கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்து பந்து வீச்சாளரை மோதிய விவகாரம்- குஷ்தில் ஷாவுக்கு அபராதம் விதித்த ஐசிசி

Published On 2025-03-17 21:27 IST   |   Update On 2025-03-17 21:27:00 IST
  • முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளரை வேண்டுமென்றே மோதியுள்ளார்.
  • குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், போட்டி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஸகாரி ஃபால்க்ஸை வேண்டுமென்றே மோதியதாக குஷ்தில் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை கள நடுவர்களும் உறுதிசெய்தனர்.

இது ஐசிசி விதிகளுக்கு எதிரானது என்பதால், குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், மூன்று கரும்புள்ளிகளையும் அபராதமாக விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோல் விதிமுறையை மீறும் வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இரண்டாம் தர குற்றங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 முதல் 100 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குஷ்தில் ஷா கடந்த 24 மாதங்களில் செய்த முதல் குற்றம் இது என்பதால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News