- நான் தான் திவ்யாவை கடத்துன நல்லவன் பேசுறன்.
- நல்லா தேடுங்க. இன்னும் ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பாருங்க.
அங்கு உடைந்து கிடந்த திவ்யாவின் கைகளில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களையும், அந்த ஒற்றை ஜிமிக்கியையும்!
கண்கள் பணிக்க அந்த ஜிமிக்கியை பார்த்தான். கைகளில் எடுத்தான். சற்றுமுன் அவளை காரில் ஏற்றும்போது, நடந்த போராட்டத்திற்கு, அந்த ஜிமிக்கியும், உடைந்த வளையல்களும் சாட்சி கூறின. டேவிட் கண்கலங்கி ஜிமிக்கியையே பார்த்து கொண்டு இருந்தான்
"ஹைய்... நல்லா இருக்கே! எங்க வாங்கின டேவிட்?" கண்கள் விரிய திவ்யா கேட்டாள். "என் டார்லிங்கு பர்த்டே வருது. ஏதாவது வித்தியாசமா கிப்ட் தரணும்ணு யோசிச்சேன். அப்பதான் ஞாபகம் வந்தது. நீ ஜிமிக்க போட்டு நான் பார்த்ததே இல்லேன்னு..."
'உடனே வாங்கிடியாக்கும்!'
உடனே வாங்கலே. உனக்கு என்ன மாதிரி ஜிமிக்கி நல்லா இருக்குன்னு 'போட்டோஷாப்'ல டிசைன் பண்ணி பார்த்தேன்... "லேப்டாப்பில் அவன் காண்பித்தது, ஐம்பதுக்கும் மேல்பட்ட அவள் போட்டோக்களில்! அவள் பலவிதமான ஜிமிக்கிகளில் சிரித்தாள்.
"இதுல ஒண்ணு உனக்கு ரொம்ப அழகா இருந்துச்சு... அதான் வாங்கினேன். லவ் யூ..." அவன் ஜிமிக்கியை காட்டவும், அதை வாங்கியவள், அப்படியே அவனை கட்டிக் கொண்டாள். அந்த ஜிமிக்கியைதான், அவர்களின் தேனிலவிற்கு போட்டு வந்து இருக்கிறாள். ஜிமிக்கியையே பார்த்துக்கொண்டு இருந்த டேவிட் கண்கலங்கி நிற்க, அதற்குள் மத்த டீமுக்கும் தகவல் தெரிந்து எல்லோரும் அங்கே வந்து விட்டனர்.
"இது அவளோட ஜிமிக்கியாச்சே!''
திவ்யாவின் அம்மா குரல் கேட்டு, டேவிட் திரும்ப, உடைந்து கிடந்த வளையல்களை, பார்த்த அம்மா அலறினாள்.
"ஐயோ என் பொண்ணை என்ன பாடு படுத்தி இருக்காங்களோ..." கத்தியவள், இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்பினாள். "என்ன சார்... இப்படி அலக்கழிக்கிறீங்களே... எம் பொண்ணு கிடைப்பாளா இல்லையா?"
"அம்மா... அமைதி! அமைதி!"- பெருமாள் அம்மாவை தேற்றினான். வேறு வழியில்லாமல் தலைவர்கிட்ட பேசி, தகவல் சொல்லிட்டேன். இந்நேரம் அரசியல் ரீதியா அவர் ஆக்ஷன் எடுக்க ஆரம்பிச் இருப்பாரும்மா... திவ்யா கிடைச்சுடுவா...?"
"போடா... நீயும் உன் அரசியலும். எனக்கு எம் பொண்ணு வேனும்டா..." பெற்ற தாயாய் அவள் அழுவதைப் பார்த்த, எல்லோருக்கும் கண்ணீர் வந்தது.
இன்ஸ்பெக்டர் அழகர், டேவிட்டை பார்க்க, டேவிட் அழுகையும், கோபமுமாய் நின்றான். 'இனி அடுத்து என்ன செய்வது?' என்ற குழப்பரேகை அனைவரின் முகத்தையும் சோகமாக்கியது. அப்போது, பெருமாளின் போன் சூழ்நிலைகளின் நெருக்கத்தை கலைத்தது போல் அடித்தது. பெருமாள் போனை எடுத்து காதில் வைத்தான்.
