- வாடகைவீடுகள் மாற்றி-மாற்றிச் சலித்துப் போன என் மனைவி சந்திராவின் எண்ணமும் அதுவாகவே இருந்தது.
- மதியச் சாப்பட்டுக்குப் பின்னால் கூடத்தில் நான் படுத்திருந்தபோது, அடியில் என்னவோ சத்தம் கேட்பதை உணர்ந்தேன்.
இந்தத் தொகுப்பு வீடுகளை அரசாங்கம் கட்டி, விற்பனைக்குத் தந்து ஆண்டுகள் பதினைந்து முடிந்துவிட்டன. ஒப்பந்தக்காரர்கள், யாருக்கெல்லாம் கொடுக்கவேண்டி இருந்ததோ அவை அனைத்தையுமே வீட்டுக்குப் பயன்படுத்திய பொருட்ளின் தரத்தில்தான் வைத்திருப்பார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். என்றாலும், நான் பிடிவாதமாய் வீட்டுக்கடனுக்கு விண்ணப்பித்து இந்த வீட்டை வாங்கினேன். பணி ஓய்வுக்குப் பிறகாவது சொந்தவீட்டில் படுத்துறங்க வேண்டும் என்பது என் முடிவாக இருந்தது. வாடகைவீடுகள் மாற்றி-மாற்றிச் சலித்துப் போன என் மனைவி சந்திராவின் எண்ணமும் அதுவாகவே இருந்தது.
இத்தனை ஆண்டுகளின் பின் வீடு, அதன் வேலையைக் காட்டத் தொடங்கி விட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு ஏதாவது வைத்தியம் பார்க்கவேண்டி இருக்கிறது.
நேற்றுமுன்தினம் மதியச் சாப்பட்டுக்குப் பின்னால் கூடத்தில் நான் படுத்திருந்தபோது, அடியில் என்னவோ சத்தம் கேட்பதை உணர்ந்தேன். உறக்கம் கலைந்து லேசாகப் பயம் கூட வந்துவிட்டது. சிறிது நேரத்தில் `பட்' என்று ஊசிவெடிச் சத்தம் கேட்டது. பாயை விலக்கிப் பார்த்தபோது தரையில் போடப்பட்டிருந்த `டைல்ஸ்' வீங்கித் தெறிப்பு கண்டிருந்தது!
அது என்னவோ எனக்கு அப-சகுனமாய்த் தோன்றவே என் நண்பனான பொறியாளர் ஜீவாவை வரவழைத்தேன்.
அவன் வந்து பார்த்துவிட்டு, ``இதுல பயப்படுவதற்கு ஒண்ணுமில்ல வாசு... இது கற்கள் பதிக்கும் போதே கவனிச்சிப் பதிக்காததால் ஏற்படும் பாதிப்பு... உள்ளே காற்று வாங்கி இருக்கும்... அது வெப்பமாகி இந்த மாதிரி கற்கள் தெறிச்சிடும்...!"
``நல்லா சொல்லுங்கண்ணே... இவங்க மனசைப் போட்டுத் தேவை இல்லாமக் குழப்பிக்கிட்டே இருக்காங்க...!"-என்றாள் சந்திரா.
``இந்தத் தொகுப்பு வீடுகள் எல்லாம் கட்டிப் பதினைந்து வருசங்களுக்கு மேல் ஆய்ட்டுது ஜீவா...! இத்தனை வருடங்கள் அந்த வெப்பம் பூமியிலேயே தங்கி இருந்துச்சா?"
``வருடங்கள் ஆனால் என்ன வாசு?...எல்லா வீடுகளிலும் இப்படி நடக்குமுன்னு சொல்லமுடியாது... நாலஞ்சி வீடுகளில் நானே `டைல்ஸ்' மாற்றியும் இருக்கேன்!" என்றான் ஜீவா.
``சரிய்யா, எனக்கு உடனே `டைல்ஸ்' மாற்றிக் கொடுத்திடு... இதைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை... என்னென்னவோ தப்பான எண்ணங்கள் வருது!"
``ஒண்ணும் கவலைப் படாதே, மாத்திடலாம்... ஆனா இதே மாதிரி கலர்ல `டைல்ஸ்' கிடைக்குமுன்னு சொல்லமுடியாது...!"
