செய்திகள்

கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை அடித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

Published On 2017-05-31 15:41 IST   |   Update On 2017-05-31 20:11:00 IST
கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை அடித்து கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு:

ஈரோடு திண்டல் கார பாறை, பங்காருநகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பெருமாயி (45).

ராமசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இது பெருமாயிக்கு தெரியவந்தது. எனவே கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி கண்டித்தார்.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமசாமி சவுக்கு கட்டையால் பெருமாயி தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பெருமாயி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி பெருமாயி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து ஈரோடு தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு வழங்கினார்.

மனைவியை கொலை செய்த ராமசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் (பொறுப்பு) நாகரத்தினம் ஆஜரானார்.

Similar News