சிறப்புக் கட்டுரைகள்

ஒரே கடவுள் கொள்கையை ஒலிக்க செய்த வைகுண்டர்

Published On 2025-01-25 15:05 IST   |   Update On 2025-01-25 15:05:00 IST
  • “அய்யா சிவ, சிவ அரகரா அரகரா” என்ற ஒரே மந்திரத்துள் சிவனையும், மாலையும் அடக்கி ‘ஒருவனே தேவன்’ என்ற ஒப்பற்ற நெறியினை சுவாமிகள் ஓங்கி ஒலிக்கச் செய்தார்.
  • ஆணும் பெண்ணுமாய்க் கூடி, தானதர்மம் செய்து தழைத்து வாழ்ந்திடுமாறு கேட்டுக்கொண்டார்.

சுவாமிகள் புதிய சமயத்தையோ, புதிய கோட்பாட்டையோ, ஏற்படுத்தவில்லை. மேலும், எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் வணங்கிடுமாறோ, சமய ஆசாரங்கள் செய்திடுமாறோ வற்புறுத்தவில்லை. அவரது சித்தாந்தத்தில் இறைவன் 'தர்மம்' என்ற கோவிலில் உறைகின்றான். அவரது சமயமெல்லாம் 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதில்' தான் அடங்கிக் கிடந்தது. மனிதன் தன் குறை நீக்கத்திற்கும் நிறைநலம் பெறுவதற்கும் இன்றியமையாத சமயத்தை, மனிதனை நெறிப்படுத்தி அவன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும் சாதனமாக சுவாமிகள் கருதியமையால், தாழக்கிடப்பாரையெல்லாம் தற்காத்துக் கொள்ளும் வழியாக எண்ணினார். அவ்வழியே இறைவனை அடைவதான உன்னத வாழ்க்கைநெறி என்பதையும் நன்கு உணர்த்தினார். இரப்போரை ஆதரித்து வாழும் வாழ்க்கை முறையே அவர் புகட்டிய சமய வாழ்வின் உயிர்நாடியாக அமையலாயிற்று.

'கடவுள் ஒருவரே' என்பதில் எல்லாச் சமயங்களும் கொள்கை அளவில் ஒன்றுபட்ட போதிலும் 'அந்த' ஒரே கடவுள் யார்? என்பதில்தான் அவைகளுக்குள்ளே பல்வேறுபட்ட கருத்துகள் எழலாயின. வைணவத்தில் திருமாலும், சைவத்தில் சிவனும், இஸ்லாமில் அல்லாவும், கிறிஸ்தவத்தில் இயேசுவுமென இறை நாயகர்கள் ஏற்றப்பட்டு 'பிறவிப் பெருங்கடலை' நீந்த வெவ்வேறு மார்க்கங்கள் ஏற்படலாயின. ஒவ்வொரு மார்க்கத்திலும் பல்வேறான நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சடங்குகளும் இணைந்தன.

சமய நம்பிக்கைகளை மையமாக கொண்டு ஏராளமான புனைந்துரைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு பிரிவினை பேதங்களை கற்பித்த சமயங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, மக்கள் பெருமளவில் மாண்டு போன துயர சம்பவங்கள் வரலாற்றின் பக்கங்களில் மட்டுமல்லாது, இன்றைய நாளிலும் காணக்கூடியதாய் உள்ளது.

சமுதாயத்திற்கு நன்னெறி புகட்டப்போகிறோம் என புறப்பட்ட சமயங்கள் சகிப்புத் தன்மையும், சமத்துவ நோக்கமும் தம்முள் இல்லாத காரணத்தால் பேரரசுகளை போன்று ஒன்றையொன்று மேலாண்மை செலுத்துவதில் போட்டியை தங்களுக்குள்ளே வளர்த்துக் கொண்டன; சேவை செய்ய வேண்டியவை செருக்கினை வளர்த்துக் கொண்டன; அன்பைச் காட்ட வேண்டியவை ஆணவத்தைக் காட்டலாயின; சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டியவை சச்சரவுகளை வளர்க்கலாயின.

மானிட ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க வேண்டியவை வேறுபாடுகளை உண்டாக்கின. தனிமனித முன்னேற்றத்திற்காகப் போராட வேண்டியவை தன்னிலையை உயர்த்திடலாயின.