``அது பரவாயில்லை ஜீவா... இதில் மேட்சிங்கெல்லாம் பார்க்க முடியாது... எனக்கு சீக்கிரம் வேலை முடிந்தால் போதும்."
``நாளைக்கே ஆட்களை அழைச்சிட்டு வர்றேன் வாசு!...வேலையை முடிச்சிட்டுப் பணம் வாங்கிக்குறேன்!"
சொன்னபடியே மறுநாள் இரண்டு பேரை ஜீவா வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான். அவர்கள் வருவதற்கு முன்பே தேவையான பொருட்கள் ஆட்டோவில் வந்து இறங்கி விட்டன. இதுதான் ஜீவா ஸ்டைல்; `முதலில் பணி-அப்புறம் மனி!'
வேலைக்கு ஜீவா அழைத்துவந்த ஆட்கள் இருவருமே வடக்கத்தியர்கள். இருவருக்கும் வயது இருபதுக்கு மேல் இருக்காது. ஒருவன் நல்ல நிறமாய் இருந்தான். அடுத்தவன் கறுப்பு. காதுகளில் சின்ன வளையங்கள். கைகளில் செம்பில் ஒரு காப்பு. களையான முகம். கறுப்பு சட்டை-முக்கால் பேண்ட். அவர்களுக்கு என்ன கஷ்டமோ? பிழைப்புக்காக குடும்பத்தார்களை விட்டுத் தொலைவில் வந்து வேலை பார்க்கிறார்கள்.
சிகப்பாய் இருந்தவன் சந்திராவை உற்றுப் பார்த்தான். அது எனக்குப் பிடிக்கவில்லை. -``என்ன ஜீவா, நீயும் இவைங்கள வேலைக்கு வச்சிருக்கியா?"
``ஆமாம் வாசு... என் ஆபீசுக்குப் பக்கத்துலயே சின்னதா கீற்றுக் கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கேன்... இவைங்களே சமைச்சி சாப்பிட்டுக்கிறாய்ங்க... ஆறு பேர் தங்கி இருக்காய்ங்க... இதுவரை எந்தப் பிரச்சனையும் வரலை... என்ன, பாக்கு போடுவாய்ங்க... ஆனா வேலை சுத்தமா இருக்கும்...!
``இவைங்களுக்கு தமிழ் தெரியுமா?... இவைங்க பேர் என்ன?"
``நாம சொல்ற சேதியைப் புரிஞ்சுக்குவாய்ங்க... சிகப்பா இருக்குறவன் பேரு விகாஸ்... கறுப்பன் பேரு கிருஷ்ணா... இவைங்க குடும்பங்கள் பெரிசு… வீடியோவில் பார்த்தேன்... ஏழைங்க... சாப்பாட்டுக்கு வழியில்லாமத்தான் இங்கே வந்திருக்காய்ங்க... வாரா வாரம் வீட்டுக்குப் பணம் அனுப்பிடுவாய்ங்க!"
``இப்படியே போனா எதிர்காலத்துல என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்குது ஜீவா... நம்ம ஆளுகளுக்கு எதிர்காலத்துல வேலை கிடைக்குமாங்கிற கேள்வி வருது...! காலம்தான் இதுக்குப் பதில் சொல்லணும்... சரி ஜீவா, இவைங்க நல்ல பயல்கள்தானே?"
``நல்லவைங்கதான்... பாக்கு மட்டும் போடுவாய்ங்க... அதைக் கண்டுக்காம விட்டுரு!" என்ற ஜீவா, அவர்களுக்குச் செய்யவேண்டிய வேலையைத் தமிழிலேயே விளக்கி விட்டுக் கிளம்பினான். அவனுக்கு நான்கு இடங்களில் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
``சரிடா, நான் கிளம்புறேன்... அவைங்களுக்கு நீ எதுவும் பணம் தர வேண்டாம்... எல்லாம் நான் பார்த்துக்குறேன்... மதியச் சாப்பாட்டுக்கு அவைங்களே சப்பாத்தி சுட்டுக் கொண்டு வந்திருப்பாய்ங்க!"- என்ற ஜீவா புல்லட்டைக் கிளப்பினான்.
