- அய்யாவை பின்பற்றி தங்களை ‘அய்யாவழி மக்கள்’ என அழைத்துக்கொள்வதில் பூரிப்படைந்தனர்.
- சுவாமிகளின் இயக்கத்தால் சமயமாற்றம் அதிக அளவில் நடைபெறுவது தடை செய்யப்பட்டது.
பேய், பிசாசு, பில்லி, மந்திரம், மை என்ற பல்வேறான மூட நம்பிக்கைகளில் உழன்ற பாமரர் கூட்டத்திற்கு நீங்கள் ஒரே நினைவுடன் வாழ்க்கையை நடத்துங்கள்; அந்த மாஞால நினைவுகள் எல்லாம் மாயை அன்றி வேறல்ல' என்று அன்புடனும், உறுதியுடனும் கூறி அவைகளின் மேலிருந்த நம்பிக்கையை ஒழித்து, புதுமையான வாழ்விற்கு மக்களை வழி நடத்திச் சென்றார் அய்யா வைகுண்டர். மேலும் அக்காலத்தில் மலையரசர் என்ற காணிக்காரர்கள்தான் பேய்களை மந்திரங்களால் ஓட்டுவார்கள். அவர்களிடமிருந்து மந்திரங்களை பறித்து விட்டதாகவும், இனிமேல் அவர்களிடம் போக வேண்டாமென்றும் மக்களைத் தைரியப்படுத்தினார்.
திருக்கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டி அமர்த்தப்பட்டவர்கள் வல்லுடும்பாகப் பற்றிக்கொண்டு மேட்டுக்குடியினர் என்ற போர்வையில் நடமாடினர்; இறைவனுக்கு உரிமை சுற்றம் பூண்டனர்; மற்றவர்களை ஒதுக்கினர்; எளியோரை எட்ட நிறுத்தினர். திருவிதாங்கூரில் திருக்கோவில்களின் உள்ளே மட்டுமின்றி அவைகளின் சுற்றுப்புற நடை பாதைகளில் கூட காலடி வைக்க முடியாத நிலையில், ஒடுக்கப்பட்ட இன அப்பாவி மக்கள் தங்களின் பக்தி மிகுதியால் தொலைவில் நின்று காணிக்கைகளை எறிந்து செலுத்தி பூசாரிகளால் வீசி எறியப்படும் இலைக்கட்டுப் பிரசாதங்களை பெற்று மகிழ்ந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களின் இவ்விழி நிலையை போக்க வைகுண்ட சுவாமிகள் விரும்பினார். திருச்செந்தூரில் விஞ்சை பெற்ற உடனே முருகன் கோவில் நடைமுறைகளுக்கெதிராக வைகுண்டர் குரல் எழுப்பினார்.
"காணிக்கை வேண்டாதுங்கோ
கைக்கூலி கேளாதுங்கோ
பூசை ஏறாதுங்கோ
பலி தீபம் ஏறாதுங்கோ
பொய் கொண்ட தேரோட்டம்
புனக்காரம் ஏறாதுங்கோ
தாதி கை காட்டல்
சப்பிறங்கள் ஏறாதுங்கோ
ஆலத்தி கை விளக்கு
ஆராட்டு பாராதுங்கோ
சாலத்திப் பாராதுங்கோ
சகலப் பூவேறாதுங்கோ
கொளுந்து மஞ்சணை மாலைக்கும்
பையுடன் சந்தனமும்
விழுந்து நமஸ்காரம் முதல்
வேண்டாமென்று சொல்லிடுங்கோ
ஓவென்று உரையாதுங்கோ
ஓமமுறை ஏறாதுங்கோ
தீவரணைக் காணாதுங்கோ
திருநாளைப் பாராதுங்கோ"
என்று எச்சரிக்கை விடுத்தார்.
மக்களின் வழிபாட்டு முறைகளில் காணப்பட்ட மூட நம்பிக்கை நிறைந்த சடங்கு முறைகளையும், அர்த்தமற்ற ஆசாரங்களையும் வீண்செலவுமிக்க விழா நிகழ்ச்சிகளையும் கைவிடுமாறு வற்புறுத்தினார். காணிக்கை, காவடி, பூசை, தீபாராதனை, தேரோட்டம், தாதி கை காட்டல், சப்பரங்கள், ஆராட்டு என்பன போன்றவற்றை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டார். இறைவழிபாட்டு ஊர்வலங்களில் மேளதாளங்கள் ஒலித்திட, தேவதாசியர் ஆடல்பாடல்களுடன் அமர்க்களப்படுத்தினர். சுவாமிகள் இத்தகைய செயல்களை அறவே வெறுத்தார்.
