சிறப்புக் கட்டுரைகள்

அந்த ஓர் இரவில்...

Published On 2025-01-24 14:57 IST   |   Update On 2025-01-24 14:57:00 IST
  • கல்லூரிக்குச் சென்ற பின்பு நிறைய போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிட்டின.
  • வெளியூர்களில் மட்டுமல்ல, நாம் வசிக்கின்ற ஊர்களிலும் பொய் புரட்டு பித்தலாட்டம் அவலட்சணமான செயல்கள் எல்லாமே உண்டு.

'கடந்த காலத்தின் தவறுகளைச் சரிசெய்வது சாத்தியமற்றது. ஆனால், அவற்றினால் கிடைத்த அனுபவத்தின் மூலம் நாம் பயனடையலாம்'.

-ஜார்ஜ் வாஷிங்டன்

ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகின்றது. கற்றுக்கொண்டு யாரும் வாழ்க்கையைத் தொடங்குவதில்லை, அன்றாட வாழ்க்கையிலிருந்தே நாம் கற்றுக் கொள்கின்றோம்.

குழந்தைப் பருவத்திலிருந்தே 'கற்றல்' தொடங்கிவிடுகிறது. அன்றாட அனுபவங்கள் அரிய உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன. வீட்டிலிருந்து கடைவீதிக்குச் சென்று வருவதற்குள் எத்தனையோ காட்சிகளைப் பார்க்கின்றோம்.

முடித்திருத்தகத்தில் காத்திருக்கும் நேரத்தில், நம் செவிகளுக்குப் பல கதைகள் கிடைக்கின்றன. வீட்டு வாசலில் கீரைக் கூடையை இறக்கிவைத்துவிட்டு நிற்கும் கிழவியிடம், கீரை வாங்கும் சில நிமிட நேரத்திற்குள் அவள் தன் பாடுகளைக் கூறிவிடுகிறாள்.

பூங்காக்களிலும் பொழுதுபோக்குக் கூடங்களிலும் காதலர்கள் ஜோடி ஜோடியாய்க் கைகோத்துத் திரிகின்றனர். ஒரு ஐஸ்கிரீம் வாங்கி இருவரும் ருசிக்கின்றனர்; ரசிக்கின்றனர். வாய்ப்புக் கிடைக்காதவனுக்கோ ஏக்கம்.

ஒருவன் தன் தொழிலில் தான் அடைந்த நஷ்டத்தைச் சொல்லிப் புலம்புகின்றான். அவனுக்கு ஆறுதல் சொல்கின்றவன், அவன் கஷ்டங்களை எல்லாம் கதைபோல் கேட்கின்றான்.

கேட்பதிலும் பார்ப்பதிலும் பெறுகின்ற அறிவு ஒருவகை; பட்டறிவதால் பெறுகின்ற ஞானம் தனிவகை.

பள்ளிப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கிய எனக்கு, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்பதிலும் பரிசுகளைப் பெறுவதிலும் ஓர் அலாதி பிரியம்.

கல்லூரிக்குச் சென்ற பின்பு நிறைய போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிட்டின. பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பெற்ற பரிசுகள் ஏராளம்.

அப்போது, சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓர் இலக்கிய மாத இதழ், மாணவர்களுக்கான ஒரு கவிதைப் போட்டியை அறிவித்திருந்தது. அதற்கான தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும், உடனடியாகக் கவிதை எழுதி அஞ்சல் செய்து விட்டேன்.

ஒரு மாதம் கழித்து, என் பெயரில் கல்லூரி முகவரிக்கு அந்தப் பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. பிரித்துப் பார்த்த போது எனக்கு இன்ப அதிர்ச்சி. என் கவிதை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், சென்னையில் நடைபெறும் விழாவில் அதற்கான பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் அதில் தகவல் இருந்தது. விழா நாள், தேதி, நேரம் ஆகியவற்றுடன், எனக்கு முறையான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த நாளில் நெல்லையிலிருந்து சென்னைக்குப் பயணமானேன். செலவுக்குப் போதுமான பணம் தந்து, என் பெற்றோர் ரயில் நிலையம் வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தனர். சென்னைக்கு அதுதான் என் முதல் பயணம்.

