சிறப்புக் கட்டுரைகள்

உசுரே நீ தானே!... அத்தியாயம் - 21

Published On 2025-03-06 12:03 IST   |   Update On 2025-03-06 12:03:00 IST
  • “என் டியூட்டிய நான் சிறப்பா பண்ணிக்கிட்டு இருக்கேன்னு உங்களுக்கு புரூப் பண்ணியெல்லாம் காட்ட முடியாது பெருமாள்..”
  • வாயில் பிளாஸ்டர் போட்டு கைகள் சேரோடு கட்டப்பட்டு இருந்ததால், திவ்யாவால் எதிர்க்கவோ கத்தவோ முடியவில்லை.

நக்கலாய் கேட்ட இன்ஸ்பெக்டர் அழகரை பார்த்து, உள்ளுக்குள் கோபம் 'புளுக்' என்று பொங்கியது. அரசியல்வாதி அல்லவா? அதனால் கோபத்தை மறைத்து சிரித்தபடி கேட்டான் பெருமாள்

"சொல்லுங்க சார்!"

"இந்த பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறான் பாருன்னு, நம்ம ஊரு சைடுங்கள்ல ஒரு சொலவடை சொல்லுவாங்கன்ணு கேள்விப்பட்டு இருக்கீங்களா பெருமாள்?"

"ஆமா.. அதுக்கும் திவ்யா காணாமல் போன இந்த கேசுக்கும் என்ன சார் சம்மந்தம்...?"

"இருக்கு பெருமாள்… உன் தங்கச்சிய ஆள் வச்சு கடத்திட்டு, தேடுற மாதிரி ஒரு 'ஆக்ட்' குடுத்துட்டு திரியுற.. உன் நோக்கம் டேவிட்டயும், திவ்யாவையும் பிரிக்கனும்.. அந்த திரைக்கதைய அழகா எழுதி, காய கச்சிதமா நடத்துற..! சாரி.. நடத்துறீங்க.. ரைட்டா பெருமாள்!"

"மண்ணாங்கட்டி... ஆரம்பத்துல என் மொத்த குடும்பம் சந்தேகப்பட்டது. இப்ப நீங்களா..? சார்.. உண்மையிலேயே அவங்களை பிரிக்கனும்னா.. எப்பவோ செஞ்சுருப்பேன்… தவிர.. இப்படி 'டபுள்கேம்'-லாம் ஆடுற ஆள் இல்ல. எனக்கு சந்தோஷமோ, கோபமோ, துக்கமோ, எதுவா இருந்தாலும் ஸ்ட்ரெயிட்டா வெளிப்படுத்துற டைப்.. புரியுதா?"

"ம்.. போகப்போக புரிஞ்சுக்கிறேன்.."

"சார்… இதுல வேற ஒருத்தன் சம்பந்தப்பட்டிருக்கான். அவன்தான் இந்த கேம் விளையாடுறான்... நீங்க ஒத்துழைச்சாதான் அவனை புடிக்க முடியும்.."

"என் டியூட்டிய நான் சிறப்பா பண்ணிக்கிட்டு இருக்கேன்னு உங்களுக்கு புரூப் பண்ணியெல்லாம் காட்ட முடியாது பெருமாள்.."

"அட போங்க சார்… வக்கணையா பேசிக்கிட்டே இருப்பீங்க.. திவ்யாவ தேடுற வேலையை இனிமே நானே பார்த்துக்கிறேன் சார்..!"

திரும்பி தன் ஆட்களிடம் ,

"யோவ் அழகர் சார் அவர் டியூட்டிய சிறப்பா செஞ்சு முடிக்கட்டும்.. வாங்க நாம திவ்யாவ தேடுதல் வேட்டையை முருகநத்தம் கிராமத்துல ஆரம்பிக்கலாம்.."

-தன் கூட வந்த கட்சிக்காரர்களை அழைத்துக் கொண்டு, பெருமாள் கிளம்பி போனான்.

