கிம்ஹேயின் கல்லறை சொல்லும் தமிழ் வரலாறு
- எப்பொழுதும் மூட நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவளில்லை அவள்.
- பொதுவாகவே மக்கள் ‘என்னுடையது’ என்று எதைப்பற்றி நினைக்கிறார்களோ அதனுடன் தான் உணர்ச்சி அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டிற்கு முன் வாழ்ந்த ஒருவரின் கல்லறைக்கு இத்துணை மதிப்புடனும், மரியாதையுடனும் தெய்வமாக வழிபடுகிறார்கள் என்றால் அப்படியென்னதான் நடந்திருக்கும் என்ற ஆவலுடன் அனைவரும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருக்க ஆய்வாளரும், வழிகாட்டியுமான மூன் யாங்க் தன்னை அறிமுகம் செய்துகொண்டு அதற்கான விளக்கத்தை அளித்தபோது ஒரு சிலரின் முகத்தில், கிண்டலான ஒரு நமட்டுச் சிரிப்புடன் ஏதோ கதை விடுகிறார்கள் போல என்பதற்கான பிரதிபலிப்பும் இருந்தது. ஆனாலும் யாங்க் ஒரு ஆய்வாளராகவும் இருந்ததால், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் நம்பிக்கையுடன், கடமையே கண்ணாக உரையாடிக் கொண்டிருந்தார். சாலினியும் ஒரு இயல்பான மனநிலையுடன்தான் அதனைக் கேட்க ஆரம்பித்திருந்தாள். ஆனாலும் அவளுடைய ஆழ்மனதில் இனம் புரியாத ஒரு பரபரப்பும் இருக்கத்தான் செய்தது.
கி.மு.48-ம் ஆண்டில்தான் இந்த வரலாற்றுத் தொன்மம் ஆரம்பமாகிறது. ஆனால் அதற்கு முன்பாக கொரியாவின் தென்பகுதியிலிருந்த கிம்கே எனும் பகுதி ஒரு நாடாகவோ அல்லது பேரரசாகவோ உருவாகாமல் ஒன்பது தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. வாழ்வியல் மரபில் கொரியா என்ற நாடு வெளியுலகுக்குத் தெரியாத நாடாகவே இருந்தது. அந்த காலகட்டத்தில்தான் இளவரசி ஒருவர் வெகு தொலைவு கடல் பயணம் செய்து கொரியாவில் பூசன் என்ற பகுதியில் கரையிறங்கி கயாவின் அரசனை மணந்து கொரிய அரசியாக அரியணை ஏறுகிறார். அந்த நாட்டை மிகவும் நேசித்தவர், 157 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்து நாட்டை மிகவும் செல்வச் செழிப்புடன் மேன்மையடையச் செய்ததாகக் கூறுகிறார். தாம் வாழச் சென்ற அந்நாட்டை தொழில் வளர்ச்சியிலும், சிறந்த கவின்கலை மரபு வளர்ச்சியிலும் செழித்த நகர்ப்புற நாடாக மாற்றியதால் அந்த அரசியை தங்கள் நாடு போற்றி வணங்குகிறது என்ற வரலாற்றுச் செய்தியை கர்மச் சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் யாங்க்.
எல்லோரும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருக்க, ஆந்திர மாநிலத்திலிருந்து வந்திருந்த ஒரு பெண் மட்டும், "இதற்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கிறது. உண்மையில் நம்பக்கூடிய செய்தியாக இல்லையே? நீங்கள் ஒரு ஆய்வாளராக இருப்பதனால் ஆதாரமில்லாமல் இவ்வளவு உறுதியாகக் கூறமாட்டீர்களே என்றுதான் கேட்கிறேன். தவறாக எண்ணாதீர்கள்" என்றார்.
மெல்லிய புன்னகையை உதிர்த்த யாங்க், "உண்மைதான். என் நண்பர் சொன்ன அந்த சுவையான நிகழ்வை நான் கேட்டிராமல் இருந்திருந்தால், மேற்கொண்டு இதில் ஆழ்ந்து நோக்காமல், ஒருவேளை நானும் உங்களைப் போலத்தான் ஐயப்பட்டிருப்பேன்" என்றார்.
