'வா... வா... என் தேவதையே...' நாளை பெண் குழந்தைகள் தினம்
- தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
- வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.
நாளை பெண் குழந்தைகள் தினம்...
இது இந்தியா முன்னெடுத்த பெருமைக்குரிய தினம். இது கடந்த 2008-ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஜனவரி 24-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
என்னதான் பாலின சமத்துவம் பேசப்பட்டு வந்தாலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒரு கட்டத்தில் அரசுக்கும் ஏற்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற அளவில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை சரிவை நோக்கி சென்றதை சந்தித்த போதுதான் அரசுக்கு பொறி தட்டியது. தாயின் வயிற்றில் இருக்கும் போதே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு கருவிலேயே அழிக்கப்படுவதும், தப்பித்தவறி பிறந்து விட்டால் கூட கள்ளிப்பாலையும், நெல் மணியையும் கொடுத்து அந்த கண்மணிகளை ஈவு இரக்கமில்லாமல் அழித்து வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நம்ம கடலூர் மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கும் 854 பேர் தான் பெண்கள் என்ற கணக்குதான் இந்திய அளவில் பெண் குழந்தைகளை காக்கும் அளவுக்கு நாட்டின் கண்களை திறக்க வைத்தது. பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கினார்கள்.
சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், ஏற்றத்தாழ்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காப்பாற்றுதல், பாலின விகிதங்களை பராமரித்தல், குழந்தை திருமணம், அவர்களுக்கான சட்ட உரிமைகள், மருத்துவம், மரியாதை போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.
தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரத்தையும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரத்தையும் அரசே டெபாசிட் செய்கிறது. அந்த குழந்தை திருமண வயதை எட்டும் போது ரூ.3 லட்சம் கிடைக்கும்.
அரசு திட்டங்கள் போட்டு காப்பதைவிட மக்களின் மனமாற்றம் தான் முழு வெற்றியை தரும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. பெண் குழந்தை என்பது பல பரிணாம வளர்ச்சியோடு வாழ்க்கையை பரிபூரணமாக்குகிறது. எனவேதான் பெண் குழந்தைகளை கொண்டாடுகிறோம். வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.
அந்த வீட்டின் ஆனந்த யாழை மீட்டுபவள் அவள். "வா.. வா என் தேவதையே... பெண் பூவே வா... வா... பொய் வாழ்வின் பூரணமே..." என்று பெண் குழந்தைகளின் பிறப்பை உயர்வாக சித்தரித்து பாடுகிறார்கள்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அவர்களின் உரிமை, சட்ட பாதுகாப்பில் அடங்கி இருக்கிறது. குழந்தை திருமணம் சட்டப்படி தவறு. அதற்கு தண்டனையும் உண்டு. அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து இளம் வயது கர்ப்பம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குழந்தை திருமணங்கள் அரங்கேற முக்கிய காரணம் இன்றைய சமூக சூழ்நிலையில் பெற்றோர்களுக்கு ஏற்படும் தேவையற்ற பயம். திருமணம் முடிந்துவிட்டால் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார்கள். ஆனால் அது அந்த குழந்தைகளை படு பாதாளத்தில் தள்ளுவது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இளம் வயது கர்ப்பம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
பெண் குழந்தைகள் பிறந்ததும் பெருமைப்படும் பெற்றோர் மிக இளம் வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு காரணம் சமூக அழுத்தமும், நடைபெறும் பாலியல் அத்துமீறல்களும்தான் எனப்படுகிறது.
இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் வளர்ப்பதன் மூலம் களைய முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.