ஆதிசங்கரரை பிடித்த பில்லி சூனியம் திருச்செந்தூர் வந்ததும் விலகி ஓடியது!
- இறைவன் ஒன்றே என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் அவர்.
- திருச்செந்தூரிலே கந்தமான மலையிலே முருகன் வசிக்கிறார்.
கேரள மாநிலத்தில் காலடி என்னும் ஊரில் அவதரித்தவர் ஆதிசங்கரர். அவர் ஊரில் இருந்து ஆறு வெகு தூரத்தில் இருந்தது. தன் தாயினால் அவ்வளவு தூரம் நடந்து சென்று குளிக்க இயலாது என்பதை அறிந்த ஆதி சங்கரர் இறைவனை வேண்டி அந்த ஆற்றின் போக்கை மாற்றி தன் வீட்டின் அருகில் ஓடச் செய்தார். அந்த அளவுக்கு அவர் அற்புதமான சித்தர். பறக்கும் ஆற்றல் படைத்தவர்.
சிவபெருமானின் அம்சமாய் கி.பி. 8-ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஆதி சங்கரர், இந்து சமயத்திற்கு மறுமலர்ச்சியும், புத்துணர்வும் ஊட்டியவர். இந்து சமயத்தை ஆறு வகையாகப் பகுத்து அனைத்து தெய்வங்களையும் சரி சமமாக வழிபட செய்தார். இறைவன் ஒன்றே என்னும் கோட்பாட்டைக் கொண்டவர் அவர்.
பூமியில் பிறந்த அனைவரும் ஒன்றே. உயர்வு, தாழ்வு என மனிதரிடையே பிரிவினை கூறுவது பாவம். இறைவனின் அருள்மழை அனைவர் மீதும் சமமாகவே பொழிகிறது. அனைவரும், இறைவனை வழி படுவதற்கும், அவன் திருவடி அடைவதற்கும் தகுதியுடையவர்களே. இறைவன் யாரையும் ஒதுக்கித் தள்ளுவதில்லை என்று எடுத்துக்கூறி, உலகுக்கு உண்மையை உணர்த்தினார்.
இவரது கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத சில துஷ்டர்கள் இருந்தனர். அவர்களில் அபிநவகுப்தன் என்பவன் ஆதிசங்கரர் மீது பில்லி சூனியம் ஏவி காச நோயை ஏற்படுத்தினான். ஆதிசங்கரர் திருக்கோகர்ணத்தில் சிவபெருமானை வழிபடும் போது, திருச்செந்தூர் சென்றால் நோய் தீரும் என்று அசரீரி சொல்லியது.
ஆகாய வழியாகத் திருச்செந்தூரை வந்தடைந்தார் ஆதிசங்கரர். செந்தூர் கோவில் குகைக்குள் காட்சி அளித்தார் குமரன். குகைக்குள் இருந்த குமரனை நோக்கி நடந்தார். ஆறுமுகப் பெருமான் ஒளிமயமாக விளங்கினார். பாலசுப்பிரமணியர் பாதங்களில் பாம்பு (ஆதி சேஷன்) பூஜை செய்வதைக் கண்டு மகிழ்ந்தார். சுப்பிரமணிய புஜங்கம் என்ற நூலைப் பாடினார். புஜங்கம் என்றால் பாம்பு. தோளால் ஊர்வது.
இக்கோவிலிலே பன்னீர் மரத்து இலையில் வைத்து வழங்கப்படும் விபூதியின் மகிமையை உணர்ந்தார். இலை விபூதியை உட்கொண்டார். காசநோய் மறைந்தது. இலை விபூதியின் பெருமையைப் பாடினார்.
முருகனுடைய அழகு உருவத்தைக் கண்டவுடன் வேறு எதுவும் தோன்றவில்லை. தம்மை மறந்து அந்த இன்பத்தில் மூழ்கி இருந்தார்.
"எனக்கு ஒரு சொல்லும் பொருளும் தோன்றவில்லை. என் உள்ளத்தில் ஒரு ஒளி பிரகாசிக்கிறது. அது ஆறுமுகத்துடன் தோற்ற மளிக்கிறது. அதனால், என்னை அறியாமல் சொற்கள் என் வாக்கில் இருந்து வெளி வருகின்றன" என்றார். அந்த அழகிய சொற்களே "ஸ்ரீ சுப்பிரமண்ய புஜங்கம்" எனும் பாடல்களாகும்.