"ஓ, அப்படியா. முதலில் அதைச் சொல்லுங்கள், கேட்போம்" என்றாள் அந்த ஆந்திரப் பெண்மணி.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஜங்க் நாம் கிம் என்ற நண்பர் கனடா நாட்டில் டொராண்டோ (Toronto) எனும் நகரில் தொடருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது திடீரென "அம்மா" என்ற குரல் கேட்டு சட்டெனத் திரும்பி தேட ஆரம்பிக்கிறார். அந்தக் கூட்டத்தில் ஒரு கொரிய முகம் கிடைக்கலாம் என்று ஆர்வமாகத் தேடுகிறார். ஆனால் அவர் தேடிய அந்த கொரிய முகம் கிடைக்கவே இல்லை. ஏதோ நினைவின் பிடியில் தனக்கு அப்படியொரு குரல் கேட்டிருக்கலாம் என்று நினைத்து அமைதி ஆனார். ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் அம்மா என்ற அதே குரல். நிச்சயம் இது நினைவு அல்ல என்று தெளிவாகத் தெரிய, குரல் வந்த திசையில் குழந்தை ஒன்று அழகாகத் தன் அம்மாவை அழைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் கொரியர்கள் அல்லர் என்பது சர்வ நிச்சயம். ஆர்வம் மேலிட அவர்களை நெருங்கி பேச்சு கொடுக்கிறார். அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்துகொள்கிறார். அவர்கள் பேசும் மொழியை தன்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அவர்களுக்குள் நடந்த உரையாடலை கவனித்துக்கொண்டு வந்தபோது தங்கள் கொரிய மொழிக்கு இணையான அவர்களுடைய பேச்சு வழக்கு மொழியும் உள்ளதை உணர முடிந்தது. மேலும் சரியாகப் புரிந்துகொள்ள நேரே ஒரு புத்தகக் கடைக்குச் சென்று, அங்கு தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்- தமிழ் என இரு அகராதிகளையும் வாங்குகிறார். சர்வ சாதாரணமாக 500 தமிழ் வார்த்தைகள் தங்கள் கொரிய மொழியைப் போன்றே அதே உச்சரிப்பும், அதே அர்த்தமும் கொண்டிருப்பதை அறிகிறார். அதைத் தொடர்ந்து கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையிலான ஒற்றுமைகள் என்ற தன் ஆய்வு ஏட்டையும் சமர்ப்பிக்கிறார்", என்று கூறி சற்று தயங்கி நிறுத்தியவர்,
"இதைவிட முக்கியமான ஒரு செய்தியையும் கூறுகிறேன் கேளுங்கள்" என்றவர்,
"கயா அரசியின் நினைவிடத்தில் இருந்து அவருடைய மரபணு மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது", என்ற ஆச்சரியமான தகவலையும் எடுத்துரைத்தார்.
அதன்படி 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொரியர்கள் ஒரு இந்திய மூதாதையரைக் கொண்டிருக்க முடியும் என்று கூறியுள்ளதாகவும், தென் கொரிய முன்னணி பத்திரிகையான ஜோங் ஆங் டெய்லி, பண்டைய அரச வம்சமான தெற்கு ஜியோங்சாங் மாகாணத்தில் கிம்ஹேயின் கல்லறையின் ஒரு தொல்பொருள் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள், கொரியர்கள் இந்திய, மலேசிய அல்லது தாய் போன்ற தென்னக அல்லது தென்கிழக்கு ஆசிய இனக்குழுக்களின் டி.என்.ஏ-வை கொண்டிருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்திருப்பதாக வெளியிட்டுள்ளனர். சியோல் தேசிய பல்கலைக்கழகத்தின் முனைவர் சீஓ ஜியோங்-சூன் மற்றும் ஹாலிம் பல்கலைக்கழகத்தின் கிம் ஜோங்-இல் ஆகியோர் ஆராய்ச்சி மேற்கொண்டது பற்றியும் கூறினார்.
"அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த கொரிய முன்னாள் ராணுவ வீரர் தன்னுடைய முன்னோர் குறித்து தொகுத்து வைத்திருந்த வரலாற்றின் 25 தொகுதியைக் கண்டுபிடித்துள்ளார். இதில் ஆச்சரியமான தகவல், கிம் என்ற அவர்தம் வம்சாவளியின் தொடக்கப் புள்ளியாக அவர் அறிந்தது, இந்தியாவில் இருந்து வந்தவர் என்று குறிப்பிடப்படும் இளவரசிதான்", என்றும் கூறியபோது அந்த ஆந்திரப் பெண்மணி உண்மையிலேயே அரண்டுப் போனவள், மெல்ல பின்வாங்கி, மேலும் அவர் கூறப்போவதை ஆர்வமுடன் கேட்கத் தயாரானாள். அரசியின் கல்லறையில் இருந்த கல்லடுக்கில் உள்ள கற்கள் தென் இந்தியாவைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆய்வாளர்களின் கருத்தையும் எடுத்துரைத்தார்.
மேலும், "இல்யோன் என்ற புத்தத் துறவியால் கி.பி.1206-1208-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் முப்பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான 'சாம்குக் யுசா' எனும் கொரிய வரலாற்று தொன்மத்தின்படி, சுரோ என்ற மன்னன் சீன நாட்டின் இறுதி தீபகற்பப் பகுதியான கொரிய நாட்டின் அரசன். திருமண வயதில் இருக்கும் மன்னன் தன் கனவில் கண்ட இளவரசியை மணமுடிக்கக் காத்திருக்கிறான். அதே சமயம் கயா நாட்டின் மேற்கு திசையில் தொலைதூரத்தில் இருந்த ஒரு நாட்டின் இளவரசியின் பெற்றோரின் கனவிலும் சுரோ என்ற அந்த மன்னன் வருகிறான். தெய்வ சங்கல்பமாக அதைக் கருதியவர்கள் மணமுடிக்கும்பொருட்டு தங்கள் மகளை கடல் கடந்து அனுப்ப முடிவெடுக்கின்றனர்", என்று சொல்லி முடிக்கிறார் யாங்க்.
அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சாலினி, 2000 ஆண்டுகளாக ஒரு அரசியை, அதுவும் அயலகத்தில் இருந்து வந்து தமது நாட்டிற்கு அரசியான ஒரு பெண்ணை இன்றளவிலும் நினைவில் வைத்திருப்பதோடு அல்லாமல் அப்பெண்ணின் கல்லறைக்கு இத்தனை மதிப்பும், மரியாதையும் கொடுத்து அப்பெண்ணை ஒரு தெய்வ நிலையில் வைத்திருக்கிறார்கள் என்றால் அவள் எத்தகையவளாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்க யாங்க்கிடம் பல தகவல்களைக் கேட்டு அறிந்து கொள்கிறாள். அங்கு பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள், அப்பெண் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டு சேமிக்கப்பட்டிருந்த பொருட்கள் என அனைத்தையும் மிக நுணுக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் கண்களில் தெறித்த மின்னல் கீற்றுகள் அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தது. அவள் நடையிலும், பேச்சிலும் ஒரு வித்தியாசமான மிடுக்கு வெளிப்பட்டது. ஏதோவொரு அதிசயம் நிகழப் போகிறது என்பதற்கான ஒரு சில அறிகுறிகளும் அனைவரையும் ஒரு எதிர்பார்ப்பின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருந்தது.
ஏனோ அந்த இடத்திற்குள் நுழைந்த நொடியிலிருந்து சாலினியின் மனதில் இனம் புரியாத ஒரு பரபரப்பு ஏற்பட்டதன் காரணம் அவளுக்கு விளங்கவில்லை. எப்பொழுதும் மூட நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவளில்லை அவள். ஆனாலும் தன் உடலினுள் ஏதோ ஒரு பெரிய சுமை ஏறிக்கொண்டது போன்ற உணர்வு புதிதாக இருந்தது.
பவளசங்கரி, 63743 81820
"என்ன இது, நான் நானாக இல்லாதது போல் தோன்றுகிறதே? ஏதோ குழப்பமாக இருக்கிறதே. இந்த இடத்தின் அதிர்வலைகள் என்னை எங்கோ இழுத்துச் செல்வது போல் உணர்த்துகிறதே? இது நல்லதற்கா, இந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விட வேண்டும் என்று தோன்றினாலும், ஏதோ ஒரு சக்தி என்னை இழுத்துப் பிடிக்கிறதே" என்று குழம்பினாள்.
ஒரு முறை சக தோழி ஒருவர் தனது உறவினரின் பெண் குழந்தைக்கு முற்பிறவி நினைவு வந்துவிட்டதாகவும், 7 வயது குழந்தையான அவள் தனது கணவனும், குழந்தையும் இன்ன ஊரில் இருக்கிறார்கள், தன்னை சொத்திற்காக உறவினர் ஒருவரே கொன்றுவிட்டார் என்றும் நான் இப்போதே சென்று என் கணவனையும், குழந்தையையும் பார்த்தே தீர வேண்டும் என்று அடம் பிடித்ததாகவும், வேறு வழியின்றி அவள் பெற்றோர் அந்தக் குழந்தை சொன்ன இடத்திற்கு அவளை கூட்டிச் சென்று காட்டியிருக்கிறார்கள். மிக ஆச்சரியமாக அந்த பெண் குழந்தை சொன்ன அனைத்துத் தகவல்களும் உண்மை என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு வந்ததாகவும் சொன்னதைக் கேட்டு தனக்கு சிரிப்பு வந்ததும், தோழியிடம் நக்கலாக பதில் சொன்னதும் ஏனோ சம்பந்தமில்லாமல் அப்போது நினைவுக்கு வந்தது.
அப்படியானால் அந்தக் குழந்தையை அவள் முன்னாள் கணவனிடமே விட்டுவிட்டு வந்து விட்டார்களா உங்கள் உறவினர் என்று கேட்டதும்,
பொதுவாகவே மக்கள் 'என்னுடையது' என்று எதைப்பற்றி நினைக்கிறார்களோ அதனுடன் தான் உணர்ச்சி அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஏன் படித்தவர்களெல்லாம் கூட இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லி கடுப்பேற்றிக் கொண்டிருந்ததும் நினைவிற்கு வந்தது. ஆனால் இப்படியொரு சம்பவம் தனக்கே நேரப்போகிறது என்பதை அறிந்திருந்தால் சாலினி நிச்சயம் அன்று இப்படியெல்லாம் பேசியிருந்திருக்கவே மாட்டாள் அல்லவா!
(தொடரும்)