சிறப்புக் கட்டுரைகள்

எது ஞானம்?

Published On 2025-01-26 17:15 IST   |   Update On 2025-01-26 17:15:00 IST
  • ஞானம் அடைவதற்கு நிறையத் தோன்றும் கேள்விகளும்கூடப் படிக்கட்டுகள் ஆகலாம்.
  • நன்றின்பால் வாழ்க்கையைச் செலுத்தி உய்வடையச் செய்யும்.

ஞானத்தின் தன்மைகள் அறிய அறிவுத் தாகத்தோடு காத்திருக்கும் அன்பின் வாசகர்களே! வணக்கம்!.

ஞானம் என்பது நாம் அன்றாடம் வாசிப்புக்களாலும், ஆலோசனைகளாலும், ஆராய்ச்சிகளாலும் பெறுகிற அறிவுக்குச் சற்றுக் கூடிய நிலை ஆகும். இதனைப் 'பேரறிவு' என்று தூய தமிழில் கூறலாம். 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று வள்ளுவப் பெருந்தகை வலியுறுத்திக் குறிப்பிடும் 'அறிவு' இந்த ஞான நிலையையே ஆகும். "யார் சொன்னார்கள் என்பதை வைத்தோ, அல்லது சொல்லப்படும் பொருளின் தரத்தை வைத்தோ பொத்தாம் பொதுவாக ஒரு முடிவுக்கு வந்து விடாதே!; எதை யார் சொன்னாலும் உன்னிடமுள்ள உண்மை அறிவுகொண்டு, அதாவது சொந்த அறிவுகொண்டு ஆழ்ந்திருக்கும் மெய்ப்பொருளைக் காண முற்படு!" என்பதே வள்ளுவப் பெருமகனார் பயன்படுத்த வற்புறுத்தும் 'ஞான நிலை' ஆகும்.

ஞானம் என்பது அன்றாட அறிவுக்கும் மேம்பட்ட 'பேரறிவு நிலை' என்றால், அதனைக் கைவரப்பெறுவதற்கு அறிவின் முதிர்ந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டுமோ? என்று சிலருக்கு ஐயம் வரலாம். ஞானம் என்பது ஞானியருக்கு மட்டுமே வசப்படுகிற சங்கதி; அதனைப் பெறுவதற்குத் துறவு நிலையை மேற்கொள்ள வேண்டுமோ? அல்லது காடு மலைகளுக்குச் சென்று துறவிகளைச் சந்தித்து அவர்களிடம் ஞானம் கற்றுவர வேண்டுமோ? என்றெல்லாம்கூடக் கேள்விகள் தோன்றலாம். ஞானம் அடைவதற்கு நிறையத் தோன்றும் கேள்விகளும்கூடப் படிக்கட்டுகள் ஆகலாம்.

ஞானம் என்பது, இவருக்கு வரும்!; இவருக்கு வராது! என்கிற இன வர்ண பேதங்கள் கிடையாது; இந்த வயதில்தான் வரும்!; இந்தப் படிப்பில் தான் வரும் என்கிற காலக் கட்டாயங்களும் கிடையாது; இளம் வயதிலேயே பக்திஞானம் முற்றப்பெற்ற திருஞானசம்பந்தரும் நம் வரலாற்றில் உண்டு; அவரது காலத்திலேயே, பழுத்த வயதில் தொண்டு செய்து ஞானம் அடைந்த திருநாவுக்கரசு பெருமானின் வரலாறும் நமக்குத் தெரியும்.. ஞானம் என்பது ஒருவரிடமுள்ள அறிவும் அனுபவமும் ஒருங்கிணைந்து உளவியலில் ஏற்படுத்துகின்ற உன்னத நிலை ஆகும். அந்த அறிவும் அனுபவமும் சொந்த நிலையில் பெற்றவையாக இருக்கலாம்; அல்லது காண்பன, கற்பன வாயிலாகப் பெற்றவையாகவும் இருக்கலாம். எல்லாருக்கும் அறிவிருக்கலாம்; எல்லாருக்கும் அனுபவமும் இருக்கலாம்; ஆயினும் எல்லாரும் ஞானி ஆகிவிட முடியாது. பெற்றுள்ள அறிவையும் அனுபவத்தையும் கொண்டு அவற்றை வாழ்வியலில் எப்படிக் கடைப்பிடித்துக் கையாளுகிறோம் என்பதைப்பொறுத்தே ஞானம் வெளிப்பட்டு நிற்கும். பாலில் இருந்து நெய் எடுப்பதுபோல இதற்குப் பக்குவப் படிநிலைகள் உண்டு.

