செய்திகள்

காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற புதுமாப்பிள்ளை கைது

Published On 2016-11-21 20:14 IST   |   Update On 2016-11-21 20:14:00 IST
போளூர் அருகே காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

போளூர்:

போளூரை அடுத்த சேத்துப்பட்டு அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகள் தாட்சாயினி (வயது 23), காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் சேத்துப்பட்டை சேர்ந்த விவேக் (27) என்பவரும் காதலித்து வந்தனர். விவேக் அந்த பகுதியில் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் விவேக், தாட்சாயினியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதில் அவர் கர்ப்பம் ஆனார். இதை அறிந்த விவேக் ‘கர்ப்பத்தை கலைத்து விடு, சில மாதங்களுக்கு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று தாட்சாயினிடம் கூறி உள்ளார். அதனை நம்பிய தாட்சாயினி கருவை கலைத்துள்ளார். அதன் பின்னரும் விவேக் திருமண ஆசைக்காட்டி பலமுறை தாட்சாயினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் விவேக்கிற்கும், காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த பேரமனூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது இருவீட்டாரும் திருமணத்தை நவம்பர் 20-ந் தேதி (அதாவது நேற்று) வைத்துக்கொள்வது என முடிவு எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விவேக் குடும்பத்தினர் திருமண அழைப்பிதழை உறவினர் மற்றும் நெருங்கியவர்களுக்கு கொடுத்துள்ளனர்.

இதனை அறிந்த தாட்சாயினி அதிர்ச்சி அடைந்தார். விவேக் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால் மனம் உடைந்த தாட்சாயினி வி‌ஷத்தை குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் வீட்டிலேயே மயங்கி கிடந்தார்.

இதைக்கண்ட அவரது பெற்றோர், மகளை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் தாட்சாயினி குணமடைந்தார். வி‌ஷம் குடித்ததற்கான காரணம் குறித்து பெற்றோர் கேட்டபோது, விவேக்கிடம் உள்ள தொடர்பு பற்றியும், அவருக்கு திருமணம் நடக்க இருப்பது குறித்தும் தாட்சாயினி கூறினார்.

இதுகுறித்து தாட்சாயினி போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் தாட்சாயினி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை கேள்விப்பட்ட விவேக் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போளூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல பஸ் ஏற காத்திருந்த விவேக்கை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு விவேக் கைது செய்யப்பட்டதால் நேற்று நடைபெற இருந்த திருமணம் நின்று போனது. இதனை அறியாமல் திருமண நிகழ்ச்சிக்காக வெளியூரில் இருந்து போளூருக்கு வந்த உறவினர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றார்கள்.

கைது செய்யப்பட்ட மணமகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Similar News