பரமனை சாந்தப்படுத்திய சந்திரகாந்தா
- சந்திரகாந்தா என்னும் வடிவத்தை அம்பிகை எடுத்துக் கொண்டதற்கான கதை ஒன்று உண்டு.
- சிவனாரும் தக்க தருணத்தில் வந்து மணம் புரிந்தார். இப்போதுதான், தட்சனுடைய ஆணவம் வெளிப்படலானது.
நவராத்திரி தேவியராக அம்பிகை வடிவங்கள் பல ஏற்றுக்கொள்கிறாள். இத்தகைய வடிவங்களில் ஒன்று சந்திரகாந்தா என்னும் வடிவமாகும்.
சந்திரகாந்தா என்னும் வடிவத்தை அம்பிகை எடுத்துக் கொண்டதற்கான கதை ஒன்று உண்டு. சொல்லப்போனால், நவராத்திரி தேவியர் வடிவங்களுக்கான அடிப்படைத் தகவலே, தட்சன் மகளாக அம்பிகை எடுத்த அவதாரம்தான்!
பிரம்மாவின் மானசப் புத்திரர்களில் ஒருவரும் பிரஜாபதியுமான தட்சனுக்கு வினோதமான ஆசை ஒன்று தோன்றியது. சிவபெருமான் தனக்கு மாப்பிள்ளை ஆகவேண்டுமென்பதே இந்த விந்தையான ஆசை. உள்ளத்தில் தோன்றிய ஆசையை தட்சன் வெளிப்படுத்த, அந்த ஆசையை நிறைவேற்றுகிற வகையில், அம்பிகையை தட்சன் மகளாகப் பிறக்கும்படி ஆணையிட்டார் சிவப் பரமனார். அம்பிகை அவ்வாறே செய்தாள்.
மகள் வளர்ந்தாள். தட்சன் மகள் என்பதால் தாட்சாயிணி என்றழைக்கப்பெற்றாள். சிவனாரும் தக்க தருணத்தில் வந்து மணம் புரிந்தார். இப்போதுதான், தட்சனுடைய ஆணவம் வெளிப்படலானது. பரமனாரே தனக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று அவன் முன்னர் ஆசைப்பட்டதற்கும் இந்த ஆணவமே காரணம். எல்லோரும் வணங்குகிற சிவப்பரம்பொருள் தன்னை வணங்குவார் என்னும் மதர்ப்பு.
ஆணவம் தலையைக் கிறுகிறுக்கச் செய்ய, யாகம் செய்யத் தொடங்கினான். தேவர்கள், யட்சர்கள் என்று பலருக்கும் அழைப்பு விடுத்தான். சிவனாருக்கு அழைப்பில்லை. தாட்சாயிணிக்கோ யாகத்திற்குச் செல்லவேண்டும் என்று ஆசை. பிறந்த வீட்டின் பெருமை மோகத்தில் திளைத்தவள், கணவன் சொல்லியும் கேட்காமல் யாகசாலையை அடைந்தாள். தந்தையால் அவமானப்படுத்தப்பட்டாள்.
தட்சன் மகளாகப் பிறந்த பிறவியே வேண்டாமென்றெண்ணி நெருப்பில் குதித்தாள். பரிகாரம் தேடுவதற்காக மீண்டும் பூமியில் பிறப்பெடுத்தாள். இதற்கிடையில், மலையரசனான ஹிமவானும் அவன் மனைவி மேனையும், தங்களுக்குக் குழந்தை வேண்டுமென்று ஆதிசக்தியிடம் பிரார்த்தித்தனர். அம்பிகை மலையரசன் மகளாகவே பிறப்பெடுத்தாள். பர்வதராஜனுடைய புதல்வி என்பதால் பார்வதி என்றும் ஹிமவான் மகளென்பதால் ஹைமவதி என்றும் பெயர்பெற்றாள்.
திருக்கைலாயத்தை விட்டு அம்பிகை வெளியேறியிருந்த நிலையில், தாமும் இமயமலைச் சாரலுக்குச் சென்று தவம் செய்தார். இறைவனாரிடம் சென்ற நாரதர், ஹிமவான் மகளாக அம்பிகை அவதரித்திருப்பதை நினைவூட்டினார்.
