்பாக அன்னமிட்டு ஆதரித்த பக்தர்களுக்கு எவ்வித அபாயம் நேரினும், நாராயணன் நான் அங்கு வருவேன்' என்று தர்மத்தின் வழி நின்று பரம்பொருளை அடைந்திட சுவாமிகள் காட்டிய பாதை 'மனித நேயம்' எனும் அன்புமலர் பரப்பப்பட்ட புனித வழியாகும்.
ஆத்மா பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கும் ஆனந்த நிலையான முக்தி நிலையினை சுவாமிகள் தர்மபதி என்று வழங்கினார். சத்திய நெறி நிற்போர் தர்மபதி என்பதனை அடையலாம் என்பதனை "சத்தியமாய் இருக்க வேணும் தர்மபதி கிடைக்கும்" என்று அருள்நூல் வரிகள் தெளிவுபடுத்துகின்றன. மூர்க்க குணத்தை மனிதன் விட்டு விட்டால் மோட்சத்தை அடைவது சாத்தியமாகிவிடும் என்பதை அய்யா தெளிவுபடுத்தினார்.
வைகுண்ட சுவாமிகளின் வருகையின் நோக்கம் 'தர்ம யுகமாக்கி தரணியை ஆளுதற்காகவே என அகிலம் கூறுகிறது. சுவாமிகள் தர்மயுகம் காணுவதில் மிக்க நாட்டம் கொண்டிருந்தார். தர்மயுகத்தின் இயல்பு பற்றி கருத்து தெரிவிக்கையில்,
"சாத்திர வேதம் சமயம் ஒன்றாய் நின்றிலங்கும்
வாயுவேப் பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும்
ஆயுங்கலைத் தமிழும் அறிவொன்று போல் பரவும்
நம்மனுவோர் தர்ம பதி நாளும் மிகத் தழைக்கும்
தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்காண்
ஒக்கவொரு வினம் போல் உவந்திருந்து வாழ்வார்காண்"
எனத் தர்மயுகத்தில் "ஒரே சமயம் ஒரே இனம்" என்ற அடிப்படையில் மக்கள் வாழ்வர் எனவும், தமிழும் அறிவும் ஒன்றாய் பரந்து தழைத்து நிற்கும் எனவும் கூறுகிறார். மேலும்,
"மண்ணெல்லாம் தர்ம வயல் போல் விளைந்திருக்கும்
இப்படியே தர்ம பதி இராச்சியம் ஒன்றுண்டாக்கி...
தர்மபுவி கண்டு தானிருக்கும் மனுக்களுக்கு
வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை"
என அறுதியிட்டு கூறுகின்றார். இங்ஙனம் சுவாமிகள் காணும் தர்மபதி ராச்சியத்தில் நிலம் யாவும் தர்ம வயல்களாக காட்சி தரும் பாங்கினையும் அவரது அன்பர்களுக்கு விளக்கினார். அவர் ஏற்றிய தர்மநெறி மக்கள் மத்தியில் நன்றாக பரந்து வளர்ந்தோங்கியது. சுவாமிகளின் தர்மயுக கோட்பாடு அவரை ஒரு தலைசிறந்த சமுதாயவாதியாக காட்டுகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்களுள் பெரும்பாலானவை உருவ வழிபாட்டை கண்டனம் செய்தன. சுவாமிகளின் இயக்கமும் உருவ வழிபாட்டை நிராகரித்தது. எங்கும் நிறைந்து விளங்கும் இறைவனின் இயல்புக்கு எதிராகவும், அனைத்தையும் கடந்து விளங்கும் பிறவாயாக்கைப் பெரியோனின் கங்குகரை காணாத் தன்மைக்கு ஏற்பில்லாமலும் உருவ வழிபாடு உள்ளது என சுவாமிகள் கருதினார்.
