ரோகித் சர்மாவுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கும் டெல்லி, லக்னோ
- ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா.
- கடந்த சீசனில் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதால் அணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
இந்திய டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் கேப்டனான ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கடந்த சீசனின்போது திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி சோபிக்கவில்லை. இதற்கிடையே அணியில் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
அத்துடன் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரோகித் சர்மா எதுவும் தெரிவிக்கவில்லை. அதேபோல் அணி நிர்வாகமும் ரோகித் சர்மாவை விடுவிக்கும் எண்ணம் உள்ளது என்பது போன்ற கருத்தை தெரிவிக்கவில்லை.
ஆனால் டெல்லி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் ரோகித் சர்மாவை வாங்க தயாராக இருக்கின்றன. 2025-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தின்போது எவ்வளவு தொகை கொடுத்தாவது அவரை ஏலம் எடுக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான இரு அணிகளும் தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாம்.
ரோகித் சர்மா உறுதிப்படுத்துதலுக்கான இரு அணிகளும் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தலா 100 முதல் 125 கோடி வரை செலவழித்து வீரர்களை ஏலத்தில் எடுக்க பிசிசிஐ அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.