ஸ்ரீ சுப்பிரமண்ய புஜங்கத்தின் ஒவ்வொரு சுலோகத்திலும் முருகனுடைய ஒவ்வொரு வடிவத்தையும் நேரில் காண விரும்பி ஆதி சங்கரர் பிரார்த்தித்தார். அவர் விருப்பப்படியே முருகனும் தரிசனம் அளித்தான்.
இவர் இயற்றிய ஸ்ரீ சுப்பிரமண்ய புஜங்கம் 33 சுலோகங்களைக் கொண்டது. இதனை யார் தினமும் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் நல்ல சந்ததியையும், ஆயுளையும், அபரிமிதமான செல்வத்தையும் அடைவார்கள். இந்தச் சுப்பிரமணிய புஜங்கத்தைப் பாடியதும் ஆதிசங்கரரை பிடித்திருந்த பில்லி சூனியம் விலகியது. இத்தகைய சிறப்பான அந்த சுப்பிரமணிய புஜங்கத்தில் இடம் பெற்றுள்ள 33 பாடல்களின் பொருள் வருமாறு:-
1. எப்போதும் குழந்தையாகவே இருந்தாலும் விக்னங்களாகிய மலையைப் பொடியாக்கும் சக்தி உள்ளவராகவும், யானை முகத்தை உடையவராகவும், கணேசன் எனும் பெயர் கொண்டவராகவும் இருக்கும் பெருமைமிக்க பரமமூர்த்தி எனக்கு மங்களமுண்டாக அருள் புரியட்டும்.
2. என் உள்ளத்தில் ஏதோ ஓர் ஒளி ஆறுமுகத்துடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதனால் என் நாவினின்றும் ஆச்சரியத்தக்க முறையில் வார்த்தைகள் அருவிபோல் வெளி வருகின்றன.
3. மகான்களது மனதையே வீடாக உடைய வராகவும், வேதங்களின் பொருளாக விளங்குபவராகவும், சிவபெருமானின் புதல்வராகவும் இருக்கின்ற சுப்ரமணியக் கடவுளை நான் வணங்குகின்றேன்.
4. எப்போது எந்த மனிதர்கள் என் சன்னதிக்கு வருகிறார்களோ அப்போதே அந்த மனிதர்கள் சம்சாரக் கடல் கடந்தவர்கள் ஆவார்கள்.
5. கடல் அலைகள் எப்படி விழுந்து அழிகின்றனவோ அப்படியே என்னை தரிசனம் செய்கின்றவர்களின் சகல பாவங்களும் எனது சன்னதியில் அழியும்.
6. திருச்செந்தூரிலே கந்தமான மலையிலே முருகன் வசிக்கிறார். இந்த மலை மீது ஏறி அவரை எவன் வணங்குகிறானோ அவன் கைலாச மலை மீது ஏறி சிவபெருமானை வணங்கிய பலன் அடைகிறான்.
7. பஞ்ச மகா பாதகங்களையும் நாசம் செய்கிறதாகவும், மகிரிஷிகள் தவம் செய்யத் தகுந்ததாகவும், உள்ள சுகந்த மலையில் குகைக்குள் வாசம் செய்பவனாகவும் தன்னுடைய ஜோதியாலே விளங்குகிற வனாகவும், ஜீவன்களின் பீடை போக்குபவனாகவும் உள்ள சுப்ரமணிய சுவாமியைத் துதிக்கின்றேன்.
8. ஆயிரம் சூர்ய பிரகாசத்துடன் கூடிய ஒளி வீசுபவராகவும் கார்த்திகைப் பெண்களின் பால் உண்டு தேவர்களின் ஈசுவரராகவும் இருக்கும் சுப்ரமணியரை நான் துதிக்கின்றேன்.
9. உனது திருவடித் தாமரைகளில் சம்சாரம் எனும் வேதனையால் தவிக்கும் எனது மனம் எனும் வண்டு எப்போதும் மொய்ப்பதால் மகிழ்வடைகிறேன்.
10. கந்த சுவாமியே, பொன்மயமான ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டதாயும், சத்தமிடும் சலங்கைகள் கொண்டதாயும் உள்ள உனது இடுப்பை நான் தியானம் செய்கிறேன்.
