சோதனைக்குழாய் குழந்தைக்கு தம்பதிகள் தயாராவது எப்படி?
- சோதனைக்குழாய் குழந்தைக்கு பல படிநிலைகள் உள்ளன.
- உங்கள் உடல் எடை குறைந்து சீரான பிறகு சிகிச்சையை தொடங்கினால் வெற்றி விகிதம் அதிகமாகும்.
குழந்தையின்மை சிகிச்சையை பொறுத்தவரையில் பொதுவாக பெண்கள் எல்லோருமே சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறோம். அதே நேரத்தில் சோதனைக்குழாய் குழந்தை என்ற வகையில் செயற்கை கருத்தரிப்பு முறைகளை எப்படி செய்கிறார்கள்? இதற்கான வழிமுறைகள் என்ன? இதற்கு ஒவ்வொரு நிலையாக எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்பது பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. இது தொடர்பான சந்தேகங்களும் பலருக்கு இருக்கிறது. எனவே சோதனைக்குழாய் குழந்தைக்கு தம்பதிகள் தயாராவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஐ.வி.எப், இக்சி நவீன சிகிச்சை முறைகளில் செயற்கை கருத்தரிப்பு:
இன்றைக்கு நீங்கள் உங்களுடைய மருத்துவரை அணுகும்போது, உங்களுக்கு ஐ.வி.எப். முறையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும், உங்களின் கருக்குழாயில் பிரச்சினை இருக்கிறது, உங்களின் கணவரிடம் விந்தணு மிகவும் குறைவாக இருக்கிறது என்கிற நிலையில் ஐ.வி.எப்., இக்சி என்ற நவீன சிகிச்சை முறைகளில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பேறு பெறலாம்.
அதுதான் உங்களுக்கான குழந்தையின்மை சிகிச்சை என்று முடிவு செய்து விட்டால், என்னென்ன முறைகளில் இதை செய்வார்கள் என சில விளக்கங்களை பார்க்கலாம். ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு வெற்றிகரமாக அமைவதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. ஒரு சிகிச்சையின் முழுமையான வெற்றியானது 100க்கு 100 சதவீதம் சாத்தியம் என்பது எப்போதும் ஒரே முறையில் வருவது கிடையாது.
ஆனால் உங்களுடைய வயது, உங்கள் ஆரோக்கியத்துக்கான உடல் ரீதியான விஷயங்கள், உங்களுடைய கருமுட்டைகள், உங்கள் கணவரின் விந்தணுக்கள், உங்களின் கர்ப்பப்பை ஆகியவை சார்ந்த அனைத்து விஷயங்களையும் வைத்து தான் வெற்றி விகிதத்தை கணக்கிடுவார்கள். இந்த வெற்றி விகிதத்தை திட்டவட்டமான வெற்றி விகிதத்துக்கு கொண்டு செல்வது எப்படி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
செயற்கை கருத்தரிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
சோதனைக்குழாய் குழந்தைக்கு பல படிநிலைகள் உள்ளன. பொதுவாக மருத்துவரிடம் செல்பவர்கள் டாக்டர் எனக்கு ஐ.வி.எப். சிகிச்சை செய்ய வேண்டும். இதற்காக என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். முதலில் ஐ.வி.எப். சிகிச்சையை தொடங்கும் முன்பு ஒரு சரியான மதிப்பீட்டை கண்டிப்பாக உங்கள் மருத்துவர்கள் உங்களுக்கு செய்திருப்பார்கள். அதில் உங்களின் கர்ப்பப்பை, சினைப்பை, ஹார்மோன்கள், கருமுட்டைகள் ஆகிய எல்லா விஷயங்களையும் பரிசோதனை செய்து அதில் என்னென்ன குறைகள் இருக்கிறதோ அதை சரிசெய்து இருப்பார்கள்.