வாழ்வில் பலதுறைகள் உள்ளன; ஆனால் எல்லாத்துறைகளிலும் ஒட்டுமொத்த ஞானம் பெற்றோர் எண்ணிக்கை என்பது மிகமிகக் குறைவு. ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவர் ஆழ்ந்த நுட்பங்கள் கற்றவராகவும் சிறப்பறிவு உடையவராகவும் திகழும்போது, அவர் ஆழ்ந்த ஞானம் மிக்கவர் என்று கொண்டாடப்படுவார். ஒருவர் தான் சார்ந்துள்ள ஓவியம், நாட்டியம், பாட்டு, நாடகம், இசை போன்ற துறைகளில் சிறந்து விளங்கினால் அவரை நாம் 'கலை ஞானம் மிக்கவர்' என்று பாராட்டுகிறோம். அறிவியல் துறையில் சிறந்திருப்போரை 'அறிவியல் ஞானம் மிக்கோர்' என்றும், ஆழ்ந்த பொருள்கள் குறித்து ஆழமாக எழுதுவோரையும் பேசுவோரையும் 'விஷய ஞானம் உள்ளவர்' என்றும் குறிப்பிட்டுச் சொல்வோம். அந்த வகையில் இசை ஞானி, கலை ஞானி, அரசியல் ஞானி, விஞ்ஞானி, மெய்ஞானி எனப் பல ஞானியர் உண்டு. தத்துவத்தில், கல்வியில், ஆன்மிகத்தில் சிறந்திருக்கும் தன்மை, தத்துவ ஞானம், கல்வி ஞானம், கேள்வி ஞானம், ஆத்ம ஞானம் போன்ற பல்வேறு பொருண்மைகளில் விதந்து பாராட்டப் படுகின்றன.

எதை எடுத்துக்கொண்டாலும் அதில் நேர்த்தியான ஈடுபாட்டையும், ஆழ்ந்த நுட்பங்களையும் வெளிப்படுத்தி நிற்பதே ஞானம். ஞானம் என்பது விஷயங்களின் துல்லியத்தை வெளிப்படுத்துவதும் கண்டறிவதும் மட்டுமல்ல; அந்த அறிவில் ஆழ்ந்திருக்கும் உண்மையினை உணரச் செய்வதும் ஆகும். இத்தகு ஞானம் அடைவதற்குப் பல படிநிலைப் பயிற்சிகளில் நாம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். ஞானம் என்பது பொருள்களை அறியும் அறிவு மட்டுமல்ல; பொருள்களுக்கு அப்பாலுள்ள அர்த்தப்பாடுகளையும் உணர்ந்து அறிவதும் ஆகும்.

சுந்தர ஆவுடையப்பன்

ஒரு துறவி ஒரு காட்டில் ஓர் ஆசிரமம் அமைத்துச் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். ஒருநாள் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அழைத்து, " அதோ அங்கே தொலைவில் நகரத்தில் ஓர் அரண்மனை தெரிகிறதே அங்கு சென்று ஞானம் கற்று வா!" என்று கூறினார். " குருவே! முற்றும் துறந்த துறவியும் ஞானியுமான உங்களிடம் கற்க முடியாத ஞானத்தையா நான் அங்கு அரண்மனைக்குச் சென்று கற்று வரப் போகிறேன்?" என்று எதிர்க்கேள்வி கேட்டார் சீடர். "நான் சொன்னதைச் செய்!; அங்கே அந்த நாட்டு அரசனிடம் நீ ஞானம் கற்று வரலாம்! "என்றார் துறவி. அப்படி அந்த அரசன் ஞானியாக இருந்திருந்தால் துறவியாக அல்லவா மாறியிருப்பான்; அரசனாக இருக்க மாட்டானே! என்று யோசித்துக் கொண்டே காட்டிலிருந்து அரண்மனை நோக்கி நடந்தார் சீடர்.

