செய்திகள்

தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தில் 2 நாளில் வெப்பம் குறையும்

Published On 2017-05-31 13:36 IST   |   Update On 2017-05-31 13:36:00 IST
தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தில் 2 நாட்களில் வெயில் குறைந்து வெப்பம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி நிறைவடைந்தது.

அக்னி வெயில் முடிவடைந்த பின்னரும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வெயில் சுட்டெ ரிக்கிறது. பகலில் அனல் காற்று வீசுகிறது. இதனால் சாலையில் பயணிப்பவர்கள் மிகுந்த சிரமத்துக் குள்ளாகிறார்கள். இரவிலும் புழுக்கமாகவே காணப்படுகிறது.

இன்றும் வெயில் கொளுத்தியதால் அதிக வெப்பம் காணப்பட்டது. இன்று 100 டிகிரியை வெயில் தாண்டியதால் அனல் காற்று வீசியது.

இந்த நிலையில் தென் மேற்கு பருவ மழை 3 நாளில் தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது. அங்கு தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் ஓரிரு நாளில் தென் மேற்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் இன்னும் 2 நாட்களில் வெயில் குறைந்து வெப்பம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News