அடுத்ததாக பெண்களுக்கு கரு முட்டைகளை எடுத்து கருவாக்கம் செய்வது வரை பல வழிமுறைகள் உள்ளன. ஏ.ஆர்.டி. (உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம்) சட்டம் 2022ன் படி ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்தால் முக்கியமான பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விளக்கத்தை கண்டிப்பாக உங்கள் மருத்துவரிடம் கேட்டு பெற வேண்டும். அதற்கு ஒரு சில படிவங்களை மருத்துவ துறையில் இருந்தே கொடுத்திருக்கிறார்கள்.
அரசின் ஏ.ஆர்.டி. சட்டத்தின் படி இந்த படிவத்தில் செயற்கை கருத்தரிப்பு முறைகள் பற்றிய சில விளக்கங்கள் இருக்கும். அந்த விளக்கங்களை உங்கள் மருத்துவர் உங்களிடம் எடுத்து கூறுவார். மேலும் ஒரு மருத்துவ ஆலோசகரும் கவுன்சிலிங் மூலம் விளக்கம் கொடுப்பார். அதில் என்ன வழிமுறைகள் உள்ளன? இதில் உள்ள சிக்கல்கள் என்ன? சவால்கள் என்ன? ஆகிய எல்லா விஷயங்களையும் அவர்கள் சொல்வார்கள்.
அந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி உங்களுக்கு புரிய வைத்த பிறகு, அதை புரிந்து கொண்டேன் என்று நீங்கள் கையெழுத்து போட வேண்டும். நீங்கள் கையெழுத்து போட்ட பிறகு தான் இந்த சிகிச்சை முறைக்கு உங்களை பரிந்துரை செய்வார்கள். இதுதான் ஐ.வி.எப். சிகிச்சையின் முக்கியமான முதல் படிநிலை ஆகும்.
ஆய்வகத்தில் நடைபெறும் கருத்தரிப்பு முறை:
அடுத்த படிநிலை உங்களுடைய கருமுட்டைகளை எடுப்பது ஆகும். அதாவது கருமுட்டைகளை வளர வைத்து கருமுட்டைகளை எடுப்பார்கள். இன்றைக்கு ஐ.வி.எப். சிகிச்சை செய்கிறோம் என்றால் ஒரு முட்டை, ஒரு விந்து ஆகியவற்றை சேர்த்து செய்வதுதான் ஐ.வி.எப். ஆகும்.
ஐ.வி.எப். முறையில் ஒரு முட்டையுடன் 10 ஆயிரம் விந்தணுக்களை போட்டு அதில் ஒரு விந்தணு உள்ளே சென்று முட்டையை கருவாக்கி அந்த கருவை 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை இன்குபேட்டரில் வளரவைத்து கர்ப்பப்பையில் வைப்போம். அதாவது கருக்குழாயில் நடக்கும் இந்த விஷயத்தை ஆய்வகத்தில் செய்து கருவை கர்ப்பப்பையில் வைக்கும் முறை தான் இந்த ஐ.வி.எப். செயற்கை கருத்தரித்தல் முறையாகும். நமது உடலில் நடக்கும் கருத்தரிப்பு முறையை இன் வைவோ என்று அழைக்கிறோம். வெளியில் ஆய்வகத்தில் நடக்கும் கருத்தரிப்பு முறை இன் விட்ரோ ஆகும்.
ஐ.வி.எப். என்பதன் விரிவாக்கம் தான் இன் விட்ரோ பெர்ட்டிலைசேஷன். ஐ.வி.எப் முறையில் கருக்குழாயில் அடைப்பு என்றால் விந்தணுக்கள் நன்றாக இருக்கும், நிறைய விந்தணுக்களை போட்டு ஐ.வி.எப். முறையில் கருத்தரிக்க வைக்கப்படும். இதுவே விந்தணுக்கள் குறைவாக இருக்கும் தம்பதியினருக்கு இன்ட்ரா சைட்டோபி ளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜக்ஷன் (ஐசிஎஸ்ஐ) என்கிற முறை பயன்படுத்தப்படும்.
