நீண்ட காலம் உங்களை வழிநடத்துவார்.. ஆர்.சி.பி. புது கேப்டனை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
- புதிய கேப்டனுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடங்கும் முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியின் அன்பாக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய கேப்டன், ரஜத் பட்டிதாருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சிறப்பு கோரிக்கை விடுத்தார். மேலும், ரசிகர்களும் புதிய கேப்டனுக்கு தங்களது அன்பை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து பேசிய விராட் கோலி, "இவர் (ரஜத் பட்டிதார்) உங்களை நீண்ட காலம் வழிநடத்துவார். அவருக்கு அன்பை கொடுங்கள், அவர் மிகத் திறமையானவர். அவர் பிரான்சைஸ்-க்கு நன்மை செய்து. ஐ.பி.எல். தொடரில் அணியை முன்னோக்கி அழைத்து செல்வார். நல்ல தலைவராக உருவெடுப்பதற்கு அவரிடம் எல்லா திறமையும் உள்ளது," என்று தெரிவித்தார்.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாப் டூ பிளெசிஸ்-க்கு மாற்றாக ஆர்.சி.பி.-யின் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார் 2021-ம் ஆண்டு முதல் ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வருகிறார்.