கிரிக்கெட் (Cricket)

ஓய்வு வேண்டாம்.. தனி ஆளாக பயிற்சியில் ஈடுபட்ட சுப்மன் கில் - வெளியான புது தகவல்

Published On 2025-02-28 14:03 IST   |   Update On 2025-02-28 14:03:00 IST
  • இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
  • அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டது.

இந்த நிலையில், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி கடந்த புதன் கிழமை பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக நேற்றைய தினம் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ஓய்வு நாளில் வீரர்கள் ஓட்டல் அறையில் இருப்பது, வெளியில் செல்வது என பொழுதை கழிக்கலாம். எனினும், இந்திய வீரர் சுப்மன் கில மட்டும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற வீரர்கள் ஓய்வு எடுத்த நிலையில், சுப்மன் கில் மட்டும் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்ததாக கூறப்படுகிறது. சுப்மன் கில் பயிற்சி செய்ய அணியின் பயிற்சியாளர் குழுவில் சிலர் அவருக்கு உதவியதாக தெரிகிறது.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய வீரர் சுப்மன் கில் வங்காளதேசம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 101 ரன்களை குவித்தார். அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் 46 ரன்களை சேர்த்தார். வலுவான நிலையில் காணப்படும் சுப்மன் கில் தனது ஃபார்மை அடுத்தடுத்த போட்டிகளிலும் வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News