இயக்குநர் A. ெவங்கடேஷ்
நான் தான் திவ்யாவை கடத்துன நல்லவன் பேசுறன்... எதிர்முனை கரகரக்கவும் டென்ஷன் ஆனான் பெருமாள். "டேய்... பொட்டப்பய மாதிரி போன்லயே பேசிக்கிட்டு... நேர்ல வாடா... நான் யார்ணு தெரியும் - பெருமாள் கத்தினான். அவன் சத்தம் காட்டில் எதிரொலித்தது...
"சே... சே... போன்ல பேசும்போது கத்தாதே... உன் சத்தம் கூடவே, அந்த காட்டோட எதிரொலி எல்லாம் சேர்ந்து எரிச்சலாக்குது...!"
"என்னடா வேணும் உனக்கு... நேர்ல வாடா..."
"ப்ச்... என்ன இது... சும்மா நேர்ல வா நேர்ல வான்னு கூப்பிடுறே... அதான் குடும்பமா, போலீசோட கூட்டு சேர்ந்து தேடுனீங்களே... திவ்யாவ காப்பாத்த முடிஞ்சதா... கடத்திட்டே ன்ல.. டண்டணக்கா... ஆங் டணக்குடக்கா..."
"என்னடா நக்கலா... உன்னை கண்டுபிடிக்காம விடமாட்டேன்டா..."
"சரி... சரி... உன் வீர வசனமெல்லாம் அப்புறம் கேட்குறேன்... மொதல்ல போனை அந்த டேவிட் கிட்ட குடு..." பெருமாள் போனை நீட்ட, பதற்றமாய் வாங்கிய டேவிட் காதில் வைத்தான். மொத்த பேரும், அவனையே பார்த்தார்கள்.
"ஹலோ!"
"டேவிட்டு... குட் பாய்... இந்த மாதிரி போனை எடுத்தா... மொதல்ல 'ஹலோ'-ன்னு "ரீஜெண்டா" சொல்லி பழகணும்னு உன் மச்சானுக்கு கொல்லிக் கொடுப்பா..."
"டீஜெண்ட்' என்ற வார்த்தையை 'ரீஜெண்ட்' என அவன் உச்சரித்ததை, இதற்கு முன் எங்கேயோ கேட்டு இருக்கேனே" - தனக்குள் யோசித்தான் டேவிட்.
"ஹலோ... டேவிட்டு!" - எதிர்முனை கூப்பிட்டது.
"சொல்லு... என்ன?"
"உன் திவ்யா ஷேப்டியா இருக்கா... ஆமா எதுக்கு குடும்பத்த கூட்டிட்டு திரியுற... லேடிசெல்லாம் அனுப்பிட்டு... நீயும் உன் பிரண்ட்ஸ்... அப்புறம் அந்த வீரன் பெருமாள் இவ்வளவு பேர் தேடுங்களேன்..."
"நாங்க இத்தனை பேரு தேடுறோம்னு தெரியுதுல்ல... பேசாம திவ்யாவ விட்றனு..." இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, பெருமாள் இன்ஸ்பெக்டர் அழகரை சமிக்ஞையில் அழைத்து போய் 'ஏதோ' சொல்ல அவர் தனது போனில் கண்ட்ரோல் ரூமில் கனெக்ட் ஆனார்.
ஹலோ... நான் ஒரு நம்பர தரேன்... இந்த நம்பருக்கு ஒரு கால் வந்திருக்கு... அந்த காலை டிரேஸ் பண்ணி அது எந்த இடத்துல இருந்து வருதுன சொல்லுங்க..."
அவர் சொல்லி கொண்டு இருக்க, இங்கே டேவிட், அந்த நல்லவனிடம் பேசிக் கொண்டு இருந்தான். பேச்சை தொடரும்படி, பெருமாள் சைகையில் சொல்ல, தலையாட்டியபடி டேவிட் தொடர்ந்தான்.
"பிளீஸ்... திவ்யாவை ஒப்படைச்சுடு... பிளீஸ்..."