ஜீவா போன உடனே கிருஷ்ணா அலைப்பேசியை முடுக்கி அதில் ஏதோ இந்திப் பாட்டை ஓடவிட்டான். விகாஸ் உடைந்த டைல்ஸ்களை சுத்தம் செய்து இரும்புச் சட்டியில் அள்ளினான். அள்ளியபின்பு என்னைப் பார்த்தான். `இதை எங்கே கொட்டுவது?' என்ற கேள்வி அவன் விழிகளில் இருந்தது. நான் வெளியே ஓரிடத்தைக் கைக்காட்டினேன். அங்கே கொட்டிவிட்டு வந்தான்.
கற்கள் பதிக்கவேண்டிய பகுதியை டேப்பில் அளந்து பையிலிருந்த பேப்பரில் குறித்துக் கொண்டான். வாங்கி வந்திருந்த டைல்ஸ் சற்றே அளவு பெரிதாய் இருந்தது. முன்பு போடப்பட்டிருந்த கற்கள் ஓரடிக்கு ஒன்று என்ற அளவில் இருந்தன. புதிய கற்கள் இரண்டுக்கு இரண்டு என்ற அளவில் இருந்தன. அதனால் கற்களை அளவு குறைக்க, `கட்டிங் - மெஷினை' தயார் செய்த விகாஸ், `ப்ளக்-பாயிண்ட்' தேடி மீண்டும் என்னைப் பார்க்க, நான் கண்களால் காட்டினேன். அதில் செருகப் பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியின் வயரைக் கழற்றி விட்டு, மெஷினின் வயர்-முனைகளை பாந்தமாய்ச் செருகினான்.
கட்டிங்-பிளேடு சுழல்கிறதா என்று ஒருமுறை ஓடவிட்டு அணைத்தான். பதிக்கவேண்டிய இடத்தின் அளவிற்கேற்ப புதிய கற்களை வெட்ட முனைந்தவன் என்னைப் பார்த்து, `தூசி பறக்குமென்று செய்கையால் உணர்த்தி அறைக்குள்ளே போகச் சொன்னான். அடுக்களைக் கதவுகளையும் மூடச் சொன்னான்.
அடுக்களைக் கதவை நான் மூடப் போனபோது, ``என்னங்க, டீ சாப்பிட்ருங்க!" என்ற சந்திரா. ``அந்தப் பசங்களுக்கும் டீ போட்டிருக்கேன்... கொடுத்திடவா?" என்று என்னைக் கேட்டாள்.
``போட்டீன்னா கொடு!" என்றேன்.
சந்திரா கொடுத்த தேநீர் டம்ளரை வாங்கும் போதும் விகாஸ் அவளைப் பார்த்த பார்வை எனக்குப் பிடிக்கவில்லை. கிருஷ்ணா யதார்த்தமாய் இருந்தான். வடக்கத்தியர்கள். எல்லாவிதத்திலும் காய்ந்து கிடப்பவர்கள். நாம்தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அடுக்களைக்குள் நுழைந்து சந்திராவைத் தாழ்வான குரலில் எச்சரித்தேன்.
``நான் குளிக்க போறேங்க… நீங்க கவனிச்சிக்கங்க!"- என்ற சந்திரா மாற்றுக்கு நைட்டி மற்றும் உள்ளாடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.
நான் எனது அறைக்குள்ளே வந்ததும் மெஷின் ஓடும் சத்தம் கேட்டது. என்றாலும் என் காதுகளை நான் கூடத்தின் பக்கத்திலேயே வைத்திருந்தேன். கிருஷ்ணா சிமெண்டைப் பேஸ்ட்டுடன் கலந்து குழைத்தான்.
மெஷின் நிறுத்தப்பட்டதும் எனக்கு அறைக்குள் இருப்பு கொள்ளாமல் கூடத்துக்கு வந்தேன். இன்னும் தூசி முற்றிலும் வெளியேறவில்லை என்று விகாஸ் கை காட்டினான். நான்,``பரவாயில்லை" என்றேன்.
வெட்டிய கற்களைத் தன் கைக்கு வாகாக எடுத்து வைத்துக் கொண்ட விகாஸ், அதன் பின் புறத்தில் சிமெண்ட்டை கரணையால் பூசினான். பள்ளத்திலும் கலவையைக் கொட்டிக் கல்லை அவன் வைக்கப் போன வேளையில் குளியலறையில்,`தொம்' என்ற சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து சந்திராவின்,``அம்மா!" என்ற அலறல்.
