செய்திகள்
தேனீக்கள் கொட்டியதால் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி.

தகன மேடையில் தேனீக்கள் கொட்டியதால் பிணத்தை போட்டுவிட்டு உறவினர்கள் ஓட்டம்

Published On 2016-08-28 15:34 IST   |   Update On 2016-08-28 15:34:00 IST
வாணியம்பாடி அருகே தேனீக்கள் கொட்டியதால் தகன மேடையில் பிணத்தை போட்டுவிட்டு உறவினர்கள் ஓட்டம் பிடித்தனர். 20 பேர் காயம் அடைந்தனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த லாலாஏரி மூலைகொல்லி பகுதியை சேர்ந்த விவசாயி மாணிக்கம் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது உடலை தகனம் செய்ய உறவினர்கள் லாலாஏரி பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு தகன மேடையில் உடலை வைத்து இறுதி சடங்கு செய்து கொண்டிருந்த போது, தகன மேடை மேல்பகுதியில் இருந்த தேன் கூண்டில் இருந்து தேனீக்கள் திடீரென கலைந்தன.

அந்த தேனீக்கள் அங்கிருந்தவர்களை விரட்டி, விரட்டி கொட்டின. இதனால் உறவினர்கள் உடலை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

வாணியம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது தீயணைப்பு வீரர்கள் கேசவன், பிரசாந்த் ஆகியோரையும் தேனீக்கள் கொட்டியது. படுகாயம் அடைந்த அனைவரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தேனீக்களை அழித்தனர். பின்னர் தகன மேடையில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்து உறவினர்கள் எரித்தனர்.

இதேபோல் வாணியம்பாடியை அடுத்த விஜிலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து, காட்டில் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது தேனீக்கள் கொட்டியுள்ளது.

அவரை காப்பாற்ற சென்ற அவரது மகன் மணியையும் தேனீக்கள் கொட்டியது. காயம் அடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

Similar News