இதே சமயத்தில், ஹிமவான் மகளான சைலபுத்திரியும், தன் நிலையை உணர்ந்து தவம் செய்யப் புறப்பட்டாள்.
உக்கிரமான தவத்தில் ஆழ்ந்த சைலபுத்திரியை மணம் புரிந்துகொள்ள, தக்க தருணத்தில் சிவனாரும் வந்தார். இங்குதான், சந்திரகாந்தாவின் கதை தொடங்குகிறது.
வந்ததுதான் வந்தாரே, மாப்பிள்ளைக் கோலத்தில் வந்தாரா பெருமான்? பயங்கரமோ பயங்கரம், அதிபயங்கரம். முகமெல்லாம் நீலம் பாரித்து, பாம்புகளுக்கு நடுவில் நின்றார். போதாக்குறைக்கு புலித்தோலையும் யானைத்தோலையும் பிணைத்து முடிச்சிட்டு அரையில் ஆடையாக அணிந்திருந்தார். சடைக் கற்றைகள் ஏனோதானோவென்று சடம்பு சடம்பாகக் குலுங்க, உடம்பு முழுவதும் பஸ்மத்தூள். பாம்புகளை விளையாட விட்டுக் கொண்டு, இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டு…….சடைக் கற்றைகள் ஆடுவதைக் கண்டோருக்கெல்லாம் ஏகத்துக்கும் அச்சமாக இருந்தது. இந்தக் கோலத்தைக் கண்ட அம்பிகைக்கும் அச்சமாகத்தான் இருந்தது.
என்ன செய்வது என்று சிந்தித்தாள். இத்தனை நாள் தவம் செய்து பெற்ற பேற்றினை விட்டுவிட இவள் சித்தமாக இல்லை. அச்சத்தை அச்சத்தாலேயே வெல்வது என்று எண்ணம் கொண்டாள். தவவலிமையின் வாயிலாகத் தானும் அச்சம் தரும் வடிவத்தை ஏற்றாள்.
பிரமாண்ட உருவம்; சிங்கத்தின் மீது அமர்ந்த கோலம். பத்துக் கரங்கள். ஒன்பது கரங்களில் பலவகையான ஆயுதங்கள். திரிசூலம், வில், அம்பு, கதை, வாள், கோடரி, மணி, கமண்டலம் ஆகியவற்றோடு தாமரை மலர் ஒன்றையும் கையில் ஏந்தியவள், வலக்கரம் ஒன்றினால் அபயமும் காட்டினாள்.
இந்த நிலையில் கண்களை மூடி உள்ளன்போடு தியானித்தாள். அச்சமூட்டும் கோலத்தை மாற்றிக் கொள்ளும்படியாகச் சிவனாரை வேண்டினாள்.
திருமணத்திற்கு வந்தவர்களெல்லாம் நடுநடுங்கியபடியே அம்பிகையின் அருகில் நின்றார்கள். அம்பாளின் அபய கரத்தைப் பார்த்தபோது, அவர்களின் நடுக்கம் குறைந்ததையும் சிவனார் கவனித்தார். அம்பிகையின் அன்புக்குப் பாத்திரமாகவும், அன்பர்களின் அச்சத்தைப் போக்கவும் ஒரேயொரு வழிதான் என்பதைத் திருவுள்ளம் கொண்டார். அதன்படி, தம்முடைய அச்சமூட்டும் தோற்றத்தை மாற்றிக்கொண்டு, அலங்கார ரூபனாகக் காட்சியளித்தார்.
அச்சமூட்டும் வகையில் சிம்ம வாகினியாக அம்பாள் கொண்ட கோலமே சந்திரகாந்தா என்னும் வடிவம்.
ஏதோ கதை போலவும் சிவபெருமான் திருவிளையாட்டும் அதற்கொரு அம்பிகையின் எதிர்விளையாட்டு என்பது போலவும் தோற்றம் தந்தாலும், சந்திரகாந்தா என்னும் திருவடிவத்தை அம்பிகை எடுத்தது எதற்காக?