"மறையினிலடங்கா இறையினிலடங்கா வணங்கிலுமடங்கா
பல வகையிலுமடங்கா நுறையினிலடங்கா தொல்புவியிலடங்கா
சுருதியிலடங்கா சகயினிலடங்கா உறவிலுமடங்கா
ஒளியிலுமடங்கா, யுகத்திலுமடங்கா, ஒரு விதத்திலுமடங்கா"
இறைவனைச் சிலையாக வடித்து வணங்கி வந்ததை சுவாமிகள் ஒத்துக்கொள்ளவில்லை. மனிதனுள்ளே இறைவன் உறைந்துள்ள தன்மையை மக்கள் மறந்து வாழ்வதனை கண்ணுற்ற சுவாமிகள் மக்களை நல்வழிப்படுத்த எண்ணினார். தன்னை அறிந்தவன் தன்னுள்ளே தலைவனை கண்டறிந்து கொள்ளலாம்" என்பதறிந்து,
"தன்னை யறிந்ததுண்டால்
தலைவனை நீ அறிவாய்"
என்று தெளிவுபடுத்தினார். தன்னை பின்பற்றுபவர்கள் யார் என்று அடையாளம் காட்டுகையில்,
"எனக்காகும் பேர்கள்....
மாடு மண்ணுருவை வணங்கி திரியார்கள்"
என்று அறுதியிட்டுக் கூறினார்.
புத்தர் முதல் மகாத்மா காந்தி வரை உயிர்ப்பலியிடும் பழக்கத்தினை எதிர்த்து ஒருமித்த குரல் எழுப்பப்பட்டது. அறவினை யாதெனில் கொல்லாமை' எனப் போற்றிய இம்மண்ணில் தேசிய விடுதலைக்குப் பின்னரும் உயிர்ப்பலி கூடாது என ஓங்கிக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது. எனினும் உயிர்ப்பலியிட்டு வழிபடும் வழக்கம் இன்னும் முற்றிலும் ஒழிந்தபாடில்லை. பேச்சளவில் அள்ளி வீசப்பட்ட எதிர்ப்புக்கணைகள் செயலளவில் வெளிப்படாததே இதற்கான தலையாய காரணமாகும். வைகுண்ட சுவாமிகள் பிற சீர்திருத்தவாதிகளை போன்று, உயிர்ப்பலிக்கெதிரான நடவடிக்கையினை பேச்சளவோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாது நடைமுறையில் கொண்டு வருவதிலும் வெற்றி கண்டார்.
மூடப்பழக்க வழக்கங்களின் மத்தியில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களில் பெரும்பாலோர் தங்கள் வழிபடு தெய்வங்களின் அருளை வேண்டி முறைப்படி தியானமோ, பிரார்த்தனையோ செய்வது கிடையாது. தங்கள் நிலைக்கொப்ப தெய்வங்களையும் அச்சமிகுதியால் வழிபாடு செய்பவர்களாகவே இருந்தனர். தெய்வங்களை சாந்தப்படுத்திடவும், மகிழ்விக்கவும், தெய்வ சந்நிதியில், தெய்வத்தின் பெயரால் ஆடு, கோழி முதலியவைகளை பலியிட்டு வணங்கி வந்தனர். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள தெரியாத மனிதர்கள், தன்னை தானே காப்பாற்றிக் கொள்ள தெரியாத உயிர்களை பலியாக்கி, தாங்கள் உழைத்து ஈட்டிய சிறு தொகையையும் கிடைத்தற்கரிய காலத்தையும் வீணாக்குவதை கண்ணுற்ற சுவாமிகள் இப்பழக்கத்தினை அகற்றிட முனைந்தார். தனது அன்பர்களுக்கு அவர் செய்த போதனைகள் எதிர்பார்த்த பயனைத் தந்தன.
