சிறப்புக் கட்டுரைகள்
null

ஐ.வி.எஃப். குழந்தை பேறுக்கும் குறிப்பிட்ட வயது தான்!

Published On 2025-01-22 14:46 IST   |   Update On 2025-01-22 14:55:00 IST
  • ஐ.வி.எஃப். முறைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றி விகிதம் தான் உண்டு.
  • 30 வயதான பெண்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு திறன் 15 முதல் 20 சதவீதம் இருக்கும். இதுவே 35 வயது பெண்களுக்கு 10 முதல் 12 சதவீதம் தான்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்யும் வயது அதிகரித்து வருகிறது. மேலும் குழந்தை பேறு பெறுவதையும் அவர்கள் தள்ளிப்போடுவது பொதுவாக இருக்கிறது. வயது கூடக்கூட அவர்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்பு குறைகிறது. எனவே வயதாகும் பெண்கள் குழந்தை பேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுபோல ஐ.வி.எப். முறையிலும் குறிப்பிட்ட வயது வரைதான் குழந்தை பேறு பெற முடியும்.

ஆனால் இன்றும் சில பெண்கள், டாக்டரிடம் வரும்போது, நாங்கள் இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பார்கள். அவர்கள் திருமணம் செய்தது 35 வயதாக இருக்கும், 38 வயதில் என்னிடம் வருவார்கள். திருமணமாகி 3 வருடம் குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு வருகிறோம் என்று சொல்வார்கள்.

அவர்களிடம் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறீர்கள் என கேட்டால், இப்போது இல்லை டாக்டர், இன்னும் 2 வருடம் கழித்துதான் என்பார்கள். இருந்தாலும் உங்களிடம் ஒரு அபிப்பிராயம் கேட்டுவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன் என்று சொல்கிற பெண்கள் மற்றும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகம்.

குழந்தை பேறு விஷயத்தில் ஆண்களின் வயதும் முக்கியம்:-

இதில் ஆண்களின் வயதும் ஒரு முக்கியமான விஷயம் என்பதை கவனிக்க வேண்டும். ஆண்களுக்கு வயது கூடும்போது அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி.என்.ஏ.யில் மாறுபாடு வரலாம். வயதாகும்போது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் விந்தணுக்களில் டி.என்.ஏ. மாற்றங்கள் ஏற்படும். இதனால் அந்த கரு உருவாகும்போது, கருவில் சில குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

பொதுவாக கர்ப்பப்பையில் கரு ஒட்டி வளரும் தன்மை குறையும். கர்ப்பப்பையில் கரு ஒட்டி வளரும் தன்மை குறைவதற்கு முக்கியமான காரணம், அந்த குரோமோ சோமில் குரோமடிக்ஸ் என்பது இருக்கும். அந்த குரோமட்டிக்ஸ் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள டீலொமியஸ் என்கிற சில விஷயங்கள் விரிவடையும் அல்லது சுருக்கம் அடையும். மேலும் டி.என்.ஏ.யில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

 

மேலும் அந்த கருமுட்டைகளில் ஸ்பிண்டில் செல் காம்ப்ளக்ஸ் இருக்கும். அது தான், கருமுட்டையின் கருவாக்கும் திறன், கரு உருவான பிறகு கர்ப்பப்பையில் ஒட்டி வளரும் தன்மை ஆகியவற்றுக்கு வழி வகுக்கிறது.

ஆனால் வயதான பிறகு இவை எல்லாமே குறைவாகிறது. அதனால் தான் கரு ஒட்டி வளரும் தன்மை குறைகிறது.

இதனால் தான் பெண்களை பொருத்தவரைக்கும் கருத்தரிப்பதற்கு வயது என்பது மிகவும் முக்கியமானதாகும். வயது கூடிய பெண்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் இப்போது வயதான பிறகு குழந்தை பேறு சிகிச்சைக்கு வருவது அதிகரித்து வருகிறது.

