கிரிக்கெட் (Cricket)

ரோகித் அதிரடி சதம்.. இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

Published On 2025-02-09 21:48 IST   |   Update On 2025-02-09 21:48:00 IST
  • இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவிப்பு
  • அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிதானமாக விளையாடிய கில் 60 ரங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் சதமடித்தார். 119 ரன்கள் எடுத்தநிலையில் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் ரோகித் அவுட்டானார்.

கோலி 5 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் - ஜடேஜா ஜோடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் 44.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

Tags:    

Similar News