செய்திகள்

42 ரன்னுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் தில்ஷன்

Published On 2016-08-28 16:50 IST   |   Update On 2016-08-28 16:50:00 IST
இலங்கை அணியின் முன்னணி தொடக்க வீரர் தில்ஷன் 42 ரன்களுடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெற்றார்.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் குணதிலகா, திலகரத்னே தில்ஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தில்ஷனுக்கு இது கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பதால் ரசிகர்கள் அனைவரும் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

இலங்கை அணியின் ஸ்கோர் 6 ரன்னாக இருக்கும்போது குணதிலகா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து குசால் மெண்டிஸ் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

3-வது விக்கெட்டுக்கு தில்ஷன் உடன் ஜோடி சேர்ந்தார் சண்டிமால். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

தனது கடைசி போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தில்ஷன் 42 ரன்கள் எடுத்து ஷம்பா பந்தில் பெய்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். புல்டாசாக வந்த பந்தை தூக்கி அடித்தார். ஆனால் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார். இதனால் 42 ரன்களுடனும் தில்ஷன் ஒருநாள் கிரிக்கெட்டை முடித்துக்கொண்டார்.

அவர் அவுட் ஆனதும் ஆஸ்திரேலியாவின் சில வீரர்கள் கைக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். சண்டிமால் நீண்ட தூரம் தில்ஷனுடன் நடந்து வந்து வழியனுப்பினார். ரசிகர்கள் எழுந்து நின்று பிரியா விடையளித்தனர்.

தில்ஷன் இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடி  22 சதங்கள், 47 அரைசதங்களுடன் 11868 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக அவுட்டாகாமல் 161 ரன்கள் சேர்த்துள்ளார். பந்து வீச்சில் 106 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

Similar News