இதனுடைய செயல்முறை எல்லாம் ஒன்றுதான். ஆய்வகத்தில் முட்டையை எடுத்து, அந்த முட்டையில் ஒரு விந்தணுவை செலுத்தி அதை 3 முதல் 5 நாட்கள் இன்குபேட்டரில் வளர வைத்து பெண்ணின் கர்ப்பப்பையில் வைப்போம். இது இக்சி முறையாகும். இந்த முறைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்னவென்றால், முட்டைகளை எடுக்க வேண்டும், விந்தணுக்களை தயார்படுத்த வேண்டும், ஆய்வகத்தில் செயல்முறைப்படுத்த வேண்டும், இன்குபேட்டரில் வளரவைக்க வேண்டும், வளர்ந்த கருவை கர்ப்பப்பையில் வைக்க வேண்டும். இதுதான் ஒவ்வொரு படிநிலையான விஷயங்கள் ஆகும்.
உடல் நிலையை சீராக வைக்க ஐ.வி.எப். சரிபார்ப்பு பட்டியல்:
இதில் முதல் படிமுறை என்னவென்றால் உங்களை எல்லா விஷயங்களுக்கும் தயார்படுத்தி விட்டார்கள். அதன் பிறகு அடிப்படையான ஐ.வி.எப். சரிபார்ப்பு பட்டியல் இருக்கிறது. அந்த பட்டியல் படி உங்களுடைய உடல்நிலை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வார்கள். கர்ப்பப்பை சீராக இருக்கிறதா என்று ஒரு எண்டோஸ்கோபி செய்திருப்பார்கள், தேவைப்பட்டால் உங்கள் கர்ப்பப்பையில் தொற்றுக்கள் இருக்கிறதா என்றும் பார்த்துக்கொள்வார்கள். பின்னர் உங்கள் கணவரின் விந்தணுக்களில் தொற்றுக்கள் இருக்கிறதா என்பதையும் அறிந்து கொள்வார்கள். உங்கள் உடலில் சர்க்கரை அளவு, தைராய்டு உள்ளிட்ட விஷயங்கள் சீராக இருக்கிறதா என்பதையும் பரிசோதித்து முழுமையாக உங்களை சரி செய்த பிறகு, இந்த சிகிச்சை முறைக்கு உங்களை ஆரம்ப நிலைக்கு கொண்டு வருவார்கள். அதன் பிறகுதான் உங்களுக்கு சிகிச்சை அளிக்க தொடங்குவார்கள். இதில் முக்கியமான ஒன்று... உங்கள் உடல் எடை குறைந்து சீரான பிறகு சிகிச்சையை தொடங்கினால் வெற்றி விகிதம் அதிகமாகும். இந்த வகையில் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு முறையின் ஆரம்பமே கரு முட்டைகளின் வளர்ச்சி தான். அதாவது இதை கன்ட்ரோல் ஓவரியன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் என்று சொல்வோம்.
பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ஒரு முட்டைதான் வரும். இந்த ஒரு முட்டையை வைத்து ஐ.வி.எப். செய்தால் அந்த முட்டை கருவாகலாம் அல்லது ஆகாமலும் போகலாம். ஏனென்றால் 80 சதவீத கருத்தரித்தலை பார்த்தோமென்றால் ஒரு முட்டை இருக்கும் நிலையில் அது கருவாகாவிட்டால் அந்த செயல்முறையே வீணாகி விடும். ஏனென்றால் இதெல்லாம் விலை உயர்ந்த செயல்முறை ஆகும். அந்த வகையில் நிறைய கருமுட்டைகள் உருவானால் நிறைய முட்டைகளோடு விந்துக்களை சேர்த்து எளிதாக கருவாக்கம் செய்ய முடியும்.
சோதனைக்குழாய் நவீன சிகிச்சை முறையில் கருவாக்கம் செய்யும் ஒவ்வொரு வழிமுறைகளையும் அடுத்த வாரம் விரிவாக பார்ப்போம்.