"திவ்யாவை ஒப்படைச்சா மொத்தபேரும் சந்தோஷமா நன்றி சொல்லிட்டு போயிடுவீங்க...
அதுக்காகவா கடத்துனேன்..."
"சரி... என்னதான் உன் மனசுல இருக்கு!"
"சொல்றன்... உன் மனசுல யாரு இருக்கா...?"
'திவ்யாதான் என் மனசுல இருக்கா..." டேவிட் அழாக்குறையாய் சொன்னான்.
"ஆங்... திவ்யா உன் மனசுல இருக்கப் போயி அவளை தேடி அலையுற... ரைட்டு... என் மனசுல என்ன இருக்குன்னு கேட்டில்ல... சொல்றன்... இப்ப இல்ல... அப்புறம் சொல்றன்..."
'டேய்... டேய்... விளையாடுறியா?"
'யாரு நானா? விளையாடுறது நீங்கடா...! ஏன்டா டேவிட்டு... என்கிட்ட பேசிக்கிட்டே கால்ல டிரேஸ் பண்ண போலீஸ் டிரை பண்ணுதே... நான், என்ன கேனையா...? இனி அந்த சிம்மை யூஸ் பண்ண மாட்டேன்னு அந்த அதி புத்திசாலிங்ககிட்ட சொல்லு..."
போன் கட் ஆனது.
'சார்... இனிமே அந்த 'சிம்'மை யூஸ் பண்ண மாட்டேன்னு சொல்றான் சார்...!"- அழகரிடம் சொன்னான் டேவிட்.
"இனிமே யூஸ் பண்ண மாட்டான், சரி! இதுவரைவுக்கும் பேசினத வச்சு... அவன் எங்க இருந்து பேசினான்னு கண்டுபிடிச்சுடுவோம்... அது போதும் எங்களுக்கு! அந்த இடத்துல இருந்து 'நூல் பிடிச்சு' அந்த 'நல்லவனை' தூக்கலை... நான் போலீசே இல்லை..." - சற்று கோபமாகவே அழகர் சொல்லவும், போன் அடிக்கவும் சரியாய் இருந்தது.
"ஹலோ... சொல்லுங்க..."
"சார்... நீங்க சொன்ன நம்பரை டிரேஸ் பண்ணதுலே, ஜஸ்ட், கொஞ்ச நேர முன்னாடி அந்த நம்பர் சுவிட்ச் ஆப்..."
"எதிர்பார்த்ததுதான். அவன் கடைசியா எங்க இருந்து... பேசினான்..
"சார்... டவர் நம்பர் வெச்சு டிரேஸ் பண்ணதுலே கல்லல் கிராம பார்டர் சார்..."
"குட்... அந்த டவர் நம்பர் ஷேர் பண்ணுங்க... ஸ்பாட்டுக்கு போயி நான் விசாரிச்சுகிறேன்...
போனின் சிவப்பு பட்டனை தட்டி, கட் செய்த அழகரிடம் பெருமாள் கேட்டான்..
"சார்... உடனே கல்லல் கிராமம் போயி, விசாரிக்கலாம் சார்...!"
"போலாம்... பட்!" - அழகர் இழுத்தார்.
"என்ன சார்...?"
நாங்க போலீஸ் டீம் மட்டும் போறோம். நீங்க மொத்த பேருமா பின்னாடியே வரவேண்டாம். எனக்கு ஏதாவது லீட் கிடைச்சதுனா, தகவல் தரேன். நீங்க எல்லாம் வாங்க... அதுவரைக்கும் இங்க ஸ்டேஷன்லேயே வெயிட் பண்ணுங்க..."
"சார்... நான் மட்டுமாவது வரேன்னே..." டேவிட் கெஞ்சலாய் கேட்டான்.
"டேவிட்... இது போலீஸ் புரொசிஜர். சொன்னா புரிஞ்சுக்கோங்க... கான்ஸ்டபிள்ஸ் வாங்க... லெட்ஸ் கோ..."
