- அன்பு, பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம்தான் கரும்பு. அன்பும் பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
- தனக்கு மிகவும் பசிக்கிறது என்று சொல்லி, ஒரே ஒரு கரும்பு தருமாறு வியாபாரியிடம் கேட்டார்.
பந்த பாச உணர்வைத் தூண்டுபவன் மன்மதன். கரும்பு வில்லைப் பயன்படுத்தி அம்பு எய்து ஆண்-பெண் ஆகியோருக்கு இடையே ஈர்ப்பைத் தோற்றுவிப்பவன். காதல் தெய்வமான மன்மதன் ரதிதேவியின் கணவன்.
இந்த உலகம் தொடர்ந்து நடைபெறுவதற்கு மன்மதனின் பணி இன்றியமையாதது. அவனால் தான் உலகில் வம்ச விருத்தி உண்டாகிறது.
மன்மதனுடைய கரும்பு வில்லின் நாண், கயிற்றால் ஆனதல்ல. தொடர்ச்சியான வண்டுகளின் வரிசைதான் மன்மதன் வில்லின் நாணாக இருக்கிறது.
அந்த நாணிலிருந்து ஐந்து மலர்களை அம்புகளாக்கி மனிதர்கள் மேல் சூட்சுமமாக எய்கிறான் அவன். தாமரை, அசோகம், குவளை, மாம்பூ, முல்லை ஆகிய ஐந்து மலர்கள்தான் மன்மதனின் அம்புகள்.
கரும்பு வில்லில், வண்டு நாணை இழுத்து, மலர் அம்புகளைப் பொருத்தி அவன் எய்தால் யாராயிருந்தாலும் பந்த பாசங்களுக்கு ஆட்பட வேண்டியதுதான்.
மன்மதனின் கரும்பு வில்லிலிருந்து புறப்படும் கணையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. மன்மதனைப் பற்றிச் சொல்லும்போது `காமன் எல்லோருக்கும் காமன்!` எனத் தமிழும் ஆங்கிலமும் கலந்து சிலேடை நயத்தோடு சொல்வார் வாரியார் சுவாமிகள்.
ஒரே ஒருவரிடம் மட்டும் மன்மதனின் ஆற்றல் பலிக்கவில்லை. சூரபத்மனை வதம் செய்ய ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்பதால், பரமசிவன்மேல் தன் கரும்பு வில்லைக் கொண்டு மலர்க் கணைகளை மன்மதன் எய்ய வேண்டும் என வேண்டினார்கள் தேவர்கள்.
அவர்கள் சொன்னபடியே மலர் அம்புகளைப் பரமசிவனை நோக்கி எய்தான் மன்மதன். சிவபெருமான் அதனால் தம்முடைய தவம் கலைக்கப்பட்டார்.
யார் தன் தவத்தைக் கலைத்தது எனக் கடும் சீற்றத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அவ்வளவுதான். அவர்மேல் மலர்க்கணை தொடுத்த மன்மதன் எரிந்து போனான் என்கிறது சிவபுராணம்.
பிறகு ரதிதேவி வேண்டியதன் பேரில் ரதியின் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என்றும் மற்றவர் கண்ணுக்குத் தெரியமாட்டான் என்றும் வரம் கொடுத்தார் சிவன்.
அதனால்தான் மன்மதன் இப்போது யார் கண்ணுக்கும் தெரியாமல் பலர்மேல் மலர் அம்பு எய்து தன் பணியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்.
பொதுவாக தோற்றவர் கையிலுள்ள ஆயுதம், வென்றவர் கைக்கு வருவது நடைமுறை வழக்கம். அந்த வழக்கப்படியே தோற்றுப்போன மன்மதனின் கரும்பு வில் சிவனின் கைக்கு வந்துவிட்டது. அதை, தான் வாங்கித் தன் கரத்தில் வைத்துக் கொண்டாள் அன்னை காமாட்சி.
அன்பு, பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம்தான் கரும்பு. அன்பும் பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். கட்டுமீறிச் சென்றால் துன்பம்தான். அதை உணர்த்தவே அன்னை தன் கையில் கரும்பை வைத்திருக்கிறாள்.
மன்மதனின் கரும்பு காமத்தைத் தூண்டக் கூடியது. அன்னை காமாட்சி தேவியின் கையில் உள்ள கரும்பு தன்னை வழிபடுபவர்களின் மனத்திலிருந்து காமத்தை அகற்றக் கூடியது.
இதுதான் மன்மதன் கையில் இருந்த கரும்பிற்கும் காமாட்சி கையில் உள்ள கரும்பிற்குமான முக்கிய வேறுபாடு.
