செய்திகள்

துலீப் கிரிக்கெட்: அகர்வால், புஜாரா, ஜாக்சன் சதத்தால் இந்தியா ப்ளூ 707 ரன்கள் குவிப்பு

Published On 2016-09-06 17:19 IST   |   Update On 2016-09-06 17:19:00 IST
துலீப் கிரிக்கெட்டில் இந்தியா க்ரீன் அணிக்கெதிராக இந்தியா ப்ளூ அணி 707 ரன்கள் குவித்துள்ளது. அகர்வால், புஜாரா, ஜாக்சன் சதம் அடித்து அசத்தினர்.
இந்தியாவின் உள்ளூர் நான்கு நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந்தேதி தொடங்கிய லீக் போட்டி ஒன்றில் இந்தியா ப்ளூ - இந்தியா க்ரீன் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இந்திய ப்ளூ அணியின் கேப்டன் காம்பீர் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர்கள் அகர்வால், காம்பீர், புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

அகர்வால் 161 ரன்களும், புஜரா 166 ரன்களும், காம்பீர் 90 ரன்களும் குவித்தனர். அதன்பின் 7-வது வீரராக களம் இறங்கிய ஜாக்சனும் 105 ரன்கள் குவிக்க, இந்தியா ப்ளூ அணி முதல் இன்னிங்சில் 707 ரன்கள் குவித்தது. இந்தியா க்ரீன் அணி சார்பில் எஸ். கோபால் 5 விக்கெட்டுக்களும், டிண்டா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ரெய்னா தலைமையிலான இந்தியா க்ரீன் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், உத்தப்பா ஆகியோர் களம் இறங்கினார்கள். முரளி விஜய் 6 ரன்கள் எடுத்த நிலையில் கேவி சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். உத்தப்பா 41 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் வந்த சக்சேனா 13 ரன்னும், சௌரப் திவாரி 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தியா க்ரீன் அணி தற்போது நான்கு விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பார்தீவ் பட்டேல் 52 ரன்னுடனும், எஸ். கோபால் 24 ரன்னுடனும் விளையாடி வருகிறார்கள்.

Similar News