அங்கே நடந்த நாடகத்தை இங்கே சற்று நினைவுபடுத்திக் கொள்வோம். திருமணம் என்று எல்லோரும் கூடிவிட்டார்கள். இந்த நிலையில், மாப்பிள்ளையானவர் சற்றே விபரீதம் செய்கிறார். அவரைக் கண்டவுடனேயே அனைவரும் தெறித்து ஓடுகிறார்கள்.
மாப்பிள்ளையை எப்படிச் சமாதானம் செய்வது? எப்படி அணுகுவது? எல்லோரின் சங்கடத்தையும் ஒற்றை வினையில் அம்பிகை முடித்து வைத்தாள். தானே பயங்கரியாக மாறிக் கொண்டாள். நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டுத் தன்னையே மாற்றிக் கொள்வதற்கு அம்பிகை சித்தமானதைக் கண்ட சிவனார், இவளின் அன்பின் பராக்கிரமத்தையும் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்.
அம்பிகையின் அபயகரம், இருவிதமாகப் பணி செய்தது. ஒன்று, அச்சமுற்று நின்றோருக்கெல்லாம் அடைக்கலம் காட்டி, அவர்களின் அச்சத்தையும் கவலையையும் போக்கியது; இரண்டாவது, அடைக்கலம் தரவேண்டிய அவசியத்தை ஐயனுக்கும் நினைவூட்டியது.
அம்பிகையை 'பந்தணை விரலி' என்றழைப்பார் மாணிக்க வாசகப் பெருமான். சாதாரணமாகப் பார்த்தால், பந்து விளையாட்டுக் காரி என்பதாக மட்டுமே பொருள்படும். பூபந்து விளையாடுகிற வழக்கம் மகளிர்க்கு இருந்தது; அவ்வகையில், பந்துகளை அணைத்து விளையாடுகிற பெண், பந்தணை விரலி என்றழைக்கப்படக்கூடும். ஆயினும், அம்பிகைக்கு இப்பெயர் சிறப்பாகப் பொருந்தும்.
பந்து என்பது ஒரு பொருள். யாரோ ஒருவருக்குப் பந்து சொந்தமென்றால், அவருடைய உடைமை என்று அந்தப் பந்தைக் குறிக்கலாம். பந்துக்குச் சொந்தக்காரர், உடையவர் ஆகிறார். கடவுளுக்கே உடையவர் என்று பெயர். அப்படியானால், கடவுளின் உடைமை எது? ஜீவன்களெல்லாம், அதாவது உயிர்களெல்லாம் உடைமைகள்.
பந்தைக் கையில் வைத்திருக்கும் அம்பிகை, ஒரு கையில் பந்தைப் பிடித்திருந்தாலும், மற்றொரு கையில் பரமனாரையும் பிடித்திருக்கிறாள். உடைமைகளான நம்மை ஒரு கையிலும் உடையவரான பரமனை மற்றொரு கையிலும் பிடித்து, இரண்டையும், இருவரையும் இணைக்கிறாள்.
சந்திரகாந்தா தேவியின் செயல்பாடும் இதுவேதான். பரமனைப் பார்த்து அனைவரும் அச்சப்பட்ட நிலையில், அவர்களின் அச்சத்தையும் போக்கினாள். அதே சமயம், ஐயனின் கோர ரூபத்தை மடைமாற்றி அன்புருவமும் கொள்ள வைத்தாள்.
அம்பிகை அவதாரம் எடுக்கிறாள்; நெருப்பில் குதிக்கிறாள்; தவம் செய்கிறாள். அனைத்தும் எதற்காக?
தவம் செய்யுங்கால், இலை தழையைக்கூட இவள் உண்ணவில்லை என்பதால், இவளுக்கு 'அபர்ணா' (பர்ணம் வேண்டாதவள்; பர்ணம்=தழை, சருகு) என்றே பெயர். இத்தனை தவமும் எதற்காக? யாருக்காக?
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையென்றால், தாயார் பத்தியம் இருப்பாள். அம்பிகை லோகமாதா அல்லவா? தவமும் செய்கிறாள்; தஞ்சமும் தருகிறாள்.
தொடர்புக்கு:- sesh2525@gmail.com