`காமாட்சியை வழிபட்டால், தேவியின் திருக்கரத்தில் உள்ள கரும்பின் கருணையால் நாம் காம உணர்வை வெல்வோம். காம தகனம் செய்த சிவபெருமானின் மனைவி நம் உள்ளத்தில் உள்ள காமத்தைத் தகனம் செய்துவிடுவாள்.` என்கிறார் வாழ்நாளெல்லாம் காஞ்சி காமாட்சியை வழிபட்ட காஞ்சிப் பரமாச்சாரியார்.
`கரும்பாயிரம் பிள்ளையார் கோயில்` என்றொரு கோயில் கும்பகோணத்தில் உண்டு. அங்கே உறையும் விநாயகரின் திருநாமம்தான் `கரும்பாயிரம் பிள்ளையார்` என்பது. அவருக்கு அப்படியொரு பெயர் வந்ததற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
கரும்பு வியாபாரி ஒருவன் தன் வண்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்தான். அவன் விநாயகர் கோயில் எதிரே வரும்போது அவன்முன் ஒரு சிறுவனாய்த் தோன்றினார் விநாயகர்.
யானை முகத்தை உடைய அவருக்கு யானைகள் விரும்பிச் சாப்பிடும் கரும்பைத் தானும் சாப்பிட வேண்டும் என ஆசை வந்துவிட்டது. தனக்கு மிகவும் பசிக்கிறது என்று சொல்லி, ஒரே ஒரு கரும்பு தருமாறு வியாபாரியிடம் கேட்டார்.
அவர் யாரென்று அறியாத வணிகன், அனைத்தும் உப்புக் கரிக்கும் என்று சொல்லி அவரை ஏமாற்றிவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று விட்டான்.
`சிறுவன் மேல் இரக்கமில்லையே உனக்கு? நீ சொன்னபடியே, உன் வண்டியில் உள்ள ஆயிரம் கரும்பும் உப்புக் கரிக்கட்டும்!` எனக் கூறிவிட்டு அருகிலுள்ள கோவிலில் சென்று மறைந்துவிட்டான் சிறுவன்.
அடுத்த கணமே ஆயிரம் கரும்பும் தித்திக்காமல் உப்புக் கரிக்கத் தொடங்கியது. வாயில் போட்டால் உப்புக் கரிக்குமானால், அந்தக் கரும்பு எப்படி வியாபாரம் ஆகும்? ஒரு கரும்பைக் கூட வாங்குவார் இல்லை.
வணிகன் தவற்றை உணர்ந்தான். சிறுவன் கேட்டபோது கரும்பு கொடுக்காதது தப்புத்தான் எனவும் தன்னை இறைவன் மன்னிக்க வேண்டும் எனவும் உள்ளம் உருகி வேண்டினான்.
அன்றிரவு விநாயகர் அவன் கனவில் தோன்றினார். அவனை மன்னித்தார். ஏழைகளுக்கு இரங்கவேண்டும் என்று அவனுக்கு நீதி புகட்டினார்.
அவன் வேண்டியபடி, மறுபடி ஆயிரம் கரும்பும் தித்திக்கும் என அருளினார். பின் கனவிலிருந்து மறைந்துபோனார்.
மறுநாள் கண்விழித்து எழுந்த வணிகன் கனவை நினைத்து நினைத்து நெகிழ்ந்தான். தன் வண்டியில் உள்ள ஒரு கரும்பை எடுத்துக் கடித்துப் பார்த்தான்.
அது சாதாரணமாய்க் கரும்பு தித்திக்கும் தித்திப்பை விடப் பல மடங்கு கூடுதலாய்த் தித்தித்தது. பிறகென்ன, கரும்புகள் விறுவிறுவென்று விற்றுப் போயின.
ஆயிரம் கரும்பையும் விநாயர் தித்திக்கச் செய்த கதை இதுதான் என்கிறது கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் பற்றி வழிவழியாக வழங்கும் தலபுராணக் கதை.
பட்டினத்தார் கையில் ஒரு கரும்பு உண்டு. அந்தக் கரும்பு பற்றி, கரும்பைப் போலவே இனிப்பான ஒரு கதையும் உண்டு.
பட்டினத்தாருக்கும் முன்பாகவே அவரது சீடர் பத்திரகிரியாருக்கு திருவிடைமருதூரில் இறையருளால் முக்தி கிடைத்துவிட்டது. பத்திரகிரியார் இறைஜோதியில் கலந்ததைக் கண்ணால் கண்டார் பட்டினத்தார்.
