சிறப்புக் கட்டுரைகள்

வேலையற்றவர்கள்!

Published On 2025-02-09 17:32 IST   |   Update On 2025-02-09 17:32:00 IST
  • ஒவ்வொரு மனிதனும் உழைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம்.
  • வாழ்வின் அருமையான கொள்கைகளை வரையறுக்க முடியாமல் கோட்டைவிட நேரிட்டுவிடும்.

வேலையற்ற வெறுமையில் மூழ்கிப்போகாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதில் ஆர்வம் காட்டும் அன்பு வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

தமிழில் 'சும்மா!' என்றொரு சொல் இருக்கிறது; ஆன்மீகத் தத்துவ நோக்கில் 'சும்மா இருத்தலே சுகம்' என்று ஞானியரும் தவசீலர்களும் குறிப்பிடும் 'சும்மா' என்பதற்கு ஆழ்ந்த பொருள் விரிவுகள் இருக்கலாம். அன்றாட வாழ்வியலில், வேலை பார்க்கும் வாய்ப்புகள் எத்தனையோ இருந்தும், வெட்டியாய் உட்கார்ந்து, வீணாய்ப் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் மனிதர்களை " சும்மா இருப்பவர்கள்' என்று குறிப்பிடுவதைவிட இன்னும் கொஞ்சம் சுருக்கென்று உரைக்கும்படியாக 'வேலையற்ற வெற்று மனிதர்கள்' என்று குறிப்பிடலாம். இதையே பேச்சு வழக்கில், ' வேலையத்த வெறும் பயல்கள்' என்று செல்லமாகத் திட்டும்பாங்கில் சொல்லலாம்.

ஆறடி உயரத்திற்கு உடம்பைப் படைத்து, அதிலேயே அரை சாண் வயிற்றையும் படைத்திருக்கும் கடவுளின் சூட்சுமம் புரிந்து கொண்டால், ஒவ்வொரு மனிதனும் உழைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம். உழைப்பு என்பது எந்நேரமும் உழைத்துக் கொண்டிருப்பது என்று பொருளல்ல; உழைப்பிற்கான ஆயத்தங்களில் இயங்கிக் கொண்டிருப்பதும்கூட ஒரு வகையில் உழைப்புதான். பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து அழிவதைப் போல, இயக்கப்படாத மனமும் உடம்பும் விரைவில் கெட்டழிந்துவிடும் நிலைமையை எட்டிவிடும்.

மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு, உழைத்துப், பொருளீட்டிப் பெரிய அளவிற்கு வருவது ஒருபுறம் இருக்கட்டும்; அன்றாடம் உண்பதற்கேற்ற உணவை ஈட்டுவதற்காகவாவது நாம் நமது உழைப்பைச் செய்தே ஆக வேண்டும் அல்லவா?. அடுத்தவர் உழைப்பில் உண்டு சுகம்காண நினைப்பது, பிச்சையெடுப்பதினும் கீழான தன்மை அல்லவா?. உழைக்கக் கூடிய வலுவோடு உடம்பு இருந்தாலும், அதனைச் சரியான வழியில் இயக்கக் கூடிய ஆர்வத்தோடு மனம் இருக்கவேண்டும். அதனால், மனத்தை வெறுமையாக அல்லாமல் எப்போதும் யாதானும் ஒரு உழைப்புச் சிந்தனையில் மகிழ்ச்சியோடு இயங்கும் தன்மையதாய் வைத்துக்கொள்ள வேண்டும். வெற்று மனமாய் மனத்தை காலியாக விட்டுவிட்டால் அது பேய் பிசாசுகளின் பட்டறையாய் மாறிவிடும் பயங்கர நிலைமை உண்டாகிவிடும்.

