செய்திகள்
கோப்பையுடன் இந்திய அணி

தென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் விராட் கோலி

Published On 2019-10-22 11:49 IST   |   Update On 2019-10-22 11:49:00 IST
டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
ராஞ்சி: 

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில்  முடிந்தது. அதன்பின்னர் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன்  வித்தியாசத்திலும், புனேவில் நடந்த 2-வது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று  தொடரை கைப்பற்றிவிட்டது. 

3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது, தென்  ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ-ஆன் பெற்றது. மீண்டும் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2வது  இன்னிங்சில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  தொடரையும் 3-0 என முழுமையாக கைப்பற்றியது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இப்போட்டியின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.  

தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வெற்றிதான், இந்த அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றியாகும். 

இந்த டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸில் 116.3 ஓவர்கள் ஆடியது, தென் ஆப்பிரிக்கா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம்  104 ஓவர்களை ஆடி ஆல் அவுட் ஆனது.

இந்த டெஸ்டின் கடைசி நாளான இன்று, வெறும் இரண்டு ஓவர்களே வீசப்பட்டன. ஆட்டம் வெறும் 11 நிமிடங்களே நடைபெற்றது. 

சுழற்பந்து வீச்சாளர்களைப் போலவே வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கமும் அதிகமாக இருந்த அரிதான ஒரு தொடர் ஆகும்.

சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா (13 விக்கெட்), ரவிச்சந்திரன் அஸ்வின் (15 விக்கெட்) சேர்ந்து 28 விக்கெட்டுகளும், வேகப்பந்து  வீச்சாளர்கள் முகமது ஷமி (3 டெஸ்ட்களில் 13), உமேஷ் யாதவ் (இரண்டு டெஸ்டில் 11), இஷாந்த் சர்மா (2 டெஸ்டில் 2) ஆகியோர் 26  விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த தொடரின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டுமே ரோஹித் சர்மாதான்.

இந்தியாவில், இந்திய அணி 11 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 5 வெற்றிகளுடன் 240 புள்ளிகள் என்று மற்ற அணிகளைக் காட்டிலும்  வெகுதொலைவில் முதலிடத்தில் உச்சம் பெற்றுள்ளது. 

மறுபுறம், தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  தொடரின், தங்கள் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்றதால்  புள்ளிக்கணக்கை தொடங்க தவறிவிட்டது.

Similar News