செய்திகள்

தவறான சிகிச்சையால் நோயாளிகள் பலி- டாக்டர்கள் 3 பேர் மருத்துவம் பார்க்க தடை

Published On 2018-03-01 16:04 IST   |   Update On 2018-03-01 16:04:00 IST
தவறான சிகிச்சையால் நோயாளிகள் இறந்தது தொடர்பாக 3 டாக்டர்கள் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை:

தவறான சிகிச்சையால் நோயாளிகள் இறந்தது தொடர்பாக 3 டாக்டர்கள் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் ஒருவருக்கு நுங்கம்பாக்கத்தில் புதிதாக தலையில் முடியை பதிவு செய்யும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மறு நாள் அவர் திடீரென்று இறந்து விட்டார்.

டாக்டர்களின் தவறான சிகிச்சையால் அவர் இறந்து விட்டதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி இதுபற்றி விசாரணை நடத்தியது.

இதில் எம்.பி.பி.எஸ். முடித்த டாக்டர் ஹரிபிரசாத் கஸ்தூரி இந்த சிகிச்சையை மேற்கொண்டதும், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் ஆர்தர் வினீத், சூர்யகுமார் சிகிச்சைக்கு உதவியதும் தெரிய வந்தது.

அவர்கள் இருவரும் மருத்துவ நடைமுறையை மீறி தவறான சிகிச்சை அளித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதேபோல் கோவையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஜெய சுதா மனோகரன் மீது தனது தந்தையை கொல்ல முயன்றதாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் சென்னையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தனது 82 வயது தந்தையின் கைரேகையை பெறுவதற்காக மருத்துவ கருவியின் டியூப்பை அகற்றி கொல்ல முயன்றாக குற்றம் சாட்டப்பட்டது.

2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. அவர் டியூப்பை உருவுவது கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் 2 மாதங்கள் கழித்து அவரது தந்தை இறந்து விட்டார். இது தொடர்பாக பெண் டாக்டர் மீது அவரது சகோதரர் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த 3 டாக்டர்கள் மீதான புகார்கள் பற்றி மருத்துவ கவுன்சில் கூடி விசாரணை நடத்தியது. ஓராண்டுக்குப் பிறகு 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 3 டாக்டர்களின் பெயர்கள் மருத்துவர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. டாக்டர் ஜெயசுதாவும் டாக்டர் வினீத் சூரியகுமாரும் ஒரு ஆண்டுக்கு டாக்டராக பணிபுரிய தடை விதிக்கப்பட்டது. டாக்டர் ஹரி பிரசாத் கஸ்தூரிக்கு 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கடந்த சில மாதங்களில் டாக்டர்கள் மீது சிசுவில் பாலினம் தொடர்பாக கண்டு பிடித்து தெரிவித்தல், பாலினம் தொடர்பான கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட 170 புகார்கள் மருத்துவ கவுன்சிலுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மீதும் மருத்துவ கவுன்சில் விசாரணை நடத்தி வருகிறது.

Similar News