அருணகிரிநாதரை பாட்டு போட்டியில் வெற்றி பெற செய்த திருச்செந்தூர் முருகன்
- அருணகிரிநாதரின் சில பாடல்கள் முக்திக்கு வழி வகுத்தன.
- வில்லிபுத்தூரார் தனது தவறை உணர்ந்தார்.
தமிழகத்தில் சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு முருகர் வழிபாட்டில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் அருணகிரிநாதர். அவர் பாடிய திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்கள் முருகர் பக்தர்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.
அருணகிரிநாதரின் குறிப்பிட்ட பாடல்களை மனமுவந்து பாடும்போது பிரச்சனைகள் விலகுவதை கண்கூடாக கண்டனர். அருணகிரிநாதரின் சில பாடல்கள் முக்திக்கு வழி வகுத்தன. அதனால்தான் அவரது திருப்புகழ் பாடல்கள் புகழ் பெற்றன.
அதிலும் திருச்செந்தூர் தலத்தில் தங்கி இருந்து ஒவ்வொரு நாளும் முருகனை வழிபட்டு அவர் பாடிய பாடல்கள் மிகப்பெரிய சக்தி கொண்டதாக திகழ்கின்றன. அதனால்தான் திருச்செந்தூரில் அருணகிரிநாதர் இருந்த காலகட்டத்தில் அவரது புகழ் தமிழகம் முழுவதும் பரவி இருந்தது.
அந்த கால கட்டத்தில் வில்லிபுத்தூரார் என்ற தமிழ்ப்புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தீவிரத் தமிழ்ப்பற்று கொண்டவர். மற்ற புலவர்களை தன்னுடன் பாடல் பாடும் போட்டிக்கு வருமாறு அடிக்கடி அழைப்பு விடுப்பார்.
போட்டி நடக்கும்போது வில்லிபுத்தூரார் தனது கையில் நீளமான ஒரு துரட்டி ஒன்றைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய சிறிய அரிவாள் கட்டி வைக்கப்பட்டு இருக்கும். அதை தனக்கு எதிராக போட்டிக்கு வந்திருக்கும் புலவரின் காது மீது வைத்துக்கொள்வார்.
தன்னுடன் போட்டி போடும் புலவர்களிடம் பாடல் பாடி கேள்வி கேட்பார். போட்டிக்கு வந்திருக்கும் புலவர் பதிலில் ஏதேனும் தவறு இருந்தால் சற்றும் தயங்க மாட்டார். உடனடியாக அடுத்த வினாடியே துரட்டியை இழுத்து அந்த புலவரின் காதை அறுத்து விடுவார்.
வில்லிபுத்தூராரிடம் காது அறுபட்ட பல புலவர்கள் திருச்செந்தூருக்கு சென்று அருணகிரிநாதரைச் சந்தித்து விஷயத்தைக் கூறினார்கள். வில்லிபுத்தூரார் நல்லவர்தான். என்றாலும் அவரது இந்த செயல் தவறானது என்பதை அவருக்கு உணர்த்த அருணகிரிநாதர் விரும்பினார்.
எனவே போட்டி போட நான் வருகிறேன் என்று வில்லிபுத்தூராருக்கு தகவல் அனுப்பினார். அருணகிரிநாதரைப் பற்றி வில்லிபுத்தூரார் நன்கு அறிந்திருந்தார். என்றாலும் தமிழ்ச்செருக்கால் அவரையும் தன்னோடு போட்டிக்கு அழைத்தார். அருணகிரிநாதர் போட்டிக்கு சம்மதித்தார்.
போட்டி தொடங்கியது. துரட்டியோடு போட்டிக்குத் தயாராக வில்லிபுத்தூரார் அமர்ந்திருந்தார். அதைக் கண்ட அருணகிரிநாதர் சமமான இருவருக்கு இடையே நடக்கும் போட்டி என்பதால் தமக்கும் அது போல் ஒரு துரட்டி வேண்டும் என்று கூறினார்.