அவன் போவதையே நக்கலாய் பார்த்தபடி, கான்ஸ்டபிள் மணியிடம், "இந்த சினிமாவுல நடிப்பு அரக்கன்னு எவன் எவனையோ சொல்ராங்க… இந்தா போறான் பாருய்யா இவன்தான்யா நடிப்பு அரக்கனுக்கும் அப்பன்.."

சுற்றி நின்ற கான்ஸ்டபிள்கள் சிரித்தனர்.

போலீஸ் ஸ்டேஷன்...

தன் பெண்ணின் தாலியை எடுத்து கண்ணீர் மல்க பார்த்தார் ரங்கராஜன். "பாவிப்பய.. இப்படி அறுத்து அனுப்பி இருக்கானே.. அவன் நல்லாவே இருக்க மாட்டான்…" - சேலை முந்தானையால் பீறிட்டு வரும் அழுகையை, வாயை பொத்தி அழுதபடி சாபம் விட்டாள் ராஜேஸ்வரி.

"சரி.. சரி.. அழாதீங்க.. லிசா.. அவங்ககிட்ட சொல்லு…" தேவசகாயம் சொல்ல, லிசா, ராஜேஸ்வரியின் தோளை தட்டி "அழாதிங்க மதினி… திவ்யா கிடைச்சுடுவா.. அதுக்கப்புறம் ஒரு முகூர்த்தம் பார்த்து.. இன்னொரு தடவ ஒரு கோவில்ல வெச்சு தாலி கட்டிட்டா போச்சு.." என ஆறுதல்படுத்தி கொண்டிருந்த, அந்த நிமிடத்தில் சில மணி நேரங்களுக்கு முன்னால்.. வேட்டையன் பங்களாவில் என்ன நடந்தது என்பதை இந்தக் கதையை படிக்கும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில மணி நேரங்களுக்கு முன்னால்.. வேட்டையன் பங்களா!

கையில் 'கட்டிங் பிளேடுடன் திவ்யாவை நெருங்கிய முகமூடி மனிதன்.. "என்னடா கடத்துனவன் ரெண்டு பொம்பளைகளோட வந்து இருக்கானேன்னு யோசிக்காத.. என்கூட நான் சொல்ற படி செய்ய நீ சம்மதிக்கணும்.. அதுக்கு ஒத்துழைக்கணும். மீறி அடம்பிடிச்சேன்னு வையி… உன்னை இவங்களோட அனுப்பிடுவேன். இவங்க உன்னை பாம்பேக்கோ, பூனாவுக்கோ கூட்டிட்டு போய், புரோக்கர்ஸ்கிட்ட வித்துடுவாங்க.

அப்படித்தானே!

அவன் கேட்க, அந்த பெண்கள் இருவரும் தலையாட்டினர். திவ்யாவுக்கு ஒரு பயப்பந்து வயிற்றுக்குள் சுழன்றது.

"பயப்படாத.. இந்த கட்டிங்பிளேடால உன் விரலை வெட்ட மாட்டேன்.. ஆனா.. " கண் இமைக்கும் நேரத்தில், அவள் கழுத்தில் டேவிட் கட்டி இருந்த தாலியை பட்டென்று, கட் செய்தான். "தாலி நழுவி அவன் கைக்கு போனது.

இயக்குநர் A. ெவங்கடேஷ்


 

வாயில் பிளாஸ்டர் போட்டு கைகள் சேரோடு கட்டப்பட்டு இருந்ததால், திவ்யாவால் எதிர்க்கவோ கத்தவோ முடியவில்லை. ஆனால், கண்களில் மட்டும் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.

"அச்சச்சோ.. இதுக்கு பேருதான் தாரை தாரையாய் கண்ணீர் விட்டு அழுகுறதா.. அழு.. நல்லா அழு.."

