செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி வகுப்பறையில் தூங்கிய தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்

Published On 2016-07-23 08:13 IST   |   Update On 2016-07-23 08:13:00 IST
பள்ளியில் மாணவர்கள் வராத நேரத்தில், தலைமை ஆசிரியர் ராமராஜ் வகுப்பறையை பூட்டிக்கொண்டு தூங்குவதாக புகார் எழுந்தது. தலைமை ஆசிரியர் ராமராஜை பணி இடைநீக்கம் செய்து தொடக்க கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஆலயகவுண்டன்பட்டியில் 25 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படிப்பதாக வருகை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், அந்த மாணவர்களும் பள்ளிக்கு வருவதில்லை என்று தெரிகிறது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் ராமராஜ். பள்ளியில் மாணவர் சேர்க்கை இல்லாததால், உதவி ஆசிரியராக இருந்தவர் மற்றொரு பள்ளிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். பள்ளியில் மாணவர்கள் வராத நேரத்தில், தலைமை ஆசிரியர் ராமராஜ் வகுப்பறையை பூட்டிக்கொண்டு தூங்குவதாக புகார் எழுந்தது.

இது தமிழக அரசின் கவனத்துக்கு சென்றது. இதைத் தொடர்ந்து, அந்த தலைமை ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சகாயசெல்வி விசாரணை நடத்தி, அறிக்கையை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக்கு அனுப்பினார்.

அதன்பேரில், தலைமை ஆசிரியர் ராமராஜை பணி இடைநீக்கம் செய்து தொடக்க கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், ‘பள்ளி வகுப்பறையில் வேலை நேரத்தில் தூங்குவது விதிமுறைகளுக்கு எதிரானது. இதனால் தலைமை ஆசிரியர் ராமராஜ் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Similar News