மறுநாள் காலை சென்னை எழும்பூர் வந்து இறங்கியதும், அங்கு கண்ட ஜனத்திரளும் பரபரப்பும் என்னை வியப்பில் ஆழ்த்தின. நான் என் சூட்கேஸை தூக்கிக்கொண்டு வெளியே வரவும், ஆட்டோ டிரைவர்கள் வேகமாக என்னை நெருங்க, அவர்களில் ஒருவன் என் சூட்கேஸை வலுக்கட்டாயமாகப் பற்றிக்கொண்டு, 'எங்கப்பா போகணும்' என்றான்.

'லா்டஜூக்கு' என்றேன் தயக்கத்துடன்.

'எந்த லாட்ஜ்?'

'ஏதாவது...'

'சரி, வா...'

பிராட்வேயில் ஒரு லாட்ஜ் முன் என்னை இறக்கிவிட்டான். அவனிடம் பேரம் பேச எனக்குத் தெரியவில்லை. கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டேன். அந்த லாட்ஜ் பொறுப்பாளர் என்னை ஏற இறங்கப் பார்த்தார். கடிதத்தைக் காட்டினேன். பின்னர்தான் சம்மதித்தார். மூன்று நாட்களுக்கு அறை எடுத்தேன்.

மறுநாள் விழா. எனவே, அன்று பகல் முழுவதும் சென்னையில் சில முக்கிய இடங்களைக் கண்டு களித்தேன். மாலையில் மூர் மார்க்கெட் செல்ல ஆசைப்பட்டு, ஆட்டோவில் அங்கு சென்றேன். வெளியூர்க்காரன் என்பதைத் தெரிந்துகொண்ட அந்த ஆட்டோகாரனும், என்னிடம் மிக அதிகமாகவே வாங்கிக் கொண்டான்.

மூர் மார்கெட்டிற்குள் நுழைந்தபோது எனக்கு ஒரே ஆச்சரியம். எத்தனை எத்தனைக் கடைகள்! ஊசி பாசி, புடவை, துணிமணி, டேப் ரிக்கார்டர், பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் காஸ்மெடிக்ஸ் டாய்ஸ்... அப்பப்பா அங்கு இல்லாத பொருட்களே இல்லை. வேடிக்கை பார்த்தபடி நடந்து கொண்டிருந்தபோது, நன்கு பழக்கமானவனைப்போல் ஒருவன் சிரித்துக்கொண்டு என் முன்னே வந்து நின்றான். அவன் கையில் ஒரு 'ஷர்ட் பிட்' இருந்தது.

'வா சார்... ஷர்ட் பிட் பாக்குறியா?' என்றான்.

'இல்ல, வேண்டாம்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவன் என்னைத் தொடர்ந்தான்.

'சும்மா பாரு சார்... புடிச்சா வாங்கு' என்று சொல்லி, என் கையில் அந்த 'ஷர்ட் பிட்'டை தினித்துவிட்டான்.

அவன் சொன்னதுக்காக பார்த்துவிட்டு, அதனை அவனிடம் திருப்பிக் கொடுத்தேன். 'ஏம்ப்பா?' என்றான். 'வேண்டாம்' என்றேன். அவன் முகம் கடுகடுப்பானது.

'ஏய் இன்னா... பொருள தொட்டு வாங்கிக்கினு காசு குடுக்காம போயிடுவியா... இருநூறு எடு' என்று அவன் சொல்ல, வேறு நாலுபேர் அங்கு வந்துவிட்டனர்.

'இன்னாத்துக்கு வம்பு. நூத்தம்பது குடுத்துட்டு எடுத்துக்கினு போ' என்றான் அவர்களில் ஒருவன்.

அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க எனக்கு வழி தெரியவில்லை. எனது பேன்ட் பாக்கெட்டுகள் மற்றும் சட்டைப்பை ஆகியவற்றில் பணம் வைத்திருந்தேன். எதில் எவ்வளவு என்று தெரியாமல், வலதுபுற பேன்ட் பாக்கெட்டிலிருந்து மெல்ல பணத்தை எடுக்கவும் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு நகர்ந்தான் அவன். மற்ற நால்வரும் கலைந்து சென்றனர். முப்பது ரூபாய்கூட பெறாத அந்த ஷர்ட் பிட்டிற்கு முந்நூறு ரூபாயைப் பறிகொடுத்து நின்றேன். 'போதுமடா சாமி' என்று மூர் மார்க்கெட்டில் இருந்து வெளியேறி, சில பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு, ஆட்டோ பிடித்து லாட்ஜூக்கு சென்றுவிட்டேன். இங்கு எல்லா இடங்களிலும் ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் திரிகிறதே என்பதை எண்ணி மனம் சங்கடப்பட்டது.

 

கவிஞர் தியாரூ, 9940056332

மறுநாள், அந்தப் பத்திரிகை வளாகத்தில் பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கவிதைப் போட்டிக்கான முதல் பரிசினை மேடையில் பெற்றபோது பெருமிதமாக இருந்தது.

விழா முடிந்து லாட்ஜ் அறைக்கு வந்தேன். பொழுது போகவில்லை. அதே சாலையில் அங்குமிங்குமாகச் சிறிது நேரம் நடந்தேன். பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலில் இரவு உணவை முடித்துவிட்டு லாட்ஜூக்கு வந்தபின், 'சினிமாவுக்குப் போய்வரலாமே' என்ற எண்ணம் வந்தது. அப்போது இரவு ஒன்பது மணி இருக்கும்.

அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். சற்றுத் தொலைவில் ஒரு தியேட்டர். அந்தத் தியேட்டரில் பத்து மணிக் காட்சி, படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பன்னிரெண்டரை மணி. பைக்குகளில் வந்திருந்தவர்கள் விருட் விருட் என்று போய்விட்டனர். நடந்து வந்தவர்களும் ஒருசில நிமிடங்களில் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டனர். நான்மட்டும் தனியாளாய்...பயம் உந்தித் தள்ள வேக வேகமாக நடந்தேன். என்னைத் தவிர வேறு யாருமே இல்லை. பதற்றத்தில் பயம் அதிகமானது. மங்கலான தெருவிளக்கு விட்டுவிட்டு எரிந்தது.

எப்படியோ லாட்ஜை நெருங்கிவிட்டேன். ஓட்டமும் நடையுமாய்க் கிட்ட வந்தபோது - லாட்ஜூக்கு சற்று முன்னதாக, சிதிலமடைந்து பயனற்றுக் கிடந்த பிளாட்பாரத்தின் ஓரத்தில் கண்ட காட்சி என்னைத் தூக்கிவாரிப் போட்டது. அந்தரங்க விஷயம் அங்கே வெளியரங்கமாய் நடந்து கொண்டிருந்தது.

யாரோ ஒருவன் யாரோ ஒருத்தியுடன், உல்லாசத்தின் உச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். எனக்கு வியர்த்துக் கொட்டியது. தடதட என்று ஓடிச் சென்று லாட்ஜ் கதவைத் தட்டினேன். தூக்கத்திலிருந்து எழுந்து வந்து கதவைத் திறந்த லாட்ஜ் பொறுப்பாளருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

'எதுவும் சொல்லாம கொள்ளாம வெளியே போய்ட்டு நடுச்சாமத்துல வந்து நிக்கிறியே... எவனாவது அடிச்சிப்போட்டுப்போனா என்ன பண்ணுவே. இந்த மாதிரி விளையாட்டெல்லாம் இங்க வச்சிக்காத' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார்.

