செய்திகள்

சங்கரன்கோவில் அருகே விபத்து: நின்ற லாரி மீது கார் மோதி பனியன் கம்பெனி ஊழியர் பலி

Published On 2016-10-03 11:16 IST   |   Update On 2016-10-03 11:16:00 IST
சங்கரன்கோவில் அருகே இன்று காலை சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பனியன் கம்பெனி ஊழியர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது36). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கண்ணன், தனது அண்ணன் ராஜ் (எ) ராமசாமி (40), அவரது மகள் ஹேமா (10) மற்றும் குடும்பத்தினர்களுடன் நேற்று நள்ளிரவில் திருப்பூரில் இருந்து சுரண்டைக்கு நண்பரின் காரில் புறப்பட்டு வந்தார். காரை ராஜ் என்கிற ராமசாமி ஓட்டி வந்தார்.

அவர்களது கார், இன்று காலை 6 மணி அளவில் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் உள்ள வாடிக்கோட்டை என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கர வேகத்தில் கார் மோதியது.

இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரின் இடதுபுற முன்பக்க சீட்டில் அமர்ந்து பயணம் செய்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரை ஓட்டி வந்த ராமசாமி, அவரது மகள் ஹேமா உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த 4 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News