மனிதனுள் மறைந்துள்ள தெய்வீகப் பண்புகளை வெளிப்படுத்த வேண்டியன, தீவிரவாத வெறிச்செயல் மூலம் மனிதனை மனிதன் மாய்க்கும் மறப்பண்பினை உசுப்பி விட்டன. எனவே, ஒரே பரம்பொருளை மையமாக கொண்டு தோன்றிய சமயங்கள் யாவும் வேறுபாடுகளை வளர்த்து, சமுதாயத்துக்குள்ளே எதிர் வினைகளை ஏற்படுத்திடலாயின.

தென்பொதிகை தென்றலென சமுதாய வானில் இன்னிசை பாடவேண்டியன முகாரி ராகத்தை ஆங்காங்கே எழுப்பிக் கொண்டிருந்தன. இந்த சமயங்களின் சல்லாபங்களை தான் சுவாமிகள்

"நீ பெரிது நான் பெரிது

நிச்சயங்கள் பார்ப்போமென்று

வான்பெரிது அறியாமல்

மாள்வார் வீண்வேதமுள்ளோர்

ஒருவேதம் தொப்பி

உலகமெல்லாம் போடுவென்பான்

மற்றொரு வேதம் சிலுவை

வையமெல்லாம் போடுவென்பான்

குற்றம் உரைப்பான்

கொடுவேதக்காரனவன்

ஒருவருக்கொருவர்

உனக்கெனக்கென்றே தான்

உறுதியழிந்து ஒன்றிலும்

கை காணாமல்

குறுகி வழிமுட்டிக்

குறை நோவு கொண்டுடைந்து

மறுகித் தவித்து மாள்வார்கள்

வீண் வேதமுள்ளோர்"

என இடித்துரைத்தார். பல்வேறு சமயங்களை சார்ந்தவர்கள் சண்டையிட்டு மாள்வதுடன், சமயங்களுக்கு வெளியே உள்ளவர்கள் கூடக் குற்றம் உரைத்து உறுதியழிந்து போவதையும் எடுத்துரைத்தார்.

சமுதாயத்தில் நிலவிய சமயப் பிரிவுகளையும் அவற்றின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு சுவாமிகள் 'ஒரே கடவுள் என்ற கொள்கையை அறிவுறுத்தினார். பல தெய்வ வழிபாட்டில் மக்கள் திருப்தி காணவோ, மனஅமைதி பெறவோ இயலாது என்பதனை தெளிவுற உணர்ந்த சுவாமிகள் இறைஒருமையினை மக்களுக்கு உணர்த்தினார்.

"மண்ணிலே பிறக்கவும்

வழக்கலா துரைக்கவும்

எண்ணிலாத கோடி தேவரென்ன

துன்ன தென்னவும்

கண்ணிலே மணியிருக்கக் கண்

மறைந்தவாறு போய்

எண்ணில் கோடி தேவரு மிதின்

கணவரி ழப்பதே"

என்று கூறுகின்ற அளவிற்கு சமயவாதிகள் தத்தம் சமயத்தையே உயர்வானதென அரற்றித் திரிந்த காலத்தில், விஷ்ணு, சிவன், பிரம்மன், சக்தி அனைத்தும் தன்னுள் அடக்கம் என சுவாமிகள் தெளிவுப்படுத்தினார். விஞ்சை பெற்ற வேளையில்

"சிவனும் நீ நாதனும் நீ திருமாலும் நீ

தவமும் நீ வேதனும் நீ"

என்று வைகுண்டருக்குள் அனைத்தும் அடங்கியுள்ள நிலையைத்தான் அகிலம் வெளிப்படுத்துகின்றது.

சுவாமிகள் தன்னை நாடி வந்தோரிடத்து போதித்தருளுகையில்,

"வைகுண்டருக்கே பதறி

வாழ்வதல்லாமல்

பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தி

அயர்ந்து அஞ்சாதுங்கோ"

என்று அறிவுறுத்தினார்.

"தாணுமால் வேதன் தற்பரனார்

ஆணையதாய் ஒன்றில் அடங்குவதே"

என்று அத்வைத தத்துவம் அகிலத்தில் உணர்த்தப்படுகின்றது.

