லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்
- முதலில் பேட் செய்த சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்தது.
- கோனார்க் அணியும் 20 ஓவரில் 164 ரன்கள் எடுக்க, ஆட்டம் சமனில் முடிந்தது.
ஸ்ரீநகர்:
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டிக்கு கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியும், சதர்ன் சூப்பர் ஸ்டார் அணியும் தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.
முன்னாள் ஜிம்பாப்வே வீரர் மசாகசா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 58 பந்தில் 83 ரன்கள் குவித்தார்.
கோனார்க் அணி சார்பில் முன்னாள் இலங்கை வீரர் தில்ஷன் முனாவீரா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி களமிறங்கியது. முன்னாள் இந்திய வீரரான யூசுப் பதான் சூறாவளியாக சுழன்றடித்தார். அவர் 38 பந்தில் 85 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கோனார்க் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுக்க, ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் ஆடிய கோனார்க் அணி ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய சதர்ன் சூப்பர் ஸ்டார் அணி 5 பந்தில் 14 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
மசாகசா ஆட்டநாயகன் விருதையும், மார்டின் குப்தில் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.