11. வள்ளியை மார்புடன் அணைத்துக் கொண்டதால் அவள் மார்பை அலங்கரித்த குங்குமம் உன் மார்பில் பட்டு உன் மார்பும் சிவப்பாகக் காட்சி தருகிறது. அன்பர்களைக் காக்க நீ உன் உள்ளத்தில் கொண்டுள்ள ஆவலையே அது வெளிப் படையாகக் காட்டுகிறது. அத்தகைய மார்பை நான் வணங்குகிறேன்.
12. சத்ருக்களுக்குப் பயம் கொடுப்பதாயும், உள்ள உனது பன்னிரண்டு கைகளையும் நான் வணங்குகிறேன்.
13. உனது ஆறு முகங்களையும் சந்திரனுக்கு ஒப்பிடலாம் என்றாலோ ஆறு சந்திரனும் இல்லை, களங்கமில்லாத சந்திரனும் இல்லை. எனவே உனது திருமுகங்களுக்கு எதை ஒப்புமை சொல்லவோ?
14. உன் அதரங்கள் அமுதம் பொழிவன. ஆகவே உனது ஆறுமுகங்களும் ஆறு தாமரை மலர்களே
15. உனது பன்னிரண்டு கண்களிலிருந்து ஒரு கடை கண் பார்வை என்மீது ஒருமுறை விழுந்தால் அதனால் உனக்கு என்ன குறைந்து போகும்?
16. எந்த ஆறு தலைகளை சிவன் மகிழ்ச்சியுடன் உச்சி முகர்ந்து பார்க்கிறாரோ அந்த ஆறு சிரசுகளுக்கும் வணக்கம்.
17. இடுப்பில் பீதாம்பரம் தரித்தவரும், கையில் அழகிய சக்தி ஆயுதம் தாங்கியவரும், சிவபெருமானின் குமாரனுமாகிய முருகன் என் எதிரில் எப்போதும் வந்து அருள்வாராக.
18. குமரா, ஜகத்துக்கெல்லாம் தலைவனான சிவபெருமான் மைந்தா! குகன் என்ற பெயர் கொண்டவனே! உன்னை தியானிக்கிறேன்.
19. அன்பருக்கு வீடு அளிக்கவல்ல பெருமானே! தேவ சேனாதிபதியே! பராசக்தி சொரூபமாகிய வேலைக் கையில் ஏந்திய வீரனே! என்னைக் காப்பாற்று.
20. எம பயத்தால் நடுங்கும் உடல் கொண்டவனாய் பரலோகம் செல்லும் நிலையில் நான் இருக்கும் போது விரைவில் வந்து என்முன் தோன்றிக் காத்திடுவாய்.
21. எமதூதர்கள் என்னைத் துன்புறுத்தும் போது, வேலாயுதத்துடன் மயில் மீது ஏறி அஞ்சேல் என்று அபயம் அளித்து விரைவாக வந்து அருள வேண்டும்.
22. எனது இறுதிக் காலத்தில் பேச சக்தியற்ற வனாகி விடுவேன். அப்போது அலட்சியம் செய்யாமல் அருள் புரிய வேண்டுகிறேன்.
23. இந்த உலகத்தை ஆயிரம் அண்டங்களாகச் செய்து ஆண்டு வந்த சூரன் உள்னால்அழிக்கப்பட்டான், அப்படியே தாரகாசுரன் சிம்ம வக்தரன் முதலியோரும் கொல்லப்பட்டனர். எனது இதய ஆகாசத்தில் இருக்கும் கிலேசம் என்ற ஒன்றை மாத்திரம் கொல்லாமல் இருக்கிறாயே! நான் என்ன செய்வேன்! எங்கு போவேன்?
24. உன்னைத் தவிர வேறு ஒரு தெய்வத்திடம் நான் யாசிக்கமாட்டேன். எனக்குத் துன்பம் தருவதாயும், உன் மீது பக்தி கொள்ளாது தடுப்பதாயும் உள்ள எனது மன நோயை விரைவில் அழித்து விடு.
25. தாரகனை வதைத்த முருகா! மிகவும் கொடிய குஷ்ட ரோகம், வலிப்பு, சயம், சுரம், பைத்தியம், வயிற்றுவலி முதலிய வியாதிகளும் பூதபிரேத பிரம்ம ராட்சசுகளும், பன்னீர் இலையில் விளங்கும் உன்விபூதியைக் கண்ட உடனே ஓடி மறைகின்றன.