"அய்யா சிவ, சிவ அரகரா அரகரா" என்ற ஒரே மந்திரத்துள் சிவனையும், மாலையும் அடக்கி 'ஒருவனே தேவன்' என்ற ஒப்பற்ற நெறியினை சுவாமிகள் ஓங்கி ஒலிக்கச் செய்தார். மேலும், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு மறுக்கப்பட்ட சிவன், மால் வழிபாட்டை ஒன்றாக இணைத்து புதிய வழிபாட்டு நெறியினை வகுத்து அய்யா ஒரு புரட்சியினை அமைதியாக அரங்கேற்றம் செய்தார்.

அரும்பெறல் யாக்கையைப் பெற்றதின் பெரும்பயன் வறியார்க்கீந்து மகிழ்வதற்காகவே ஆகும். சமண, சாக்கிய சமயங்கள், அன்னதானம், அபயதானம், மருத்துவதானம், சாஸ்திரதானம் என நால்வகை தானங்களை வலியுறுத்தின. மண்ணுயிர்க்கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும் அளிப்பதனை அறமாக மணிமேகலை போற்றியது. உண்டி கொடுத்தோரை உயிர் கொடுத்தோராகவே தமிழ்கூறும் நல்லுலகு பாராட்டியது. பின்னாளில் சுவாமி விவேகானந்தரும் 'ஏழை மக்களே நாம் வழிபடும் கடவுள், இடையறாது ஏழைகளைப் பற்றியே எண்ணுங்கள், அவர்களுக்காகவே உழையுங்கள். அங்ஙனம் அவர்களுக்காக யார் உள்ளம் கசிந்துருகி கண்ணீர் வடிக்கிறார்களோ அவர்களே மகாத்மாக்கள்' எனப் புகட்டினார்.

அன்பின் வழியதாக உயிர்நிலையைக் கண்ட சுவாமிகள் தர்மத்தை உயர்நெறியாகக் கண்டார். நாடிவந்த மக்களிடம் தர்மமிட்டு வாழ்ந்திடுமாறு அறிவுறுத்தினார். 'தர்மமே வாழும் சக்கரங்கள்' எனச் சுருங்க கூறி வாழ்வின் முழுப்பொருளும் தர்மத்துள் அடங்குவதாக உரைத்தார்.

"அன்போர்க்கு மீயு

வழிபோவோர்க்கு மீயு

சகலோர்க்கு மீயு

வலியோர்க்கு மீயு

மெலியோர்க்கு மீயு"

என தன்னால் இயன்றவரை கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவவிடாது, எல்லோர்க்கும் ஈந்து இசைபட வாழுமாறு அறிவுறுத்தினார். எனினும் எளியோர்க்கீயும் பண்பினை போற்றினார். எனவே தான்

"தாழக் கிடப்பாரை தற்காப்பதுவே

தர்மம்"

என வரையறை செய்து, தன்னை விடத் தாழ்ந்துள்ளோரை பேணி உயர் நிலைக்கு கொண்டு வருதலையே தர்மம் என விளக்கம் அளித்தார். தர்மம் வழங்குகையில் உண்மை அன்புடையோராய் இரப்போர்க்கு இரங்கிடும் இளகிய மனத்தராய் வாடிய முகம் மலர்ச்சியுறும் வண்ணம், தான் கொடுப்பது சிறிதெனினும் அகமும் முகமும் மலர

"இரப்போர் முகம் பார்த்து ஈவதுவே

நன்று"

என விளக்கினார். அங்ஙனம் இரப்பாரைக் கை கொண்டோரே எனை ஏற்றவர் ஆவர் எனத் தெளிவுறுத்தினார். நல்லவர் இட்ட தர்மம் நாள்தோறும் பெருகும் ஆற்றல் மிக்கது எனவும், அழிக்க நினைத்தாரையே அழித்துவிடும் வல்லமை உடையது' எனவும் எடுத்துரைத்தார். ஆணும் பெண்ணுமாய்க் கூடி, தானதர்மம் செய்து தழைத்து வாழ்ந்திடுமாறு கேட்டுக்கொண்டார். பரம்பொருளை அடைவதற்கான வழி தர்மம் ஒன்றே என்று அவர் கூறினார். அதனை அடுத்த தொடரில் காண்போம்.

Tags:    

Similar News

எது ஞானம்?