இரக்கமே இல்லாமல் பேசியவன், தொடர்ந்தான். "அப்புறம்.. நீ எதுவுமே சாப்பிடல.. எங்களுக்கும் பசிக்குது. பிரியாணி ஆர்டர் பண்ணி இருக்கேன். வந்ததும் கையையும், வாயையும் அவிழ்த்து விட சொல்லுவேன். சாப்பிட மட்டும் பயன்படுத்தணும். சாப்பிட மறுத்தாலோ.. சத்தம் போட்டாலோ உன் அப்பன்.. ஆத்தா.. மாமா.. அத்தை இந்த நாலு பெருசுல ஒரு பெருசு முதல்ல சாவும்.. ஏன்னா.. என் ஆளுங்க ரெண்டு பேரு அவங்க இருக்கிற போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்நேரம் போயிருப்பானுங்க.."

'திவ்யா அழுதபடியே அவனை பார்த்தாள். "இவன் யாரு.. ஏன் இப்படி பண்றான்...!'

கேள்விகள் ஓடின.

"அப்புறம் சாப்பிட்டு முடிச்சதும் நாம இந்த இடத்த காலி பண்றோம்., எங்க போறோம்னு, உனக்கு தெரியனும்னா, நீ சமத்தா சாப்பிடும்போது சொல்வேன்.. சரியா?"

திவ்யாவின் கன்னத்தை தட்டினான். அவள், வெறுப்பாய் முகத்தை திருப்பினாள். சிரித்தபடி, முகமூடிக்காரன், தன் ஆட்களிடம் திரும்பி.. "டேய்.. இந்த தாலிய பார்சல் பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பு.." என எகத்தாளமாய் சொன்னான்.

அந்த அறுந்த தாலியை பார்த்துக்கொண்டு இருந்த, ரங்கராஜனிடம் இருந்து பறிக்கப்பட்டது. ரங்கராஜன் உள்பட நால்வரும் 'ஷாக்' ஆகி பார்த்தனர். அந்த இருவரும் நின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எந்த கான்ஸ்டபிளும் இவர்கள் பக்கம் திரும்பவே இல்லை. அவர்கள் வேலையில் அவர்கள் பிசியாய் இருந்தனர். பறித்த தாலியை பாக்கெட்டில் வைத்த அந்த இருவரில் ஒருவன், "இங்க பாருங்க.. ஸ்டேஷன் பிசியா இருக்கு.. அதோ வெளியே ஒரு சிகப்பு கலர் கார் நிக்குதா.. இப்போ அதுல நீங்க போய் சீட்ல ஏறி உட்காரணும். நீங்க போறது ஸ்டேஷன்ல இருக்க யாருக்கும் தெரிய கூடாது. நீங்க போன அடுத்த செகண்ட் நாங்க வந்து.. வண்டியை எடுத்துட்டு.. இந்த ஸ்டேஷனை விட்டு கிளம்பிடுவோம்.. புரியுதா? நால்வரும் தலையாட்ட, லிசா கேட்டாள்,

"எங்க கூட்டிட்டு போறீங்க..

"ம்.. சினிமாக்கு. சொன்னத மட்டும் செய்யுங்க. எக்குத்தப்பா நடந்துகிட்டா, ஸ்டேஷன்னு கூட பார்க்க மாட்டோம்.. பொட்டுன்னு புல்லட்ட மண்டையில சொருகிட்டு போயிகிட்டே இருப்போம்., ஜாக்கிரதை.. ம் . உங்க டயம் ஆரம்பிச்சாச்சு... ஒவ்வொருத்தரா நைசா நழுவி, கார்ல போயி உட்காருங்க.. கமான்.. க்விக்.. யோவ்.. நீ போய்யா முதல்ல... தேவசகாயத்தை முதலில் அனுப்ப, அவர் எந்த போலீஸ் கண்ணிலும் படாமல், அந்த சிகப்பு காரின் பின் சீட்டில் போய் ஏறினார். சரியாய் பத்து நிமிடத்தில் ஒவ்வொருவராய் சென்று பின் சீட்டில் அமர்ந்தனர்.