பரபரப்பாய் அவர்கள் கிளம்பி செல்ல, டேவிட், பெருமாள், டேவிட் நண்பர்கள், மொத்த குடும்பமும் ஒரு வெறுமையும், சோர்வுமாய் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
திவ்யா மெதுவாய் கண்விழித்தாள். கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு, டிக்கியில் போடும்போது, அவர்கள் ஸ்பிரே அடித்ததும், இவள் மயங்கியதும் மங்கலாய் நினைவுக்கு வந்து போனது. இப்போது அவள் ஒரு அறையில், அமர்ந்த நிலையில் சேரோடு கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. வாயில் துணிக்கு பதிலாக, பிளாஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த அறையில் இருட்டு கும்மி கிடந்தது. எதுவுமே தெளிவாக தெரியவில்லை. பழைய அறை என்பது மட்டும் வாசனையால் உணரமுடிந்தது. மேலே, இருந்த, அந்த சின்ன துவாரம் வழியே வவ்வால்கள் பறப்பது மட்டும் தெரிந்தது. இப்போது அந்த அறையை யாரோ திறக்கும் ஓசை. 'பளக்' என்ற சத்தத்துடன் பூட்டு திறக்கப்படுவது, தொடர்ந்து 'க்ரக்… க்ரக்...' என 'பாட்லாக்' இழுக்கும் ஓசை வெளிப்பட்டது.
கதவு திறந்து ஒருவன் உள்ளே வந்தான். கூடவே நான்கு பேர் நுழைந்தார்கள். ரூமின் விளக்குகள் 'ஆன்' செய்யப்படாமல், கதவு திறந்ததால், வந்த வெளிச்சம் மட்டும், அவர்கள் அனைவரும் நிழல் உருவங்களாவே, திவ்யாவால் அனுமானிக்க முடிந்தது.
அந்த இடத்தில் நின்ற ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் இறங்கினார். அது கடைசியாக டேவிட் செல்லுக்கு பேசியவனின் செல்போன் சிக்னல் காட்டிய கல்லல் கிராம பார்டர். இருபக்கமும் சாலை கருநீல பாம்பாக நீண்டது. ஆங்காங்கே கல் மலைகள். 'நிச்சயம் இந்த பகுதியில் குவாரிகள் இருக்கணும்...' அழகரின் போலீஸ் மூளை உரைத்தது.
'சுத்தி, ஒரு கடை, கண்ணி இல்ல... டோட்டலா 'மூவிங் டிராபிக்' வண்டிய ஓரமா நிப்பாட்டி, பேசிட்டு சிம்கார்டை கட் பண்ணி போட்டுட்டு, திரும்ப வேண்டிய ஸ்டார்ட் பண்ணி போயிருக்கணும்...' தன் செல்போனை பார்த்தபடி அழகர் சொன்னார்.
"எப்படி சார்... துல்லியமா சொல்றீங்க...?" கூட வந்த எஸ்.ஐ. மாரியப்பன் கேட்டார்.
"மாரி... இங்க பாருங்க... என் செல்போன் சிக்னல் ஒரு பாயிண்ட்தான் காட்டுது. அதனால இந்த இடத்தை தாண்டினா, சிக்னல் விட்டு விட்டு வரும். அடுத்த டவர்லதான் ஃபுல் சிக்னல் கிடைக்கும்... அதுக்கு முன்னாடி பேசிடணும்னு பேசிட்டு போயிருக்கான்..." சொன்னவர், கண்களை சுருக்கி, தூரமாய் ஏதோ கிடப்பதை பார்த்தவர், "கான்ஸ்டபிள், அந்த பாறைக்கு கீழே, கருங்கல் பக்கம் என்ன கிடக்குது?" ஓடிச்சென்று பார்த்த கான்ஸ்டபிள் மணி அவைகளை பொறுக்கியபடி சத்தமாய் சொன்னார்.
"சார்... உடைச்சு போட்ட... சிம்கார்டு துண்டுகள் சார்..."
"கிரேட். அப்போ அவன் இந்த இடத்துல இருந்து, 200 மீட்டருக்குள்ளதான் பேசி இருக்கனும்... நல்லா தேடுங்க. இன்னும் ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பாருங்க..." அவர்கள் தேட தொடங்கினர்.
(தொடரும்) E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353