26. கண்களால் உன்னைக் காணவும், காதுகளால் உன்புகழ் கேட்கவும், நாவினால் உன்புகழை மற்றவர்களுக்கு சொல்லவும், கைகளால் உன் திருவடிகளுக்கு அர்ச்சனை செய்வதுமாக எனது எல்லா உடல் உறுப்புகளும் உன்னிடம் லயிப்பவையாக இருக்கட்டும்.
27. கீழ் குலத்தில் பிறந்தவனுக்கும் கூட அருள்புரிவதில் சுப்பிரமணிய சுவாமியை விட வேறு தெய்வம் எதையும் நான் அறியேன்.
28. குமாரக் கடவுளே! எனது மனைவியோ, பிள்ளையோ, உறவினர்களோ, பசுக்களோ, மற்ற எந்த மனிதனோ, எந்த பெண்மணியோ, என்னைச் சேர்ந்தவர்களோ, ஆகிய எல்லோரும் உன்னை பூஜிக்கின்றவர்களாகுக ; வணங்குகிறவர்களாகுக; துதிப்பவராகுக ; நினைப்பவர்கள் ஆகுக.
29. விலங்குகளாலோ கொடிய வியாதியாலோ எனது உடலுக்கு துன்பம் ஏற்பட்டால் உன் கையில் உள்ள வேலாயுதமானது அந்தப் விலங்கையும் வியாதியையும் தாக்கித் தூக்கி எறிந்து நாசம் செய்யட்டும்.
30. பிள்ளைகள் செய்யும் தவறுகளைப் பெற்றோர் பொறுத்துக் கொள்வதுபோல எனது தவறுகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
31. வேத சொரூபமான மயிலுக்கு வணக்கம், பராசக்தியாகிய வேலுக்கு வணக்கம். மாயதத்துவ ரூபமான ஆட்டுக்கடாவுக்கு வணக்கம். அகங்கார தத்துவமாகிய கோழிக்கு வணக்கம். ஆனந்த ரூபமான சமுத்திரத்துக்கு வணக்கம். முக்திநகரி எனும் திருச்செந்தூருக்கு வணக்கம்; கந்தக்கட வுளே! மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன்.
32.ஆனந்தமே உருவான முருகா! உனது அருளைப் பிரகாசமாக்கு. எல்லையற்ற பரஞ்சோதியாய் உருவான முருகா! உனது அருளைப் பிரகாசமாக்கு. உனது பெருமையை வெளிப்படுத்து. ஆனந்தக் கடலே! உனது சக்தியை வெளிப்படுத்து. எல்லா உயிர்களுக்கும் உறவே! உனது திறமை முழுவதையும் பிரகாசமாக்கு. சிவகுமாரா! முக்திப்பேறு தரும் முதல்வா! உனது திறமை முழுவதையும் என் மீது உபயோகித்து என்னைப் பிரகாசமாக்கி அருள்வாய்.
33. சுப்ரமண்ய புஜங்கம் என்ற இந்த ஸ்தோத்தி ரத்தை தினமும் எவன் பக்தியுடன் படிக்கிறானோ அவன், மனைவி, மக்கள், செல்வம்,பெற்று முடிவில் முருகன் அருளும் முத்திப் பேறும் பெறுவான்.
இப்படி 33 பாடல்களில் திருச்செந்தூர் முருகனை புகழ்ந்த ஆதிசங்கரர் உருவச்சிலை பாலசுப்பிரமணியருக்கு எதிரில் மகா மண்டபத்தில் உண்டியல் பெட்டிக்குத் தென்புறமுள்ள தூணில் அமைந்துள்ளது. மறக்காமல் அவரையும் வழிபடுங்கள். அதோடு சுப்பிரமணிய புஜங்கமும் படியுங்கள். எந்த பில்லி சூனியம் இருந்தாலும் ஓடி விடும். அவர் பாடிய முப்பத்து மூன்று வடமொழிப் பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு சலவைக் கல்லில் செதுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இரண்டாம் பிரகாரம் வடக்குச் சுவரில் அவற்றை இன்றும் காணலாம்.
அடுத்த வாரம் திருச்செந்தூர் முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர் பற்றி காணலாம்.