மேம்பட்ட தாய்வழி வயது அதிகரிப்பு:-

அட்வான்ஸ்ட் மெட்டர்னல் ஏஜ் (மேம்பட்ட தாய்வழி வயது) என்கிற சரித்திரத்தை பார்த்தால் 1990 காலகட்டங்களில் 30 வயதுக்கு மேல் 35 வயது என்று சொல்வோம். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் 40 வயதில் குழந்தை பேறு பெறுகிறவர்கள் ஒரு சதவீதம் இருக்கிறார்கள்.

கருத்தரித்த பெண்கள் 80 ஆயிரம் பேரை ஆய்வு செய்தபோது, 40 வயதில் கருத்தரித்தவர்கள் இந்தியாவில் ஒரு சதவீதம் இருக்கிறார்கள். 80 ஆயிரம் பேரில் ஒரு சதவீதம் என்றால் கிட்டத்தட்ட ஏராளமானோர் வயதான பிறகு அதற்கான சிகிச்சை மூலம் கருத்தரிக்கிறார்கள், குழந்தை பேறு பெறுகிறார்கள்.

 

எனவே குழந்தை பேறு பெறுவதற்கு வயது கூடுதல் என்பது அதிகரித்து வருகிறது. இது தவிர்க்க முடியாத உண்மை.

எனவே இன்றைய காலகட்டத்தில் அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்பதை 35 வயது முதல் 40 வயது வரை என்று குறிக்கிறோம். 40 முதல் 45 வயது வரை என்பது வெரி அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது ஆகும். 45 வயதில் குழந்தை பேறு பெற விரும்புவதை எக்ஸ்ட்ரீம் வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்று சொல்கிறோம்.

குழந்தை பேறு சிகிச்சையில் எழும் கேள்விகள்:-

இதுபோன்று வயது அதிகரித்தவர்களுக்கான சிகிச்சை முறைகள் என்ன? இவர்கள் எப்படி குழந்தை பேறு பெற முடியும்? குழந்தை பேறு பெறுவதற்கு இவர்களுக்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது? இவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஏராளமான கேள்விகள் எழுகிறது. இதை பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

35 வயதில் பெண்கள் மருத்துவரிடம் வருகிறார்கள். அவர்களில் சிலர், டாக்டர் நான் குழந்தை பேறு விஷயத்தை தள்ளி போட வேண்டும் என்று நினைக்கிறேன் என்பார்கள். சிலர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்பார்கள். அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயதில் வரும் பெண்களுக்கு சினைப்பை இருப்பு சோதனையை (ஓவரியன் ரிசர்வ் டெஸ்ட்) முழுமையாக செய்ய வேண்டும். அதற்கு சில பரிசோதனைகள் இருக்கிறது. அந்த பரிசோதனைகளை சரியாக செய்ய வேண்டும். அந்த பரிசோதனைகளை முறையாக செய்யும் போது அவர்களின் கருத்தரிக்கும் திறன் எந்த அளவு இருக்கிறது என்பதை நிர்ணயிக்கிறோம். அவர்களின் கருத்தரிக்கும் திறன் குறைவாகும் போது என்னென்ன வழிமுறைகளை செய்யலாம் என்பதை தெளிவாக திட்டமிட வேண்டும்.

எனவே ஒரு தம்பதியாக சிகிச்சை பெற வரும் போது, கண்டிப்பாக கணவன், மனைவி இருவருக்கும் இந்த விஷயங்களை பற்றி தெளிவான விளக்கம் தேவைப்படும். ஏனென்றால் நிறைய பேர் ஐ.வி.எப். செய்தால் குழந்தைபேறு கிடைத்து விடும் என்று நினைக்கிறார்கள்.

ஐ.வி.எப். முறையில் குழந்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஐ.வி.எப். என்பது முழுமையான தீர்வு அல்ல. ஐ.வி.எப். முறைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றி விகிதம் தான் உண்டு. ஏனென்றால் முட்டை இருந்தால் தானே கருவை உருவாக்க முடியும்.

