செய்திகள்

வெள்ளவேடு அருகே கொலையுண்ட பெண் சென்னையை சேர்ந்தவர்: 3 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2018-02-06 15:21 IST   |   Update On 2018-02-06 15:21:00 IST
வெள்ளவேடு அருகே கொலையுண்ட பெண் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. கொலை சம்பவம் தொடர்பாக கட்டிட தொழிலாளர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

வெள்ளவேடு அருகே உள்ள திருமணம் கிராமத்தில் நெமிலிச்சேரி-வண்டலூர் சாலையோரம் கடந்த 2-ம் தேதி, 35 வயது மதிக்கத்தக்க பெண் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.

வெள்ளவேடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். அவர் யார் என்பது தெரியாததால் கொலையாளிகளை நெருங்குவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மாயமானவர்களின் விவரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கொலையுண்ட பெண் சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி சாந்தலட்சுமி (வயது 38) என்பது தெரிந்தது.

அவரது உடலை கணவர் முனுசாமி அடையாளம் காட்டினார்.

கொலையுண்ட சாந்த லட்சுமி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2-ந் தேதி பட்டறைவாக்கத்தில் நடந்த கட்டிட தொழிலுக்கு சென்று உள்ளார். அதன் பின்னர் அவர் மாயமாகி இருக்கிறர். செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே சாந்தலட்சுமி வெள்ளவேடு அருகே கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். எனவே பணிக்கு சென்ற போது சக தொழிலாளர்கள் அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக கட்டிட தொழிலாளர்கள் 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதன் பின்னரே சாந்த லட்சுமி கொலைக்கான காரணம் என்ன? எப்படி கொலைசெய்யப்பட்டார்? என்பது முழுமையாக தெரிய வரும். #tamilnews

Similar News