செய்திகள்

கரூரில் கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்டுகளுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்: கோர்ட்டு உத்தரவு

Published On 2016-07-26 13:29 IST   |   Update On 2016-07-26 13:29:00 IST
கரூரில் கைதான பெண் மாவோயிஸ்டுகளை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கரூர்:

சென்னையை அடுத்த எருமையூரில் பதுங்கியிருந்த மதுரையை சேர்ந்த ரீனா ஜாய்ஸ் மேரி (32) என்ற மாவோயிஸ்ட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 2002-ம் ஆண்டு ஊத்தங்கரை போலீஸ் நிலையம் மீதான தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள கலாவும், சந்திராவும் கரூரில் உள்ள வெங்கமேடு கணக்குபிள்ளை தெருவில் வசித்து வருவது தெரிய வந்தது.

இதையடுத்து திருச்சி கியூ பிராஞ்ச் போலீசார் சந்திரா, கலா ஆகிய 2பேரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கரூர் சுங்ககேட் சத்தியமூர்த்தி நகரில் உள்ள கியூ பிராஞ்ச் போலீசார் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இருவரும் கரூர் குற்றவியல் கோர்ட்டு எண்-1ல் நீதிபதி மோகனவள்ளி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் வருகிற ஆகஸ்ட் 8-ந்தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிராஞ்ச் போலீசார் கரூர் குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மோகனவள்ளி, மாவோயிஸ்டுகள் கலா, சந்திரா ஆகிய 2பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Similar News