முட்டை குறைவானால் எப்படி கருவை உருவாக்க முடியும்? இந்த மாதிரியான விஷயங்களை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் பல நேரங்களில் இவர்கள் இதை சரியாக புரிந்து கொள்ளாததால், டாக்டர் இதுபற்றி எனக்கு யாருமே சொல்லவில்லையே, இது தெரிந்திருந்தால் நான் இதற்கு முன்பே சிகிச்சைக்கு வந்திருப்பேனே என்று சொல்கின்ற பெண்களின் எண்ணிக்கை இன்றும் அதிகம். எனவே அவர்களுக்குரிய நடைமுறை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால் தான் வயது அதிகரித்த நிலையில் குழந்தை பேறு சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு விளக்கமாக சொல்கிறோம். அவர்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்பு குறைவு, அவர்களின் கருவாக்கும் திறன் குறைவு, உருவாகும் கருவில் குறைபாடுகள் வரலாம், கர்ப்பகாலத்தில் வரும் பிரச்சனைகளும் வயது கூடும்போது அதிகமாகிறது.

குறிப்பாக சர்க்கரை வியாதி, உப்பு சத்து, ரத்த அழுத்தம், இருதய பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை ஆகியவை அதிகரிக்கிறது. இதனால் குறை பிரசவம், நஞ்சு செயல்பாடுகளில் குறைவு, நஞ்சில் வருகிற பிரச்சனைகள் ஆகியவை எல்லாம் வயதாகும்போது அதிகமாகிறது.

 

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

வயது வாரியாக பெண்களின் இயற்கையான கருத்தரிப்பு திறன்:-

30 வயதான பெண்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு திறன் 15 முதல் 20 சதவீதம் இருக்கும். இதுவே 35 வயது பெண்களுக்கு 10 முதல் 12 சதவீதம் தான்.

38 வயதாகும் போது 10 சதவீதத்துக்குள் குறைந்து விடும். 40 வயது பெண்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு திறன் 5 சதவீதம் மட்டுமே. மேலும் அவர்களுக்கு சிசேரியன் போன்ற பிரசவகால பிரச்சனைகளும் அதிகமாகிறது.

வயது அதிகரித்த பெண்கள் எந்த நிலையில் குழந்தை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள், எவ்வளவு நாள் தள்ளிப்போடுகிறார்கள், அவர்களின் ஆரோக்கியம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை பொருத்து என்னென்ன சிகிச்சை முறைகளை அவர்கள் கடைபிடிக்கலாம் என்று தெளிவாக விளக்கங்கள் சொல்லும்போது, அதை திறந்த மனதுடன் அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

ஏனென்றால் பல நேரங்களில் 45 வயதில் கருமுட்டையே இல்லாமல் வருவார்கள், எனது முட்டையில் கருத்தரிக்க வையுங்கள் என்று சொல்வார்கள். ஏன் இவ்வளவு நாள் வரவில்லை என்று கேட்டால் ஐ.வி.எப். செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன், 45 வயதில் குழந்தை பிறக்கும் என்று சொன்னார்கள் என்பார்கள்.

 

ஆனால் அவர்கள் சிகிச்சைக்கு வரும்போது அவர்களிடம் முட்டையே இருக்காது. எனவே முட்டையை தானமாக பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். அப்போது தானம் பெறுவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லையென்றால் எப்படி 45 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்? இந்த மாதிரியான நடைமுறை உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த வகையில் அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயதில் பெண்களின் கருத்தரிக்கும் திறனை பொருத்து, எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளது? வெற்றி விகிதம் எவ்வளவு? என்ன சிகிச்சை சிறந்தது? இதில் எவ்வளவு குறைபாடுகள் வரும்? கர்ப்பகால பிரச்சனைகள் என்ன என்பதை புரிய வைத்து கவுன்சிலிங் செய்வது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்பது கருத்தரிப்புக்கு சிக்கலான விஷயம். இதனை மருத்துவராக எப்படி அணுகுகிறோம் என்கிற விளக்கங்களையும், இந்த மாதிரியான தம்பதியர் வரும்போது என்னென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

Tags:    

Similar News