நான் என் அறைக்குச் சென்றபின்னும், எனக்குள் பதற்றம் தணியவில்லை. 'இப்படிகூட தெருவில் நடக்குமா! இது என்னடா ஊரு... மானங்கெட்ட பொழைப்பால்ல இருக்கு'. கண்ட காட்சியினால் ஏற்பட்ட அதிர்ச்சியோ கிளர்ச்சியோ, வெகுநேரம் வரை தூங்க முடியவில்லை.

காலையில் எழுந்ததும் வெளியே வந்து, ஆட்கள் புளங்காத அந்த பிளாட்பாரத்தைப் பார்த்தேன். மூட்டை முடிச்சுகளுடன் கந்தலான அழுக்கு விரிப்பின்மேல், ஒரு பிச்சைக்காரி படுத்திருந்தாள்.

என் முதல் சென்னைப் பயணம் மிக மிக வித்தியாசமான அனுபவங்களை எனக்குத் தந்தது. அவற்றிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. முன்பின் தெரியாத இடங்களுக்குச் செல்கின்ற போதும், சம்பந்தமே இல்லாமல் சிரித்துக்கொண்டு நம்மை நெருங்கி வருகின்றவர்களை எதிர்கொள்கின்ற தருணங்களிலும் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

வெளியூர்களுக்குப் பயணிக்கும்போது, கையிருப்பை ஒரே இடத்தில் வைக்கக்கூடாது. பேன்ட் உள்பாக்கெட், வெளி பாக்கெட், மணிபர்ஸ், சூட்கேஸ் என்று பலவற்றில் பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். தங்கியிருக்கும் இடத்தை விட்டு, இரவு ஒன்பது மணிக்குமேல் தனிநபராக எங்கும் செல்லக் கூடாது.

கடைவீதிகளில் நடக்கும்போது, 'வெளியூர் வாசி' என்பதைக் காட்டிக்கொண்டால், ஏமாற்றிப் பறிப்பதற்கென்றே அங்கே ஒருசிலர் இருப்பார்கள். விபரம் தெரியாதவன்போல் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு நின்றால், அடுத்த நிமிடமே எவனோ ஒருவன் நம் தோளில் ஏறி உட்கார்ந்து கொள்வான்.

வெளியூர்களில் மட்டுமல்ல, நாம் வசிக்கின்ற ஊர்களிலும் பொய் புரட்டு பித்தலாட்டம் அவலட்சணமான செயல்கள் எல்லாமே உண்டு. எனினும், உள்ளூரென்றால் உதவிக்குக் குடும்பத்தினர் நண்பர்கள் எனப் பலர் நமக்கு இருப்பார்கள். ஆனால், பழக்கமில்லாத வெளியூர்களில் நமக்கு நாம்தானே பாதுகாப்பு. எனவேதான், கூடுதல் கவனமும் சாதுர்யமும் அவசியமாகின்றன.

எல்லோருக்கும் அனுபவங்கள் ஏற்படுகின்றன. பல விஷயங்களைக் கேட்டு, பல விஷயங்களைச் செய்து பார்த்து, இனியும் அதைச் செய்வதா வேண்டாமா, செய்தால் என்ன பலன், செய்யாமலிருந்தால் என்ன நன்மை என்று தெரிந்து கொள்கின்றோம். நல்லவற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் காரியங்களில் இருந்து விலகிவிட வேண்டும்.

வாழ்வில் எல்லாமே அனுபவங்கள்தான்; பாடங்கள்தான். அனுபவங்களைப் பெறுவதற்காகவே தவறான செயல்களில் ஈடுபடுவது, வாழ்வை அழிவிற்குள் கொண்டு செல்லும். எதிர்பாராமல் ஏற்படுகின்ற மோசமான அனுபவங்களில் இருந்து, நாம் விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நமக்கும், நம்மைச் சார்ந்திருப்போர்க்கும் நம்பகமான பாதுகாப்பு.

Tags:    

Similar News

எது ஞானம்?