கிரிக்கெட் (Cricket)

ரிஸ்வான், சல்மான் ஆகா சதம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பைனலில் நுழைந்த பாகிஸ்தான்

Published On 2025-02-12 22:49 IST   |   Update On 2025-02-12 22:51:00 IST
  • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
  • அந்த அணியின் ஹென்றிச் கிளாசன் அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார்.

கராச்சி:

நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.

இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் கராச்சியில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் 23 ரன்னும், சவுத் ஷகீல் 15 ரன்னும், பகர் சமான் 41 ரன்னும் எடுத்தனர்.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் முகமது ரிஸ்வானுடன், ஆகா சல்மான் இணைந்தார். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.

ஆகா சல்மான் 134 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 260 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ரிஸ்வான் 122 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.

Tags:    

Similar News