செய்திகள்

நீட் விளையாட்டை மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடலாமா ?- தலையங்கம்

Published On 2018-02-06 15:48 IST   |   Update On 2018-02-06 15:48:00 IST
நீட் தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் போராட்டமும் தீவிரமாவது மாணவர்களிடையே சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் வழி வகுத்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சென்னை:

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்துக்கு உயிர் கொடுத்து மீண்டும் ஒரு யுத்தத்துக்கு தயாராகி விட்டன அரசியல் கட்சிகள்.

பொதுவாகவே எந்த ஒரு பிரச்சனைக்கும் ஆதரவும் இருக்கும். எதிர்ப்பும் இருக்கும். இதில் எது அதிகமாக இருக்குமோ அதை அடிப்படையாக கொண்டு அந்த பிரச்சனை கையாளப்படும். அதே போல் தான் நீட்தேர்வும்! இதற்கும் ஆதரவும் உண்டு. எதிர்ப்பும் உண்டு.

இந்தியா முழுவதும் நீட்தேர்வை கொண்டு வந்தாலும் தமிழகத்துக்கு மட்டும் விதிவிலக்கு தேவை என்பது நீட்தேர்வு எதிர்ப்பாளர்களின் கோரிக்கை.

ஏற்கனவே கடந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா? கிடையாதா? என்று ஏற்பட்ட குழப்பத்தால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

மருத்துவ படிப்பு என்பது பல மாணவர்களின் கனவு என்பது மட்டுமல்ல. மனித உயிர்களுக்கு உயர்வு கொடுக்கும் படிப்பு என்பதால் மிகச்சிறந்த டாக்டர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் எல்லோரது எதிர்பார்ப்பும்.

அதற்கு ஏற்றவகையில் மாணவர்களை தயார்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. உடற்கூறுகளை ஆராயும் மருத்துவ மாணவர்கள் ஒவ்வொரு அங்கத்தையும் தனி தனியாக ஆய்ந்து நிபுணத்துவம் பெறும் வகையில் தற்காலத்தில் நவீன மருத்துவம் விரிந்து, வளர்ந்து வருகிறது. இரு சக்கர வாகனத்தின் பாகங்களை தனித்தனியாக பிரித்து ஒன்று சேர்ப்பது போல் மனித உடல் பாகங்களையும் ஒன்று சேர்க்கும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்து விட்டது.

இதை நினைத்து ஆச்சரியப்படுவதைவிட இவ்வளவு திறமைகள் மனிதனுக்குள் மறைந்து கிடக்கிறது என்பதை நினைத்து பெருமைப்படவேண்டும். எனவே மருத்துவர்களாக வருபவர்கள் தலை சிறந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் பலருக்கு தகுதியும், திறமையும், ஆசையும் இருந்தாலும் அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம். அவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்க தேவையான வழி முறைகளை ஆராயலாம்.

ஆனால் நீட் தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் போராட்டமும் தீவிரமாவது மாணவர்களிடையே சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் வழி வகுத்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கடைசி வரை தொடர்ந்த குழப்பத்தால் தான் பலர் நீட் தேர்வை சந்திக்க முடியாமல் போனது.

இந்த ஆண்டு நீட் தேர்வை தவிர்க்க முடியாது என்று கல்வித்துறை அமைச்சர் சொல்லி விட்டார். 300-க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் அமைத்து நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்போவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஆக அரசு நீட்தேர்வு வரும் என்கிறது. ஆனால் எதிர் கட்சிகள் விட மாட்டோம் என்று வரிந்து கட்டுகிறது. நடக்கும் இந்த களேபரத்தால் மாணவர்கள் மத்தியில் நீட் வருமா? வராதா? என்ற குழப்பம் உருவாக வாய்ப்பு உண்டு.

அகில இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் தமிழர்கள் தான் ஒரு காலத்தில் கோலோச்சினார்கள். இன்று அந்த நிலை இல்லை என்பதும் வேதனைக்குரியது. நாம் விட்ட இடத்தை கேரளாவும், ஆந்திராவும் தொட்டு இருப்பதாக கல்வியாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இதுவும் சிந்திக்க வேண்டிய வி‌ஷயம்.

கடந்த ஆண்டே நீட் தேர்வு தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. பிளஸ்-2 தேர்வில் சாதித்த மாணவி அனிதா நீட் தேர்வால் துவண்டு உயிரை மாய்த்த சோகமும் நடந்தது.

அதன் பிறகாவது விழித்தோமா? இல்லவே இல்லை. இப்போது தான் எழுந்து இருக்கிறோம் நீட் வேண்டாம் என்று விவாதம் நடத்துவதற்காக!

ஒரு ஆண்டாக என்ன செய்தோம்? கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான பணிகள் ஏதாவது நடைபெற்று இருக்கிறதா?

மற்ற மாநிலங்களுடன் போட்டி போடும் அளவுக்கு கல்வித்தரம் உயரும் வரை போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள விரும்பும் மாணவர்களை தேர்வு செய்து பள்ளிகளிலேயே சிறப்பு வகுப்புகளை நடத்தலாம். அதற்கு ஆசிரியர்களையும் தயார்படுத்த வேண்டும். இல்லா விட்டால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

கடந்த முறை மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வுக்கு கிராம புறங்களை தேர்வு செய்ததில் குழப்பம் ஏற்பட்டது. அதையாவது இந்த ஆண்டு இதுவரை நிவர்த்தி செய்தோமா?

குறைபாடுகள் நிறைந்து கிடக்கிறது. அதை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம். பொதுவாகவே எந்த ஒரு திட்டத்தையும் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒன்றாக அமர்ந்து பேசி, சாதக-பாதகங்களை அலசி பார்க்கும் நிலை இல்லை. ஆளும் கட்சி கொண்டு வரும் திட்டங்களை எதிர் கட்சிகள் எதிர்ப்பதும், எதிர்கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனைகளை ஆளுங்கட்சி ஏற்காது என்பதும் எழுதப்படாத விதியாக அமைந்து விட்டது.

இதனால் எந்த திட்டத்தின் சாதக பாதகமும், மக்களுக்கும் புரிவதில்லை. ‘நீட்’-ஐ பொறுத்தவரை குறைகளை போக்க அரசியல் கட்சிகள் மத்திய அரசோடு மோதட்டும், கோர்ட்டில் வாதாடட்டும். எக்காரணத்தை கொண்டும் மாணவர்கள் குழம்பி விடக்கூடாது. எதையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். #Tamilnews

Similar News