தமிழக வீராங்கனை கமாலினி, வீரர் சுப்ரமணிக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடை பெற்றன.
- இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடை பெற்றன.
இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த கமாலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு அரைச் சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கமாலினியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அதே போல், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள், ஜனவரி 13 முதல் ஜனவரி 19-ந்தேதி வரை நடைபெற்றன.
இப்போட்டிகளில் தமிழ் நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி அபாரமாக விளையாடியதற்காக "சிறந்த அட்டாக்கர் விருதை" வென்றார். இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோ-கோ உலகக் கோப்பையை வென்றது. இந்த போட்டிகளில் தமிழக வீரர் வி.சுப்ரமணியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கமாலினியின் இந்தச் சாதனையைப் போற்றிப் பாராட்டும் வகையில், பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று, தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையிலும் கமாலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி போல மேலும் பல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றுத் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையில், அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.