செய்திகள்

மைதானத்தில் அத்துமீறும் வீரர்கள் உடனடியாக வெளியேற்றம்: அக்டோபர் 1-ல் இருந்து அமல்

Published On 2017-06-24 16:33 IST   |   Update On 2017-06-24 16:33:00 IST
கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் மைதானத்தில் இருந்து நடுவர்களால் வெளியேற்றப்படுவார்கள் என்ற விதிக்கு ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது.
கால்பந்து போட்டியில் மைதானத்திற்குள் வீரர்கள் எதிரணி வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை கொடுக்கப்படும். சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற வேண்டும். மீதமிருக்கும் நேரத்தில் அந்த அணி 10 வீரர்களுடன்தான் விளையாட முடியும்.

ஆனால், கிரிக்கெட்டில் அப்படியில்லை. அந்த போட்டி முழுவதும் விளையாடிய பின்னர் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும். இதனால் தகராறில் ஈடுபட்ட வீரர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவதில்லை. இதனால் ஸ்லெட்ஜிங் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இதனால் கிரிக்கெட்டிலும் கால்பந்து போட்டி போன்று அத்துமீறும் வீரர்களை மைதானத்தில் இருந்து வெளியே அனுப்ப நடுவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரை செய்தது.


(பழைய படம்)

இந்த பரிந்துரை குறித்து லண்டனில் நடைபெற்ற ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாகக்குழுவில் விவாதிக்கப்பட்டது. அப்போது ஒருமனதாக சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒரு வீரர் மிகவும் மோசமான வகையில் மைதானத்திற்குள் நடந்து கொண்டால் உடனடியாக வெளியேற்றும் அதிகாரம் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விதி அக்டோபர் 1-ல் இருந்து அமலுக்கு வருகிறது.

Similar News