"பம்பை பரத்தை பகட்டு கைகாட்டலெல்லாம்
எம்பரனுக்கேற்ற இயல்பல்ல மாமுனியே"
என அகிலம் சுவாமிகளின் வெறுப்பினை வெளிக்காட்டுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காத்திட வைகுண்ட சுவாமிகள் செய்த உயரிய பணிகள் அவரை 'அய்யா' என உரிமையோடும் அன்போடும் மக்கள் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருக்குமாறு செய்தன. மக்கள் அவரை கடவுளின் ஓர் அவதாரம் எனக் கருதினர். அவராற்றிய அற்புதங்கள் அவரது அன்பர்களை நல்வழிப்படுத்திடவே அரங்கேறின. அய்யாவை ஆண்டவனாகவே அவர்கள் கண்டனர். முதற்பொருளே தங்கள் முன்னிலையில் வந்ததாக எண்ணி பெருமிதம் அடைந்தனர். அய்யாவை பின்பற்றி தங்களை 'அய்யாவழி மக்கள்' என அழைத்துக்கொள்வதில் பூரிப்படைந்தனர்.
அய்யாவழி மக்கள் அய்யாவை வழிபடுதலின்றி பிற தெய்வங்களை வழிபடுதலில் ஆர்வமின்றி இருந்தனர். தங்களுடைய வழிபாட்டு நெறிகளுக்கேற்ப சில பதிகளையும் ஆயிரக்கணக்கான நிழல்தாங்கல்களையும் தோற்றுவித்தனர். இந்து ஆலயங்களில் சென்று வழிபட உரிமை மறுக்கபட்டவர்களின் குறையை தீர்க்கும் வண்ணம் வைகுண்ட சுவாமிகளே பஞ்சப் பதிகளை எழுப்புவித்தார். அவை தோப்புப்பதி (சாமி தோப்பு), அம்பலப்பதி (மூலகொண்டப்பதி), முட்டப்பதி, தாமரைகுளம் பதி, பூப்பதி.
இவை அய்யா வழி மக்களின் புனிதமிக்க வழிபாட்டு தலங்களாக மாறின. இவை தவிர ஊர்தோறும் உள்ள நிழல்தாங்கல்களும் மக்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்தன.
வைகுண்ட சுவாமிகளின் சீர்திருத்த இயக்கம் கிறிஸ்தவ மத போதகர்களுக்கு ஒரு சவாலாகவே விளங்கியது. சுவாமிகளின் வருகையால் அவர்களின் பணியில் தேக்கம் ஏற்பட்டது. வைகுண்டர் தனது இயக்க பணியில் எம்மதமும் சம்மதம் என கொண்டு, அனைத்து மக்களிடமும் அன்பு காட்டினாரே அல்லாமல் சாதி, மதம் பாராட்டி எப்பிரிவினரிடமும் காழ்ப்புணர்ச்சி காட்டவில்லை. எனினும் தென்திருவிதாங்கூர் மண்ணில் கிறிஸ்தவம் வேரூன்றி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தழைத்து பரவிவரும் காலத்தில் கிறிஸ்தவ மதப்போதகர்கள் இந்து மதம் விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு அதிக மக்களை மதமாற்றம் செய்து கொண்டிருந்த வேளையில் சுவாமிகளின் இயக்கம் ஒரு பெரிய தடைக்கல்லாக அமைந்துவிட்டது. எனவே, கிறிஸ்தவ போதகர்கள் ஆத்திரமடைந்தனர். வைகுண்டரின் இயக்கத்தை வெகுவாக சாடினர். அவரை பரம எதிரியாக கருதினர்.
கிறிஸ்தவ சமய போதகர்கள் உரைத்த அவதூறுகள் யாவற்றையும் சுவாமிகள் சகித்துக்கொண்டார். எனினும் கிறிஸ்தவத்தின் வருகையால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளை விமர்சித்தார். சமுதாய அமைப்பில் சாதிகள் ஏற்படுத்திய பிரிவினைகளையும் கடந்து சமயப்பிரிவினைகள் ஏற்படுத்திய பிரச்சனைகள் கண்டு சுவாமிகள் வருத்தமுற்றார்.