போலீஸ்காரர்கள் இவர்களை கவனிக்கவே இல்லை. அடுத்த இரண்டாவது நிமிடம்.. அந்த இருவரும் வந்து காரில் ஏறி, ரொம்ப கேசுவலாக காரை கிளப்பி, ஸ்டேஷனில் இருந்து வெளியே சென்றபோதுதான், தற்செயலாக நிமிர்ந்த ரைட்டர், காரையும், காலியாய் இருந்த பெஞ்ச்சையும் பார்த்தார். அவரது போலீஸ் மூளைக்கு நியூரான்கள் சட்டென்று என்ன நடந்திருக்கும் என யூகித்தது.

வேகமாய் கத்தியபடி ஸ்டேஷனை விட்டு, வெளியே ஓடினார்."யோவ்., அவங்களை கூட்டிட்டு கார்ல போறான்கய்யா.. நிப்பாட்டுங்க அவன்களை., அவன்களை விடாதிங்க.." அவர் சத்தத்தின் வீரியத்தை, உணர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சுதாரித்து கொள்ளும் முன்பாகவே- அந்த சிகப்பு கார் ஸ்டேஷனை விட்டு அறுனூறு மீட்டரை கடந்து மெயின் ரோட்டில் திரும்பி, மறைந்தது.

முருக நத்தம், வேட்டையன் பங்களா.

"இன்ச் பை இன்ச் அலசுங்க.." - என்ற டேவிட்டின் வார்த்தைக்கு ஏற்ப எல்லா இடத்தையும் அலசியும், எந்த தடயமும் சிக்கவில்லை. அப்போதுதான் டேவிட் கவனித்தான். அங்கங்கு சாப்பிட்டு போடப்பட்டு இருந்த காலி பிரியாணி பார்சல்கள். சில கசங்கியும் எறியப்பட்டவைகள். சில அப்படியே இலையுடன் சாப்பிட்டு அங்கங்கே மீதமாய் வைக்கப்பட்டு ஈக்கள் மொய்க்கப்பட்டு கிடந்தன.

டேய் சாப்பிட்டு மிச்சம் போட்ட பார்சல்கள், இலைகளை செக் பண்ணுங்க,"

"அதெல்லாம் எதுக்குடா செக் பண்ணனும்.. அதுல என்ன எவிடென்ஸ் கிடைக்கப்போகுது.." நெல்சன் குழப்பமாய் கேட்டான்.

"சொன்னதை செய்யுங்கடா.." – சொல்லிவிட்டு பரபரப்பாக கிடந்த பார்சல்களை பிரித்து பார்க்க ஆரம்பித்தான். கூடவே எல்லோரும் தேடினர். சடாரென்று 'பிளான்' ஒன்று டேவிட் மனதில் தோன்ற திரும்பி பார்த்தான்.

திவ்யாவை கட்டிப்போட்ட சேர், அதன் முன்பு ஒரு மரப்பெட்டி மீது பிரியாணி பார்சல், பிரித்து வைக்கப்பட்டிருக்க, சாப்பிட்டும், சாப்பிடாமலும் மீதி பிரியாணியின் மீது ஈக்கள் அமர்ந்து கூட்டணி பேசிக்கொண்டு இருந்தன. வேகமாய் அந்த ஸ்டூல் அருகில் சென்றான் டேவிட். இவன் அருகில் வரவும் பிரியாணி ஈக்கள் 'இவ்வ்ய்ங்' என்ற சத்தத்துடன் கலைந்து பறந்தன. பிரியாணியை தள்ளி இலையை ஆராய்ந்தான். இலையில் நகத்தின் கீறலில் ஏதோ எழுதியிருந்தது தெரிந்தது. "டேய்... இங்க வாங்கடா.." டேவிட் சத்தம் கேட்ட மற்ற மூவரும் அவன் அருகில் ஓடிவந்தனர்.

"இங்க பாருங்கடா.. திவ்யாவுக்கு சாப்பிட பிரியாணி கொடுத்து இருக்காங்க.. சாப்பிடுற மாதிரி அவங்களுக்கு போக்கு காட்டிட்டு, ஏதோ எழுதியிருக்கா" (தொடரும்)

E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

Tags:    

Similar News