சீடர் அரண்மனையை அடையும்போது நன்றாக இருட்டிவிட்டது; உள்ளே அரசரைக் காணச் சென்றால், வழிநெடுகக் குடியும் விருந்துமாகக் குதூகலமாக இருந்தது அரண்மனை. அரசரைப் பார்த்துத், தன்னை வனத்திலுள்ள துறவி அனுப்பி வைத்திருப்பதாகவும், சில நாள்கள் அரண்மனையில் விருந்தினனாகத் தங்க அனுமதிக்க வேண்டுமென்றும் கூறினார் சீடர். இளந்துறவியை வணங்கிய அரசர், அமைச்சரை அழைத்து, சீடர் தங்குவதற்குரிய அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு உத்தரவிட்டார். வசதிமிக்க அந்த அரண்மனையில், அன்றிரவு வேண்டா வெறுப்புடன் தங்கினார் இளந்துறவி.

காலை விடிந்ததும், இளந்துறவி தங்கியிருந்த அறைக்கு வந்த அரசர், அவரை வணங்கி, "வாருங்கள் துறவியாரே அருகேயுள்ள ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வரலாம்" என்று அழைத்தார். அரசரும் துறவியும் அரண்மனையை விட்டு வெளியே வந்து ஆற்றை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, திரும்பி அரண்மனையைப் பார்த்த அரசன் இளந்துறவியையும் திரும்பிப் பார்க்குமாறு கூறினான். அங்கே அரண்மனை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

"ஐயோ! அரண்மனை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறதே! "என்று பதறிப்போய்க் கதறினார் இளந்துறவி. எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் அரசன் இளந்துறவியைப் பார்த்து "அரண்மனை எரிவதற்கு நீங்கள் ஏன் இப்படிப் பதறுகிறீர்கள்?" என்று கேட்டான். " ஐயா என்னுடைய ஒரே ஒரு காவி ஆடையை அரண்மனையில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்!; இந்நேரம் அந்தத் துணி எரிந்து போயிருக்குமே!; அதற்காகப் பதறுகிறேன்" என்று கூறிய இளந்துறவி, அரசனைப் பார்த்து, " அது சரி! நானாவது என்னுடைய அந்தக் கந்தல் காவி உடைக்காகப் பதறுகிறேன்! ஆனால் ஒட்டுமொத்த அரண்மனைக்கும் சொந்தக்காரனாகிய அரசன், நீ எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் இருக்கிறாயே! அது எப்படி?" என்று கேட்டான்.

சிரித்துக்கொண்டே அரசன் பதில் சொன்னான், " ஐயா இளந்துறவியே! என்னைப் பொறுத்தவரை, அது 'அரண்மனை என்றால் அரண்மனை!' அவ்வளவுதான். இங்கு 'நான் என்பது எப்போதும் நான் மட்டுமே!'. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளும் பழக்கமோ, ஒன்றின்மீது பற்று வைத்து ஆசையில் திளைத்து, பிறகு இழப்பில் பரிதவிக்கும் வழக்கமோ என்னிடத்தில் எப்போதும் இல்லை!" என்று உறுதியாகத் தெரிவித்தான் அரசன். " பெற்றேன்! ஞானம் பெற்றேன்! இந்த அரசனிடமிருந்து ஞானம் பெற்றேன்!. துறவில் சிறந்து காட்டில் வாழும், வேறு எந்த ஞானியரிடமிருந்தும் பெற முடியாத ஆத்ம ஞானத்தை இல்லற வாசியாக நாட்டை ஆளும் இந்த அரசனிடமிருந்து இப்போது பெற்றேன்!" என்று கூறிக்கொண்டே காட்டை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டார் இளந்துறவி.