புதிய சமயத்தின் வருகையால் சாதி என்ற பெயரில் நிலவிய ஒருவிதமான சிறு ஒற்றுமை கூட சிதறடிக்கப்பட்டது; உறவுகள் ஊஞ்சலாடின; குடும்ப அமைப்பில் கூடபிளவுகள் துளிர்விடலாயின. சமய நிலையினை அடிப்படையாக கொண்டு சமுதாய நிகழ்வுகளில் கூட பிரிவினை பேதங்கள் இடம் பெறலாயின. சகோதரத்துவமும், ஒற்றுமையும், சகிப்புத்தன்மையும் ஒரே சாதியில் கூட சிறிது சிறிதாக மறையத்தொடங்கின. இப்பிரிவினையை சுவாமிகள் வன்மையாக கண்டித்தார்.
"விருச்சமுள்ள நீசன் வேசை நசுறாணியவன்
வையகங்களெல்லாம் வரம்பழித்து மானீசன்
நெய்யதிய சான்றோர்கள் நெறியை யெல்லாம் குலைத்து
பேரழித்து தர்மம் பெருமையெல்லாம் தானழித்தான்"
என சமுதாய கட்டுக்கோப்பானது புதிய சமயப்போதகர்களால் அழிக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்தார்.
சுவாமிகளின் இயக்கத்தால் சமயமாற்றம் அதிக அளவில் நடைபெறுவது தடை செய்யப்பட்டது. வைகுண்ட சுவாமிகளின் இயக்கம் கிறிஸ்தவம் பரவிட ஒரு தடைக்கல்லாக அமைந்தது. சுவாமிகள் நடத்திய சமய சீர்திருத்தம் அன்றைய சமய வாழ்வில் நிலவிய மூடப்பழக்க வழக்கங்களையும், குறைகளையும் இடித்துரைத்ததுடன், எளியதோர் சமய வாழ்வினை சமைத்தது. அதன் விளைவாக சுவாமிகளை பின்பற்றி, திருவிதாங்கூர் சமய வரலாற்றில் இந்து சமயத்துள்ளாக ஒரு புது சமயப் பிரிவு தோன்றியது. பிராமணியத்திற்கு எதிராக, பாமரரும் புரிந்து கொள்ளத்தக்க எளிமையான சமய நெறியினை வழங்கியது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இறைவழிபாட்டில் இடைத்தரகர்களாக செயல்படும் புரோகிதர்களை வெளியேற்றியது. மொத்தத்தில், புதியதொரு, புதுமையான சமயநெறியினை அய்யா அருளினார். அய்யாவின் சமய சீர்திருத்தம் கிறிஸ்தவம் பரவுவதை ஓரளவு தடைப்படுத்தியது.
வைகுண்ட சுவாமிகளின் சீர்திருத்த இயக்கம் சமுதாயத்தில் பற்பல மாற்றங்கள் ஏற்பட காரணமாய் அமைந்தது. சுவாமிகளின் காலத்திலும் அதன் பின்னரும் நிழல் தாங்கல்கள் பெருவாரியாக தோன்றலாகி மக்களிடையே சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தின. அடிப்படை உரிமையினை பெறும் நோக்கினில் தோள் சேலைப்போராட்டம் நடத்தப்பட்டது. ஆலய நுழைவுப் போராட்டம் பல்வேறு ஆலயங்களில் நடந்தேறியது. எதிர்காலத்தில் நாராயண குரு, ராமலிங்க அடிகள் போன்ற சீர்திருத்தப் பெரியார்களின் இயக்கங்களில் வைகுண்ட சுவாமிகளின் சீர்திருத்தக் கோட்பாடுகள் எதிரொலிக்கலாயின.
சுவாமிகள் தனது கொள்கைகளை பரப்பிட நிழல் தாங்கல்கள் பலவற்றை நிறுவினார் என்பதை முன்னர் அறிந்தோம். நிழல்தாங்கல்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்திட வேண்டுமென்பதில் சுவாமிகள் மிக்க நாட்டம் கொண்டிருந்தார். அதற்காக தனது சீடர்களை பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி தனது கொள்கைகளை மக்களிடையே எடுத்துக்கூறி, நிழல் தாங்கல்களை நிறுவிடுமாறு பணித்தார். சீடர்களும் தங்கள் பணிகளை செவ்வனே நிறைவேற்றினர். அனைத்து சமூகத்தவர்களும் சுவாமிகளின் கட்டளையை ஏற்று ஏராளமான நிழல்தாங்கல்களை நிறுவினர். சுவாமியின் சீர்திருத்தம் மக்கள் புரட்சிக்கு வித்திட்டது. அதை பற்றி வரும் தொடரில் காண்போம்....