இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 414 ரன்கள் குவிப்பு
- ஸ்மித் (131), அலெக்ஸ் கேரி (156) சதம் விளாசல்.
- இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட் சாய்த்தார்.
இலங்கை- ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று முன்தினம் காலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 257 ரன்கள் எடுத்து ஆலஅவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், மேத்யூ குனேமான், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித், அலெக்ஸ் கேரி அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.
நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்திருந்தது. ஸ்மித் 120 ரன்களுடனம், கேரி 139 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் 131 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி 156 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள் மளமளவென சரிய 414 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான நிஷாங்கா 8 ரன்னிலும், கருணாரத்னே 14 ரன்னிலும், சண்டிமல் 12 ரன்னிலும் வெளியேறினார்.
ஆனால் மேத்யூஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருடன் குசால் மெண்டிஸ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. மேத்யூஸ் 72 ரன்களுடனும், மெண்டிஸ் 35 ரன்களுடனும் விளையாடி வருகிறது.