செய்திகள்

மதுரை வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: பழனி கோவிலுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு

Published On 2016-06-07 10:48 IST   |   Update On 2016-06-07 10:48:00 IST
மதுரை வெடிகுண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக பழனி கோவிலுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பழனி:

மதுரை வைகை ஆற்று கரையில் ஏ.வி.மேம்பாலம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வீசி சென்றனர். இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மற்றும் பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக பக்தர்கள் தினசரி வருகை தரும் பழனி முருகன் கோவிலுக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பழனி படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் ஆகிய பகுதிகளில் மெட்டல் டிடக்டர் மற்றும் டோர் டிடக்டர் மூலம் பலத்த சோதனை செய்தபிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் மலைக்கோவிலில் சுழல் காமிரா மூலம் கோவிலுக்கு வரும் அனைத்து நபர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது.

தரங்க ரதம் உள்ள கோபுர பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களின் உடமைகளும் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் தொடர் ரோந்து பணி செய்யப்பட்டுள்ளதோடு சீருடை அணியாத போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஸ் நிலையம், அடிவாரம், ரதவீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நகருக்கு வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

Similar News