"ஆடு கிடாய் கோழி பன்றி ஆயனுக்கு வேண்டாங்காண்
மேளதாளம் குரவைதொனி வேண்டாங்கானீசனுக்கு"
என்றும்,
"ஆடுகிடாய் கோழி பன்றி அறுத்து பலி கேட்கவில்லை
பொங்கலரிசி கோழி முட்டை பொறித்த கறி கேட்கவில்லை
உருகச் சுட்ட பணியாரம் அவலுருண்டை கேட்கவில்லை"
கருகச்சுட்ட முறுக்குகளும் கடையல்பால் கேட்கவில்லை"
என்றும் வைகுண்டர் உரைத்த உயிர்ப்பலி எதிர்ப்புக்கணைகள் அகிலத்திலும் "அருள் நூலிலும் பரவலாக காணப்படுகின்றன. தாங்கள் வழிபட்டிடும் தெய்வம் - பல்லுயிரையும் படைத்தவன் என மக்களால் கருதப்பட்ட பரமன் பலி ஏற்பதிலும் ரத்த தூபம் காண்பதி லும் ஆவல் மிக்கோனாக இருக்க மாட்டான் என்பதனை நன்குணர்ந்து, பலியிடும் பழக்கத்தையும் அவரது அன்பர்கள் அடியோடு அகற்றினர்.
மக்கள் பேய்மேல் கொண்டிருந்த நம்பிக்கையை அகற்றி சுதந்திரமாக வாழ்ந்திட வேண்டும் என சுவாமிகள் முயற்சி மேற்கொண்டார். நாட்டிலுள்ள ஆலயங்களில் நுழைவதற்கு மேற்கொற்றவர்களாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் ஏராளமான பேய்க் கோவில்களை கொண்டிருந்தனர். பேய்த் தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை அவர்களது வாழ்வை ஆட்டிப்படைத்தது. காலரா, அம்மை போன்ற கொடிய நோய்கள் கூட பேய்த் தெய்வங்களின் சீற்றமே என்றெண்ணி, அத்தெய்வங்களை சாந்தப்படுத்திட வேண்டி ஏராளமான பொருட்களை காணிக்கை செலுத்துவதுடன் உயிர்ப்பலியும் கொடுத்தனர். தெய்வங்களிடம் அச்சமும், பயமும் இருந்ததே ஒழிய அன்பும் பற்றும் ஒரு சிறிதுமில்லை. மக்கள் பேய்த் தெய்வங்களுடன் இங்ஙனம் தங்கள் வாழ்வைப் பிணைத்துக் கொண்டு நரகமாக்கிடும் செயலினை அகற்றிட ஆவல் கொண்டு, எல்லா பேய்களையும் தான் எரித்து விட்டதாகவும், இனிமேல் பேய்களை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் எனவும் அறிவித்தார். மேலும்,
"பொய்யில்லை பிசாசுயில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத்துன்பமுமில்லை
தொய்யில்லை இறைகளில்லை சுறுட்டுமாஞாலமுமில்லை
"மையில்லை உலகத்தோரே வாழுமோர் நினைவால்"
என்று அறவுரை நல்கினார். பேய் வழிபாட்டிலிருந்து மக்களை விடுவித்திட
"பேய்ச்செடிக்கு கொடுத்தவனை
பிரம்பெடுத்து நானடிப்பேன்"
எனவும்,
"செடிக்குக் கொடுத்தவனை
செவிதிருக்கி குற்றம் கேட்பேன்"
எனவும் கடுமையாக எச்சரித்தார். அவரது அறிவுரையை ஏற்று திருந்தாதவர்களை பார்த்து வருந்தி,
"தெய்வ கன்னிகள் பெற்ற பிள்ளை
செடிதோறும் அலைகிறாரே
பேய் எச்சித் தின்று அவர்
பேய் போல் அலைகிறாரே"
என உரைத்தார்.
அது மட்டுமல்ல... மூட நம்பிக்கை சடங்குகளையும் வேரறுக்க முயன்றார். அதனை வரும் தொடரில் காண்போம்.