`என் சீடனுக்கே முக்தி கிட்டி விட்டதே ஐயனே! எனக்கு எப்போது முக்தி கிட்டும்?` என உள்ளம் உருகச் சிவபெருமானை வேண்டினார்.
சிவபெருமான் அவர்முன் தோன்றி, அவர் கையில் ஒரு கரும்பைக் கொடுத்தார்.
`இந்தக் கரும்பைத் தாங்கியவாறு திருத்தல யாத்திரை நிகழ்த்து. ஒவ்வொரு திருத்தலத்திலும் மேற்புற நுனியைக் கடித்துப் பார். எந்தத் திருத்தலத்தில் இந்தக் கரும்பின் மேற்புறம் இனிக்கிறதோ அங்கு உனக்கு முக்தி அருளப்படும்.` என அருளினார்.
பட்டினத்தார் கையில் கரும்போடு திருவெண்காடு, சீர்காழி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்றார். ஒவ்வொரு திருத்தலத்திலும் தான் கையில் ஏந்தியிருந்த கரும்பின் நுனியைக் கடித்துப் பார்த்தார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை.
ஏக்கத்தோடு பல திருத்தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், சென்னை அருகே திருவொற்றியூர் வந்தபோது கரும்பின் நுனி தித்தித்தது. அதுவே தாம் முக்தியடைய இருக்கும் திருத்தலம் என்பதைப் பட்டினத்தாரின் உள்மனம் உணர்ந்து கொண்டது.
அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாடலானார் அவர். அவர்களைத் தன்னைக் கூடையால் மூடும்படி வேண்டிக் கொண்டார். அவர்கள் அவ்விதமே மூடினார்கள்.
ஆனால் அந்தக் கூடையிலிருந்து அல்லாமல் வேறோர் இடத்தில் தோன்றினார் அவர். பல சித்திகள் பெற்ற சித்தராயிற்றே அவர்? சிறுவர்கள் திகைத்தார்கள்.
ஓடோடிப் போய் அங்கும் அவரைக் கூடையால் மூடினார்கள். இப்படியான விளையாட்டு பலமுறை நடந்தது.
இறுதியில் ஒரு கூடையால் மூடப்பட்ட அவர், சிவலிங்கமாக மாறிச் சிவனுடன் கலந்தார். அந்தக் கூடையைத் திறந்துபார்த்த சிறுவர்கள் திகைத்தார்கள்.
அவர்கள் ஓடோடிப் போய்த் தங்கள் பெற்றோரிடம் இந்த அதிசயத்தைத் தெரிவிக்க, பின்னர் திருவொற்றியூரில் அந்த இடத்தில் சமாதி தோற்றுவிக்கப்பட்டது.
கரும்பிலிருந்து எடுக்கப்படும் சாறு கருப்பஞ்சாறு எனப்படுகிறது. அதன் தித்திப்பு புகழ்பெற்றது.
மாணிக்க வாசகரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் வள்ளலார். மாணிக்க வாசகர் எழுதிய `திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்` என்று சொல்வதுண்டே?
அப்படிப்பட்ட உள்ளத்தை உருக்கும் மாணிக்கவாசகரின் வாசகங்களைத் தான் கலந்து பாடும்போது கருப்பஞ்சாற்றில் தேனையும் பாலையும் கலந்ததுபோல் இனிமை உண்டாகிறது என மணிவாசகரைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார்.
`வான்கலந்த மாணிக்க வாசக! நின்
வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்
சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்
சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல்
இனிப்பதுவே!`
பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய இடம் வகிக்கிறது. கரும்பில்லாமல் யாரும் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. கரும்பின் விளைச்சலும் பொங்கலை ஒட்டியேதான் தை மாதத்தில் நிகழ்கிறது.
`கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?` என்றொரு பழமொழி உண்டு. கரும்பு இனிக்கக் கூடியது. அந்த இனிப்புக்காகவே அதைத் தின்னலாம். அப்படியிருக்க அவ்விதம் தின்பதற்குக் கூலி வேறு வேண்டுமா என்ன?
ஒரு செயலைச் செய்வதே மனத்திற்கு மகிழ்ச்சி தருகிறபோது அதைச் செய்வதற்கு எதற்குக் கூலி என்பதை விளக்க வந்த பழமொழி இது.
நம் ஆன்மிகத்தில் கரும்புச் செய்திகள் நிறைய உண்டு. நமது ஆன்மிகமே நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் தித்திக்கும் கரும்பு தானே?
தொடர்புக்கு,
thiruppurkrishnan@gmail.com