"நான் கேட்கும் கேள்விகளுக்கு வில்லிபுத்தூரார் சரியான பதில் கூறாவிட்டால் அவர் காதும் அறுக்கப்படும்" என்று ஒரு நிபந்தனையை விதித்தார். இதுவரை யாரும் வில்லிபுத்தூராரிடம் இப்படி பேசியது இல்லை. இதனால் அருணகிரிநாதர் சொன்னதை கேட்டு வில்லிபுத்தூரார் சற்று அதிர்ச்சி அடைந்தார். என்றாலும் அவருக்கு தனது புலமை மீது இருந்த நம்பிக்கையால் அதற்கு சம்மதித்தார்.
இதையடுத்து அருணகிரிநாதர் கையிலும் ஒரு துரட்டி கொடுக்கப்பட்டது. இருவரும் போட்டி போட்டு பாட ஆரம்பித்தனர். வில்லிபுத்தூரார் கேட்ட பாடல் கேள்விகளுக்கு அருணகிரிநாதர் பாடல் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இடை இடையே அவரும் பாடல் பாடி வில்லிபுத்தூராரை பதில் அளிக்க வைத்தார்.
போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தபோது 'ஏகாட்சரச் செய்யுள்' என்ற அமைப்பில் ஒரு பாடலை அருணகிரிநாதர் பாடினார். இதுதான் அந்த பாடல்.
திதத்தத்தத் தித்த இந்தாதை தாததுத்
தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து
தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை
தாததத்து
நிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி
தீதொத்ததே
இந்த பாடலை கேட்டதும் வில்லிபுத்துரார் அப்படியே திகைத்துப் போய் விட்டார். அவருக்கு அருணகிரிநாதர் பாடிய பாடலும் புரியவில்லை. அந்த பாடலுக்கான அர்த்தமும் தெரியவில்லை. என்ன செய்வது என்று திகைத்தார். அவருக்கு வியர்த்து கொட்டியது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்து விட்டார்.
அவர் அருணகிரி நாதரிடம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். நிபந்தனைபடி தனது காதை அறுத்து விடும்படி அருணகிரிநாதரிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அருணகிரிநாதர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வில்லிபுத்தூராரின் காதை அறுப்பது எனது நோக்கம் அல்ல என்றார். மேலும் புலவர்களின் காதை அறுத்து அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை இனி வில்லிபுத்தூரார் நிறுத்தவேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் கூறினார்.
வில்லிபுத்தூரார் தனது தவறை உணர்ந்தார். மனம் திருந்தினார். தாம் இனி அவ்வாறு செய்ய மாட்டேன் என்று உறுதி அளித்தார். பிறரை விமர்சிப்பதை விட்டுவிட்டு இனிப் புதிய செய்யுள் வகைகளில் கவனம் செலுத்துவேன் என்றும் கூறினார். பிறகு அருணகிரிநாதரிடம் மன்னிப்பு கேட்டார்.
வில்லிபுத்தூராரை அருணகிரிநாதர் திருச்செந்தூர் முருகன் அருளால்தான் வாதிட்டு வென்றார் என்று சொல்வார்கள். சுமார் 650 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திருவிளையாடல் திருச்செந்தூர தலத்தில் நடந்தது என்று தண்டபாணி சுவாமிகள் தனது குறிப்புகளில் எழுதி வைத்துள்ளார்.
அருணகிரிநாதரிடம் தோல்வியை தழுவிய வில்லிபுத்தூரார் சில ஆண்டுகள் கழித்து 'வில்லிபுத்தூரார் மகாபாரதம்' என்ற நூலை இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அருணகிரிநாதர் திருச்செந்தூர் முருகன் மீது வைத்திருந்த அளவற்ற நம்பிக்கைக்கு இதுஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
அருணகிரிநாதர் திருப்புகழ் தவிர கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி பாடல்களிலும் திருச்செந்தூர் முருகனின் சிறப்பையும், மகிமையையும் புகழ்ந்து பாடி இருக்கிறார். கந்தர் அலங்காரத்தில் வரும் அவர் பாடிய முருகனின் திருவடி பெருமைப் பாடல் மிக சிறப்பானது. இதுதான் அந்த பாடல்.