நான் ஓடிப்பார்த்தேன். குளியலறைக் கதவு உள்ளே நாதாங்கி போடப் பட்டிருந்தது.
நான் கதவைத் தட்டினேன். ``சந்திரா, சந்திரா... என்னாச்சு?"
உள்ளிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. எனக்குப் பயத்தில் உடம்பு நடுங்கத் தொடங்கியது.
என் பின்னால் வந்த விகாஸ் கதவைத் தட்டினான். பிறகு ஸ்குரூ-டிரைவரை கதவிடுக்கில் விட்டு உள் பக்கத்து நாதாங்கியை விலக்கித் திறந்து விட்டான். நான் உள்ளே நுழைந்தேன். சந்திரா மூர்ச்சையாகி கிடந்தாள்.வெளியே தூக்கிவந்து முகத்தில் தண்ணீர் தெளித்து, ``சந்திரா, சந்திரா" என்று கன்னங்களில் தட்டினேன். விழிகள் லேசாய்த் திறந்தாளே ஒழிய, பேச்சு வரவில்லை. எனக்குப் பதற்றமானது.
விகாஸ், ``சார், டாக்டர்!" என்றான்.
நான் எனது ஸ்கூட்டியைத் தெருவில் இறக்கினேன். மருத்துவரிடம் போகுமுன்னால் அலைப் பேசியில், ஜீவாவை அழைத்துத் தகவல் சொன்னேன். மருத்துவ மனைக்கு வரச்சொன்னேன்.
நான் ஸ்கூட்டியை முடுக்க, விகாஸ், சந்திராவை அலாக்காய்த் தூக்கிவந்து என் பின்னால் அமர்த்தி, அவன் அவளுக்குப் பின்னால் உட்கார்ந்து பிடித்துக் கொண்டான். கிருஷ்ணாவிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு நாங்கள் மருத்துவ மனைக்கு விரைந்தோம்.
மருத்துவமனையிலும் விகாஸ்தான் சந்திராவைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் கிடத்தினான்.
மருத்துவர் எனக்கு நன்கு பழக்கமானவர்தான். பரிசோதித்தபின்,``இது அதிர்ச்சியில் உண்டான மயக்கம்தான் சார்…ஒண்ணும் பயப்பட வேண்டாம்…!" என்று டாக்டர் சொன்னபோது சந்திராவும் முழுதாய்க் கண்கள் திறந்து விட்டாள்.
``என்னம்மா, எப்படி இருக்கீங்க?" - டாக்டர் கேட்டார்.
``நல்லா இருக்கேன் டாக்டர்... நான் எப்படி இங்கே வந்தேன்?"-என்று கேட்டாள் சந்திரா.
``பாத்-ரூமுல வழுக்கி விழுந்து மயக்கமாய்ட்டே!" என்றேன் நான்.
அதற்குள் ஜீவாவும் அங்கே வந்துவிட்டான்.``என்னம்மா, எப்படி இருக்கே?"
``நல்லா இருக்கேண்ணே!"
``வாசுதாம்மா ரொம்ப பயந்திட்டான்!"
``ஓகே சார், நான் கிளம்புறேன்!" - என்றார் டாக்டர்.
``தேங்க் யூ வெரிமச் டாக்டர்... இவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகலாமில்லையா?"
``தாராளமா!"என்ற டாக்டர் விலகி நடந்தார்.
``ஜீவா, நான் இந்த விகாசுக்குதாண்டா நன்றி சொல்லணும்... இவன்தான் பாத்-ரூம் கதவைப் புத்திசாலித்தனமாத் திறந்தான்... இவனைப் போய் நான் சந்தேகப் பட்டேன்!"
ஜீவா, விகாசிடம் என்னவோ இந்தியில் சொல்ல, அவன் சொன்ன பதில் எனக்குப் புரியவில்லை.
``வாசு, இவன் என்ன சொல்றான்னு புரிஞ்சதா?... இவனோட அம்மா, நம்ம சந்திரா மாதிரியே இருப்பாங்களாம்... அதான் இவனும் பயந்திட்டேன்னு சொல்றான்!"
நான் குற்ற உணர்ச்சியெல்லாம் விலகி, விகாசை அன்போடு கட்டிக் கொண்டேன்.