செய்திகள்
தந்தைக்கு உதவியாக கிழிந்த சாக்கு தைக்கும் பணியில் ஈடுபட்ட மாணவி ரோஜா

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் படிக்க முடியாமல் தவிக்கும் மாணவி: முதல்-அமைச்சரிடம் உதவி கேட்டு மனு

Published On 2016-07-23 15:39 IST   |   Update On 2016-07-23 15:39:00 IST
மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் ஏழ்மையின் காரணமாக வருடாந்திர கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மாணவியின் ரோஜா குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
ஆட்டையாம்பட்டி:

சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி பனமரத்துப்பட்டி திருவள்ளுவர் வீதியை சேர்ந்த கிழிந்த சாக்கு வியாபாரம் செய்து வரும் சங்கர்-திலகவதி தம்பதியினரின் மூத்த மகள் ரோஜா.

இவருக்கு திருவண்ணாமலை அரசு மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பயில மெடிக்கல் சீட் கிடைத்து உள்ளது. மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் ஏழ்மையின் காரணமாக வருடாந்திர கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மாணவியின் ரோஜா குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

பனமரத்துப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2014-ம் கல்வி ஆண்டில் ரோஜா 10-ம் வகுப்பு பயின்று 493 மதிப்பெண்களுடன் மாவட்டத்தில் 2-ம் இடத்தில் தேர்ச்சி பெற்றார்.

இதனால் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தலைசிறந்த தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயில வருடந்தோறும் தலா ரூ.14 ஆயிரம் கல்வித்தொகையுடன் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்து பயின்றார்.

பிளஸ்-2வில் 1152 மதிப்பெண்கள் பெற்றார். கட்-ஆப் மதிப்பெண்கள் 197 மதிப்பெண்கள் ஆகும்.

இந்த நிலையில் மருத்துவ படிப்பிற்கு சேர அவர் விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்தது. இதற்கான அட்மி‌ஷன் தொகை ரூ.13 ஆயிரத்து 600-யை செலுத்தி உள்ளார்.

மளிகை கடைகளில் கிழிந்த சாக்குகளை வாங்கி அதனை தைத்து விற்பனை செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் மாணவியின் தந்தை சங்கருக்கு ரோஜாவின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ரூ.1லட்சத்து 10 ஆயிரத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.

கடந்த 20 வருடங்களாக இத்தொழிலை செய்துவரும் சங்கருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் கவுசிகாதேவி என்ற இளைய மகளும், 4-ம் வகுப்பு படிக்கும் கவுதம் என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தை காப்பாற்றவே போதிய வருமானம் இல்லாத நிலையில் மகளின் படிப்புக்கு பணம் கட்ட முடியாத நிலையில் உள்ளார்.

மருத்துவ படிப்புக்கு தமிழக முதல்வர் நிச்சயமாக உதவுவார் என்று மாணவியின் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. மனோன்மணி ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

Similar News