கிரிக்கெட் (Cricket)

இந்தியா இறுதிப்போட்டியில் நுழையுமா? ஆஸ்திரேலியாவுடன் நாளை அரையிறுதியில் பலப்பரீட்சை

Published On 2025-03-03 17:37 IST   |   Update On 2025-03-03 17:37:00 IST
  • 2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
  • இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

துபாய்:

8 நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற இந்த போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது.

இன்று ஓய்வு நாளாகும். முதல் அரை இறுதி ஆட்டம் துபாயில் நாளை (4-ந் தேதி) நடக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி இந்த போட்டி தொடரில் தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. வங்காளதேசத்தையும், பாகிஸ்தானையும் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 44 ரன்னிலும் தோற்கடித்தது. இதனால் நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்தவை என்பதால் இந்திய வீரர்கள் கடுமையாக போராட வேண்டும். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அதே நேரத்தில் ஆடுகள தன்மையை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.

நியூசிலாந்துக்கு எதிராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். துருப்பு சீட்டாக கருதப்படும் அவர் ஆஸ்திரேலியாவுடன் ஆடும் வாய்ப்பு கிடைத்தாலும் தனது மந்திர பந்து வீச்சை வெளிப்படுத்துவார்.

முதல் 3 நிலை பேட்ஸ்மேன்கள் (கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி) முக்கியமான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது அவசியமாகும். ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

2 முறை சாம்பியனான இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்கு முன்பு 2000, 2002, 2013, 2017 ஆகிய ஆண்டுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.

ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் 2 முறை சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியுள்ளது. அந்த அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தானுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஜோஷ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், கேப்டன் ஸ்டீவ் சுமித் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பென் துவார்சுயிஸ், ஆடம் ஜம்பா போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

லாகூரில் 5-ந் தேதி நடைபெறும் 2-வது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Tags:    

Similar News