சுய சிந்தனையற்ற மனம் நமக்குச் சொந்தமற்றதாக விரைவில் மாறிப்போகும்; நம்முடைய அனுமதியில்லாமல் நம்முடைய வீட்டில் யார்யாரோ வந்து வாடகை தராமல் குடியிருந்து சீரழிக்கும் அவல நிலைபோல் ஆகிவிடும். ஓர் ஊருக்கு ஒரு ஞானி வந்தார்; கேட்பவர்களுக்குக் கேட்ட வரம்தரும் வல்லமை அவரிடம் இருந்தது. அவரிடம் ஓர் இளைஞன் வந்து பணிந்து நின்றான். "என்ன வேண்டும்?" ஞானி கேட்டார். " சுவாமி! மனத்தில் பல விஷயங்களை நினைக்கிறேன்; ஆனால் அதில் எதுவும் கைகூட மாட்டேன் என்கிறது; அதனால் நான் எதை நினைத்தாலும், அது உடனே நடக்கின்ற சக்தியை எனக்கு வரமாக அருளுங்கள்!" என்று கேட்டான்.

"பொதுவாக மனம் ஒன்றை நினைத்தால், உடல் அதனைச் செய்து முடிக்க வேண்டும்; ஆனால் மனத்திற்கும் உடலுக்கும் புறவழி போட்டு உடனடியாக நிறைவேற்றும் சக்தி வேண்டும் என்று கேட்கிறாய்!. ஆனால் இது பெரும் தொந்தரவில் போய் முடியும் பரவாயில்லையா?" ஞானி கேட்டார். " பரவாயில்லை! எந்தத் தொந்தரவையும் நான் பார்த்துக்கொள்கிறேன்!" என்றான் இளைஞன். அவனுடைய காதில் ஞானி ஒரு நாலடி மந்திரத்தைச் சொன்னார். "இதை மனப்பாடமாய்ச் சொல்!: சக்தி வரும்" என்று சொல்லி விட்டு வேறு ஊர்நோக்கி நகர்ந்தார்.

ஞானி கிளம்பிய மறுநிமிடம், இளைஞன் மந்திரத்தைச் சொன்னான், ஒரு பூதம் புகையாக வந்து அவன் முன்னே தோன்றியது." இன்று முதல் நீ எனக்கு எஜமான்! நான் உனக்கு அடிமை!. எனக்குத் தொடர்ந்து ஏதேனுமொரு கட்டளையை இட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவற்றையெல்லாம் தட்டாமல் அடுத்தடுத்த வினாடிகளில் செய்து முடித்துக் கொண்டே இருப்பேன். எனக்குக் கட்டளை வழங்காமல், என்னை வேலையற்றவனாக வைத்திருந்தால், அடுத்த வினாடியே உன்னை நான் விழுங்கி விடுவேன்! ஜாக்கிரதை! " என்று இளைஞனுக்கு எச்சரிக்கையும் விட்டது பூதம்.

உடனே இளைஞன், எனக்கு அரண்மனை வேண்டும், நிலபுலன்கள் வேண்டும், தேர் வேண்டும், ஆடை ஆபரணங்கள் வேண்டும், நகை அணிமணிகள் வேண்டும், யானைகள், குதிரைகள் வேண்டும்! என்று தொடர்ந்து கொண்டே இருந்தான். பூதமும் அவன் கேட்கும் அனைத்தையும் வழங்கிக்கொண்டே "அடுத்த கட்டளை! அடுத்த கட்டளை!" என்று கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பூதத்தின் தொந்தரவு தாங்க முடியாத அளவுக்குப் போனது.

சுந்தர ஆவுடையப்பன்

பொறுக்க மாட்டாத இளைஞன் அந்த ஞானி இருக்கும் இடம்தேடிச் சென்று, பூதத்தின் தொந்தரவிலிருந்து தப்பிக்கும் வழி கேட்டான். ஞானி புன்னகைத்துக்கொண்டே, "உன் அரண்மனையிலிருக்கும் தூண்களில் ஒரு இரும்புத் தூணை நன்கு வழவழப்பாக இழைத்து, அதில் ஏறி இறங்கிக் கொண்டே இருக்கச் சொல்!; இந்தச் செயலை நான் சொல்லும்வரை நிறுத்தக்கூடாது! என்பதையும் உத்தரவாகச் சொல்லிவிட்டு, நீ உன் வேலையைப் பார்!" என்றார். தன்மனத்தைத் தானே கவனித்துப் பயன்படுத்தி வேலை செய்திருக்கலாம்; இந்த பாழாய்ப்போன பூதத்திடம் ஒப்படைத்தது தான் தவறு! என்பதை நன்கு உணர்ந்து கொண்டான் இளைஞன்.

