2வது ஒருநாள் போட்டியில் அதிரடி சதம்.. கெயிலின் சாதனையை முறியடித்த ரோகித்
- இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவிப்பு.
- அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் ரோகித் 7 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி, ரோகித் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
301 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 331 சிக்ஸர்களை அடித்துள்ளார். 267 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் இதுவரை 337* சிக்ஸர்களை விளாசியுள்ளார். இப்பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.