செய்திகள்

2-வது டெஸ்ட்: டவுரிச் - ஹோல்டர் ஜோடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 374 ரன்கள் குவிப்பு

Published On 2017-11-01 06:40 IST   |   Update On 2017-11-01 06:41:00 IST
ஜிம்பாப்வேயுடனான 2-வது டெஸ்டில் டவுரிச் மற்றும் ஹோல்டர் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் குவித்துள்ளது.
ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் புலவாயோ குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் க்ரிமர் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் 109.1 ஓவரில் 326 ரன்னில் ஆல் அவுட் ஆனது. மூர் 52 ரன்னிலும், மசகட்சா 147 ரன்னிலும், சிகந்தர் ரசா 80 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோச் 3 விக்கெட்டும், கேப்ரியல், பிஷூ தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வொயிட்டும், பாவெலும் களமிறங்கினர். பாவெல் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் சீரான இடைவெளியில்
விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து தடுமாறியது. 300 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்த ஜிம்பாப்வே பவுலர்களுக்கு டவுரிச் மற்றும் ஹோல்டர் ஜோடி தாக்குப்பிடித்து விளையாடி  வருகிறது. இருவரும் அரைசதம் கடந்து விளையாடி வருகின்றனர்.

இதை தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்துள்ளது. டவுரிச் 75 ரன்களுடனும், ஹோல்டர் 71 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் சிகந்தர் ரசா 5 விக்கெட் வீழ்த்தினார்.

Similar News