நல்ல மனிதர்களின் மனத்தில் உண்டாகும் சிந்தனைகள் நல்ல இடைவெளிவிட்டுத் தோன்றினாலும், அது விதை, வேர்பிடித்து முளைத்து மரமாகும் தன்மைபோல நாலுபேருக்குப் பயன்படும். ஆனால் வெறுமையாக்கி விடப்பட்ட மனம் பூதங்களின் ஆக்கிரமிப்பில் வேண்டத்தகாத செயல்களால் விபரீத விளைவுகளை விரைவாகவே ஏற்படுத்தும். ஒளியற்ற இடங்களை இருள் சென்று ஆக்கிரமித்துக் கொள்வதைப்போல, வெற்று மனங்களை எதிர்மறைச் சிந்தனைகள் ஆக்கிரமித்துக்கொண்டு , பேயாட்டம் போடத் தொடங்கிவிடும்.

மனம் என்பதே எல்லாத் திட்டமிடல்களுக்கும் ஆதாரமாகத் திகழ்ந்து, மனிதனின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் அடிப்படை ஊக்கியாகத் திகழ்கிறது. மனத்தைச் செம்மையாக வைத்துக்கொண்டால் நமது வாழ்க்கை ஒழுகலாறுகளும் செம்மையாகவே அமைந்து விடும். சிலர் மிக நன்றாகத் திட்டமிடுவார்கள்; செயல்பட மாட்டார்கள். சிலர் மிக அழகாகச் செயல்படுவார்கள்; ஆனால் திட்டமிடுதலில் கோட்டை விட்டுவிடுவார்கள். இந்த இருவகைக் குறைபாடுகள் உள்ளவர்களும் சோம்பேறிகளே. சோம்பலின் குழந்தைகளே காலம் தாழ்த்துதல், ஆர்வமின்மை, பொறாமைப்படுதல், அமைதி இழத்தல் போன்ற அவல நிலைகள் ஆகும்.

மனத்தை எப்போதும் செயல்பாட்டிலேயே வைத்திருப்பவர்கள் எப்போதும் உரிய நேரத்தில் உரிய செயலை உரிய முறையில் செய்து வெற்றி காண்பார்கள்; காலத்தைத் தவற விட்டால் வாழ்வில் எல்லாவற்றையும் தவற விட்டுவிடுவோம் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். வாழ்க்கையில் ஒரு நண்பனை இழக்கலாம்; மீண்டும் அதே நண்பனையோ அல்லது அவனைப்போன்ற வேறொரு நண்பனையோ சிலகாலம் கழித்து நண்பனாகப் பெற்றுக்கொள்ளலாம். சில நேரங்களில் சம்பாதித்து வைத்திருந்த பணத்தை அடியோடு இழக்க நேரலாம்; அதே வேளையில் மீண்டும் முயற்சித்து இழந்தவை அனைத்தையும் சம்பாதித்தும் கொள்ளலாம். வாழ்க்கையில் வந்த அருமையான வாய்ப்பை ஒருமுறை இழக்க நேரிடலாம். ஆனாலும் அந்த வாய்ப்பு மறுபடியும் வந்து நம்மை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்கான நேரம் வந்து, நாம் அந்த நேரத்தைப் பயன்படுத்திச் செயல் படாமல் வெறுமனே இருந்து தவற விட்டுவிட்டால், அந்தப் பொழுது மீண்டும் வரவே வராது; வாய்க்கவும் வாய்க்காது. அதனால் எப்போதும் எல்லாவற்றிலும் மனத்தை கவனத்துடன் செலுத்துபவர்களாக இருக்க வேண்டும்.

