தொடர் தோல்வி எதிரொலி: கேப்டன் பதவியில் இருந்து விலகிய பட்லர்
- நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் அவர் கேப்டனாக செயல்படும் கடைசி போட்டியாகும்.
- இங்கிலாந்தின் அடுத்த கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
லண்டன்:
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது.
அந்த பிரிவிலிருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளின் இடத்திற்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடைந்த தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக (ஒருநாள் + டி20) செயல்பட்டு வந்த பட்லர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் அவர் கேப்டன் பதவி வகிக்கும் கடைசி போட்டி என கூறப்படுகிறது. கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகியதை அடுத்து இங்கிலாந்தின் அடுத்த கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.