சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் விளையாடுவது சந்தேகம்
- பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு தொடை பகுதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் வருகிற 2-ந் தேதி விளையாடவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேச மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.
மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலிருந்து எந்த இரு இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதேசமயம் இந்திய அணி தங்களுடைய கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் வருகிற 2-ந் தேதி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்திருப்பதாகவும், இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவுக்கு தொடை பகுதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் அணியின் பயிற்சி அமர்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் காயத்தால் அவதிப்பட்டு ரோகித் சர்மா முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், நியூசிலாந்து போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அரையிறுதி போட்டியில் விளையாட வைக்க பிசிசிஐ திட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் இந்திய அணியை சுப்மன் கில் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மாவுக்கு பதிலாக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அல்லது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். அதேசமயம் சுப்மன் கில்லுடன் இணைந்து கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.