மனத்தை அதன் போக்கில் விட்டுவிட்டால் நமது போக்கு நற்போக்காக அமையவே அமையாது. எப்போதும் ஒரு திட்டமிடலிலோ அல்லது செயல்படுத்துதலிலோ நம்முடைய மனத்தை ஈடுபடுத்திக்கொண்டே இருந்தால், நம்முடைய எண்ணத்தில் தேவையற்ற பொறாமைகளோ பரபரப்போ வந்து சேராது. எந்தச் சிந்தனையுமற்று, எந்தச் செயலுமில்லாத மனத்தில்தான் வக்கிரமான சிந்தனைகள் எல்லாம் புற்றுக்கட்டிக் குடித்தனம் நடத்தத் தொடங்கிவிடும். எதிர்மறை எண்ணங்கள் பெருகப் பெருக நாம் எதிர்முக நாயகனாய் உருமாறி எல்லோராலும் வெறுக்கப்படுபவராக மாறிப்போவோம். காலியாக உள்ள மனத்தில் பேய் பிசாசுகள் குடியேறிவிடுவதால் அவை இடும் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் உண்டாகிவிடும். உலகில் எந்தப் பேய்தான் ஆக்கபூர்வமான செயல்களுக்கு ஆதரவளித்ததாய் வரலாறு இருக்கிறது?.

வாழ்வில் ஒவ்வொரு மனிதரும் அவர வருக்கான லட்சியங்களை வகுத்துக்கொண்டு, அந்தந்தக் குறிக்கோளை நோக்கிய செயல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். 'குறிக்கோள், லட்சியம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் என்னிடத்தில் இல்லை; நான் ஒரு சாதாரண மனிதன்' என்று கூறிக் கொள்பவர்கள்கூட, அன்றாட வாழ்வியல் தேவைகளான உணவு உடை உறைவிடம் ஆகியவற்றிற்காகக் கட்டாயம் உழைத்தே ஆகவேண்டும். அதுவும் தனக்காக மட்டுமன்றித், தன்னைச் சார்ந்து வாழக்கூடிய குடும்ப உறுப்பினர்களுக்காகவும் அவன் பொருளீட்டியே ஆகவேண்டும். இந்த அடிப்படைத் தேவைகள் அனைத்திற்காகவும் தரமான வகையில், நேர்மையான முறையில் அதன் ஆக்க பூர்வமான செயல்களில் மனத்தை ஈடுபடுத்தித் திட்டமிட வேண்டும்.

ஆக்கபூர்வமான வழிகளில் ஈடுபடுவதற்கு இயலாமல் வெறுமனே காலியாக மனத்தை வைத்திருந்தால் எதிர்மறையான அதிர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்து விட நேரிடும். அதனால் வாழ்க்கையில் தொந்தரவுகளைத் தவிர வேறெதுவும் நிகழாது. ' குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று ஓர் அருளாளர் குறிப்பிடுவது போல, சும்மா வெறுமனே இருக்கும் மனத்திற்குள் சேட்டைகள் குடியேறி, வாழ்வின் அருமையான கொள்கைகளை வரையறுக்க முடியாமல் கோட்டைவிட நேரிட்டுவிடும்.

ஒரு சிறிய விருப்பம், பிறகு ஆசையாக மாறி, அதுவே நியாயமான நெறியில் இலட்சியம் அல்லது குறிக்கோளாக உருவெடுக்கும்போது, அதனை அடைவதற்கு, மனத்தின் அனைத்து சக்தியையும் ஒன்றுதிரட்டி, சதா சர்வகாலமும், அதனை அடைவதற்காகவே ஈடுபடுத்த வேண்டும். எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் மனம் மேற்கொள்ளுகிற முயற்சிகள், தெய்வத்தால் ஆகாத காரியத்தையும் ஆகவைக்கும் வலிமை பெற்றுவிடும். மனத்தை நம் கைவசமிருந்து நழுவ விட்டுவிட்டால், வேலையற்ற வெற்றுமனம், பூதங்களின் கைப்பாவையாகி நம்மைப் படுபாதாளத்தில் தள்ளிவிடும்.

மனம் செய்வோம்! அதை தினம் செய்வோம்!

தொடர்புக்கு 94431 90098

Tags:    

Similar News