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில் தேம் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே
இந்த பாடலின் அர்த்தம் வருமாறு:-
திருச்செந்தூர் வயல்கள், சேல் மீன்கள் குதித்து விளையாடுவதால் அழிந்து விட்டன. பெண்களின் மனம் முருகன் அணிந்துள்ள கடம்ப மாலையின் மீது விருப்பம் உண்டாகி அழிந்து விட்டன. முருகப்பெருமானுடைய ஞானவேல் பட்டு, கடல் அழிந்தது. சூரபத்மன் அழிந்தான், கிரவுஞ்ச மலையும் அழிந்தது.
சூரபத்மன் கொடியவன், அவனை அழிக்க வேலை உபயோகித்தார். பக்தர்கள் அடியவர்களைக் காக்க காலை (திருவடியை) உபயோகித்தார். பக்தர்களின் தலையிலே பிரம்மா எழுதிய எழுத்தை, முருகனின் திருவடி, அவர்களின் தலையிலே பட்டு அழிக்கின்றது. இதனால் முருகனை வழிபடும் பக்தர்கள் பிறவிப் பெருங்கடல் துன்பத்தை அடையமாட்டார்கள். அவர்கள் முக்தி பாதைக்கு திரும்புவார்கள்.
இவ்வாறு முருகனின் திருவடிச் சிறப்பை கந்தர் அலங்காரத்தின் 40-வது பாடலில் அருணாகிரிநாதர் வெளிக்காட்டியுள்ளார். அது போல கந்தர் அலங்காரத்தின் இன்னொரு பாடலும் சிறப்பானது. இதோ அந்த பாடல்
நாளென் செயும் வினை தானென் செயு மெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
இந்தப் பாடலை சஷ்டி தினத்தன்று பூஜை அறையில் அமர்ந்து முருகனைப் பார்த்து 6 முறை பாடுங்கள். நிச்சயம் அந்த முருகப்பெருமான் உங்கள் வினைகளை தீர்த்து வைக்க ஓடோடி வந்து விடுவார். ஒவ்வொரு நாளும், நீங்கள் செய்த வினையால் கஷ்டம் வராது. நவகிரகத்தால் வரும் கஷ்டங்கள் உங்களை நெருங்காது, அப்படியே பிரச்சனை வந்தாலும், முருகப்பெருமான் தன் அழகான தோற்றத்தோடு உங்கள் முன் வந்து நிற்பான் கவலையே படாதீங்க.
முருகனுக்கு பிடித்தமான எத்தனையோ தமிழ் பாடல்கள் இருந்தாலும், சூரசம்ஹாரம் தினத்தன்று பூஜை அறையில் கட்டாயம் உச்சரிக்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. கந்தர் அலங்காரப் பாடல்களைப் பாடினால் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் என்னென்ன என்பதை அவரே முதலில் நின்று பார்த்து நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை எல்லாம் தன் கையில் இருக்கும் வேல் கொண்டு அழித்துவிடுவார். நிச்சயம் இது நடக்கும்.
நம்பிக்கை உள்ளவர்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகரை மனதார நினைத்து, கையில் கொஞ்சம் சிவப்பு புஷ்பங்களை வைத்துக் கொள்ளுங்கள். அரளிப்பூ, பன்னீர் ரோஜா, எதுவாக இருந்தாலும் சரி இந்த பாடலை படித்துக் கொண்டே முருகன் மீது பூவை தூவுங்கள். நீங்கள் நினைத்ததை திருச்செந்தூர் முருகன் நிச்சயமாக நிறைவேற்றுவார்.
அடுத்த வாரம் இன்னொரு அற்புதத்தை காணலாம்.