எல்லாப் பற்றையும் விட்டொழித்த அந்த இளந்துறவி, துறவின் அடையாளமாகத் தன்னிடமிருந்த ஒற்றைக் காவியுடை மீது கொண்டிருந்த பற்றை அழிக்க முடியாதபோது, அரண்மனை அழிந்தபோதும், பற்றொழித்த நிலையில் பதறாமல் நின்ற அரசன் பெரும் ஞானியல்லவா?.

"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்"

என்பது வள்ளுவத்தின் ஞானப் பெருக்கல்லவா? ஆசையே துன்பத்திற்கு அடித்தளம்; அந்த ஆசை அகற்றலே! பற்றை ஒழித்தலே ஞானத்தின் திறவுகோல்!. பொருள்களினாலேயே துன்பங்கள் பெருகுகின்றன என்றால், அவற்றின்மீதான விருப்பங்களையும் ஆசைகளையும் நீக்கி விட்டாலே இன்பப் பெருக்குதானே! அதுவே ஞானப் பெருக்கும்தானே!. உண்மையான ஞானம், காடுகளில் தனித்திருந்து பெறுவதைவிட, மனிதரோடு மனிதராய்ச் சமூகத்தில் கலந்திருந்து பெறுவதே ஆகும். இன்னும் சொல்லப்போனால் மனிதரோடு மனிதராய்ச் சகித்திருந்து பெறுவதும் ஆகும். அந்த வகையில் மகாத்மா காந்தியடிகள் விடுதலைப்போரில் தவமிருந்து பெற்ற ஞானம், அகிம்சை, சகிப்புத் தன்மை, சத்தியாக்கிரகம் ஆகியவை தானே!.

எல்லாவற்றையும் காட்சி அளவையில் கண்டு, மூளைக்கும், மனத்திற்கும் அனுப்பி, பொருள்கள் குறித்த கருத்துருக்களை உருவாக்கிக் கொள்ள நமக்கு கண்கள் உதவுகின்றன. அறிந்துகொண்டு அறிவு பெறும் இந்த இரண்டு கண்களுக்கு அப்பால், ஒவ்வொரு மனிதரும் மூன்றாவது கண்ணாய் ஞானக்கண் பெற வேண்டும் என்கின்றோம். அதுவே நீதியின் கண்ணாகச் சமுதாயம் காக்கும்.

புராணக் கண்ணோட்டத்தில் சிவனுக்கு மூன்றாவது கண்ணாக நெற்றிக்கண்ணும் இருப்பதனால் அவன் முக்கண்ணன் என்று போற்றப்படுகின்றான். கடவுளுக்கு மட்டுமல்ல; கடவுளின் படைப்பான மனிதருக்கும் முக்கண் தேவை; அந்த மூன்றாவது கண்ணே ஞானக்கண்.

அது வேண்டுதல் வேண்டாமை இல்லாத நிலையில் எல்லாரையும் சமமாகப் பார்த்து, பேதங்களற்று மனிதம் போற்றுகிற மகத்தான செயலைச் செய்யும். உண்மையைத் தவிர வேறு எப்பக்கமும் சாயாது, எவர்மீதும், எப்பற்றையும் வைக்காது, நன்றின்பால் வாழ்க்கையைச் செலுத்தி உய்வடையச் செய்யும்.

ஞானம் என்பது செருக்கை ஏற்படுத்தாது; உலகிலுள்ள ஞானத்தையெல்லாம் ஒப்பிடு கையில் நம்மிடமுள்ளது ஒரு ஞானமே இல்லை என்று அடங்கிப்போகக் கற்பிக்கும். தமக்கு மட்டுமே ஆக்கம் விளைகிற செயல்களை விடுத்து, ஒட்டுமொத்த மானுடமே வளம்பெறும் வகையில் செயல்களில் ஈடுபடும். பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் அன்பைப் போதிக்கும் அறிவுநிலையே ஞான நிலை ஆகும்.

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News