null
ஒருபோதும் சச்சின்- விராட் கோலியை ஒப்பிட மாட்டேன்: சுனில் கவாஸ்கர்
- நான் என்றுமே இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு பேசமாட்டேன்.
- ஏனென்றால் அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் பல மாற்றங்கள் இருக்கின்றது.
சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தன்னுடைய 51-வது சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சச்சினை விட விராட் கோலி தான் சிறந்த வீரர் என பலரும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் இதற்கு ஒரு சில கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு வெவ்வேறு காலத்தில் விளையாடிய வீரர்களை ஒப்பிடுவது தவறு என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் கோலியை சச்சினுடன் ஒப்பிடுவதை தவறு என்று கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் என்றுமே இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு பேசமாட்டேன். ஏனென்றால் அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் பல மாற்றங்கள் இருக்கின்றது. விளையாட்டில் உள்ள விதிகள் மாறி இருக்கிறது. ஆடுகளம் மாறி இருக்கிறது. எதிரணி வீரர்கள் மாறி இருக்கிறார்கள்.
எனவே இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்ப்பது என்பது மிகவும் கடினம். இதை நான் ஒரு பலம் குன்றிய விஷயமாகவே பார்க்கின்றேன். நமது ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும்தான் இரண்டு வெவ்வேறு காலத்தில் விளையாடிய வீரர்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். நீங்கள் என்றாவது ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர்கள் ரிக்கி பாண்டிங்கையும், கிரேக் சேப்பலையும் ஒப்பிட்டு பேசி பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்.
தற்போது விளையாடும் வீரர்களின் திறமையை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். அப்படி இருக்கும் போது நாம் மட்டும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும். எப்போது பார்த்தாலும் இது போல் ஒப்பிட்டு நாம் நேரத்தை செலவிடுகின்றோம்.
என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.